பேரழிவுக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை
தேசியப் பேரிடர் பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூர் கலைஞர் நகரில் 12.01.2012 அன்று கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், பா.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
“தானே“ புயல் வரும் என்று இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் கொண்டிருந்த போதும், அதற்குரிய தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் வழக்கமாக மக்களைத் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றும் பணிகளை மட்டுமே தமிழக அரசு செய்து வந்தது. மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரை வேகத்தில் புயல் காற்று கரையைக் கடக்கும் என்று தெரிந்தும் மின்சாரத்திற்குரிய ஜெனரேட்டர்கள், குடிநீர் வழங்க வாகன ஏற்பாடுகள் போன்றவற்றை உரியவாறு முன்னெச்சரிக்கையுடன் செய்து வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பேரிழப்பு நிகழ்ந்துவிட்ட நிலையில் இந்திய அரசு தமிழக அரசிற்கு இராணுவ உதவி செய்ய முன்வந்திருக்க வேண்டும்.
முந்திரி, பலா, தென்னை போன்ற பலன்தரும் மரங்கள் அடியோடு வீழ்ந்துவிட்டன. வீடுகள் தகர்ந்துவிட்டன. மின்இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் குடிநீருக்குக் கூட வழியில்லாமல் போய்விட்டது. குளம், கிணறு, அடிகுழாய் போன்றவை அனைத்தும் ஏற்கெனவே அழிந்து போய் நிலத்தடி நீரை மின்சார உதவியுடன் எடுப்பது தவிர மாற்றுஏற்பாடில்லாத அம்மக்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் தண்ணீர் இல்லாமல் பலநாள் தவியாய்த் தவித்தனர். போக்குவரத்துச் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசின் துயர்துடைப்புப் பணிகள் முழுமையாக இழப்புகளை ஈடு செய்யப் போதாது. இந்திய அரசு தேசியப் பேரிடர் பகுதிகளாகக் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை அறிவித்து முழு இழப்பீடு வழங்க வேண்டும். முழுமையாகத் துயர் துடைப்புப் பணிகளைச் செய்ய நிதி உதவி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
- முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் உண்டாக்கும் வகையில் நடைபெறும் சோதனையை நிறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் உறுதி செய்த பின்னரும், மீண்டும் மீண்டும் அவ்வணையைச் சோதிப்பது அதை உடைப்பதற்கான மறைமுக முயற்சிகள் என்றே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது.
இப்பொழுது 6 அடி விட்டமும் 800 அடி ஆழமும் கொண்ட 5 பெரும் துளைகளை அணைக்கட்டமைப்பில் பெரும் இயந்திரங்களை வைத்து இந்திய அரசு போடுகிறது. இந்தத் துளைகளை மூட ஒரு துளைக்கு 1000 மூட்டை சிமென்ட் தேவைப்படும் என்று அவர்களே கூறுகிறார்கள். அப்படியென்றால் இவை துளை அல்ல. மிகவும் ஆழமான கிணறுகள் ஆகும். அணைக் கட்டடத்தில் 5 இடங்களில் கனரக இயந்திரங்களை வைத்து 800 அடி ஆழத்திற்குக் கிணறு தோண்டினால் அந்த அணை என்னவாகும்? கேரள அரசின் அணை உடைப்பு நோக்கத்தை நிறைவேற்ற “சோதனை“ என்ற பெயரில் இந்திய அரசு களம் இறங்கியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
இந்தச் சூது முயற்சியைத் தமிழக அரசு தடுக்காததும் கண்டிக்காததும் வியப்பாக இருக்கிறது. சோதனை என்ற பெயரில் அணையைப் பலவீனப்படுத்தும் நடுவண் அரசின் செயல்பாட்டை உடன் தடுத்து நிறுத்துமாறு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
- கூடங்குளம் வேண்டாம்; நெய்வேலி வேண்டும்.
தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஈடுகட்ட உடனடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத் தொகுப்பிற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 11கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கும், 9 கோடி யூனிட் மின்சாரம் கேரளத்திற்கும், 6 கோடி யூனிட் மின்சாரம் ஆந்திரப்பிரதேசத்திற்கும் போகிறது. இம்மின்சாரம் அனைத்தையும் தமிழகப் பயன்பாட்டிற்குத் திருப்பிவிடுமாறு தமிழக முதலமைச்சர் செயலலிதா இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு தமிழகம் மின் பற்றாக் குறையால் தவிப்பதை உணர்ந்து நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விட வேண்டும் என்று த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: தஞ்சை
No comments:
Post a Comment