ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு ஆகியன போடுகின்ற தாளங்களுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயாரில்லை. இவ்வாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
எமது நாட்டுக்கென ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவையாகும். அதற்கு கால அவகாசத்தை வழங்குவதை விடுத்து செயற்பாடுகளை எவரும் குழப்பக்கூடாது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் தயாராகியுள்ளது. ஜெனிவாவில் எவ்விதமான நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தக் குற்ற விசாரணையை உடனடியாக நடத்தவேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் இலங்கை மீது சுயாதீன விசாரணை நடத்துவது மிகவும் அவசியம் என்று சர்வதேச நெருக்கடிகள் குழு தெரிவித்துள்ளமை குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு என்பன போடுகின்ற தாளங்களுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. எமக்கேற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் முன்செல்லும் நோக்கில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
தற்போதைய நிலைமையில் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அதிகளவு முன்னேற்றங்களை நாங்கள் காட்டியுள்ளோம். அத்துடன் மேலும் முன்னேற்றங்களை காட்டுவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.
எனவே தொடர்ந்து முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கு எமக்கு கால அவகாசத்தை வழங்குவதை விடுத்து நிலைமைகளில் குழப்பங்களை ஏற்படுத்துவது முறையல்ல. விமர்சனங்களை முன் வைப்பதை விடுத்து எமக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
இதேவேளை ஜெனிவாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் விடயத்தில் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையான முறையில் உள்ளது.
அதாவது ஜெனிவாவில் எவ்விதமான நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகியுள்ளோம். அதற்கேற்ற வகையில் நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் எவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்பதனை குறிப்பிடவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment