மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் கடந்த 23 ஆம் திகதியன்று சரஸ்வதியின் உருவச்சிலை வைக்கப்பட்டு அச்சிலை அன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவிருந்தது.
இந்நிலையில் இப்பாடசாலை கிறிஸ்தவ பாடசாலை என்பதாலும் இது கிறிஸ்தவ மிஸனரியினால் அரசாங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்ட பாடசாலை என்பதாக தெரிவித்து மெதடிஸ்த திருச்சபையினால் சிலை வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சிலையை அகற்றுமாறும் மெதடிஸ்த திருச்சபையினால் வேண்டுகோள் விடப்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் அந்த உருவச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் சர்ச்சை நிலவி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ரி.ஏ.நிசாம் திங்கட்கிழமையன்று இப்பாடசாலைக்கு சமூகம் கொடுத்து பாடசாலை நிர்வாகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றோடு கலந்துரையாடினார்.
இறுதியில் இது பற்றி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கோரி கல்வியமைச்சின் உதவிச் செயலாளர் அங்கிருந்து சென்றார். இவர் அங்கிருந்து சென்றதையடுத்து பாடசாலையின் மாணவிகள் பாடசாலையின் அதிபரை அறையில் வைத்து பூட்டி விட்டு பாடசாலையின் நுழைவாயிலையும் மூடி விட்டு மீண்டும் சரஸ்வதி சிலையை வைத்தனர்.
சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் அந்த சிலை மாணவிகளால் வைக்கப்பட்டது.
இந்த சிலை மீண்டும் வைக்கப்பட்டதையடுத்து அது அகற்றப்படக்கூடாது என்ற வேண்டுகோளின் பேரில் மூடப்பட்டிருந்த அதிபரின் அறையை மாணவிகள் திறந்து விட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கல்வியமைச்சின் உதவிச் செயலாளருக்கு அறிவித்தனர்.
No comments:
Post a Comment