Translate

Monday, 6 August 2012

ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்


ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்

ஐந்தாவது நாளாக லுட்சர்ன் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆலயத்தில் சிறப்புப் பூசையொன்றைச் செய்து ஐந்தாவது நாள் பயணம் தொடங்கியது.

ஆலயத்தின் குருக்கள் சசிதர சர்மா சிறப்புப் பூசையைச் செய்ததுடன், வைகுந்தனிற்கு மாலை அணிவித்து மதிப்பளித்தார்.

ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது நாள் தொடக்க நிகழ்வு சிறப்புற நடந்தது.

லுட்சர்ன் துர்க்கையம்மன் ஆலயத்தில் தற்பொழுது வருடாந்த அலங்காரத் திருவிழா சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் வைகுந்தனின் முயற்சிக்கு மதிப்பளித்து சிறப்புப் பூசையைச் செய்ததுடன். கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் கையொப்பம் இடும் பணியைத் திருவிழாக் காலத்தில் செய்து தருவதாகவும் ஆலயப் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

ஐந்தாவது நாள் உயரமான அல்ப்ஸ் மலைத் தொடர்களைக் கடக்க வேண்டிய நிலையில் தொடங்கப்பட்ட விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். ஆர்த்கோல்டாவ் ஊடாக சுவீற்ஸ் மாநிலத்தைச் சென்றடைந்து அங்கிருந்து மாலை ஏழு மணியளவில் ஊரி மாநிலத்தைச் சென்றடைந்தது.

மலைத் தொடர்களைக் கடந்து செல்ல வேண்டிய நிலையால் ஏற்கனவே தெரிவித்திருந்த பயண ஒழுங்கில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு ஆறாவது நாள் ஊரி மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து கிளாறவுஸ் மாநிலத்திற்குச் சென்று அங்கிருந்து 07.08.2012 அன்று முற்பகல் 10.30 க்கு செங்காளன் மாநிலத்தை நோக்கிச் செல்லவுள்ளது.

கிளாறவுஸ் மாநிலத்தில் தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்ப நிகழ்வு இடம் பெறும். ஆரம்பித்து வைப்பதற்காக சுவிஸ் நாட்டவரான ஈழத்தமிழர் மீது பற்றுமிக்க பேர்னாட் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரித்தானியாவில் உணவைப் புறக்கணித்து தன்னை வருத்தித் தமிழினத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவித்தும், சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழரை தற்போதநிலையில் திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கை உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டே ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் தொடர்கின்றது.

11.08.2012 அன்று சுவிஸ் தமிழர் இல்லத்தால் நடத்தப்படும் தமிழீழக் கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நாள் அன்று வின்ரத்தூரில் நிறைவடையவுள்ள விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் செங்காளன், துர்க்கா, ஆர்காவ், சூரிச், அப்பென்சல் போன்ற பல மாநிலங்கள் ஊடாகச் செல்லவுள்ளது.

No comments:

Post a Comment