Translate

Tuesday, 31 January 2012

தமிழ் பகுதியில் சிங்களவர்களுக்கு மாத்திரம் மீன்பிடிக்க அனுமதி


மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமிழிர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தாம் நவகிரி குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றால் அங்கிருந்து விரட்டப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
35 ம் குடியேற்ற கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், 1990 ம் ஆண்டு எல்லைக் கிராமங்களில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்து கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.
தற்போது குறித்தப் பிரதேசத்தில் தாம் மீளக்குடியேறியுள்ள போதிலும் அங்கு சென்று மீன் பிடிப்பதற்கு சிங்கள மக்கள் தடையாக இருப்பதோடு தம்மை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு எல்லைக் கிராம மக்கள் மீள் குடியேற்றத்தின் பின்னரும் மீன்பிடி, விவசாயம், கால்நடை உட்பட சகல வாழ்வாதாரங்களையும் இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தக் குளம் அம்பாறை மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதன் பரிபாலனம் மத்திய அரசின் கிழேயே இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபையின் மீன்பிடி, விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கான அமைச்சர் து. நவரட்ணராஜா தெரிவித்தார்.
குறித்த பகுதியில் தற்போது வசிக்கும் சிங்கள மக்களுக்கே மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருக்கும் விடயத்தில் மாகாணசபை அமைச்சு தலையிட முடியாத நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment