Translate

Wednesday 29 February 2012

சுமந்திரன் கூறுவது அத்தனையும் பொய்! - ஈழநாடு


இன்னும் ஒரு வரலாற்றுத் துரோகம் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைக்காகச் சிந்திய இரத்தமும், செலுத்திய உயிர்க் கொடைகளும் விலை கூறி விற்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் ஊண் உறக்கமின்றி, வீதிகளில் தவம் இயற்றி, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்துப் பேசாத நாடுகளையெல்லாம் தமிழீழ மக்களுக்காய்ப் பேச வைத்த பெருமுயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவுப் பிரதிநிதியான சுமந்திரனின் ஏற்பாட்டில் சம்பந்தன் அவர்களால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.


சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழினத்தின்மீது நடாத்திய இன அழிப்புப் போரை, குறைந்த பட்சம் போர்க் குற்ற விசாரணையின் அடிப்படையிலாவது உலக நாடுகள் நீதி வழங்கும் என்ற ஈழத் தமிழர்களது அப்பாவித்தனமான நம்பிக்கையும் சுக்குநூறாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் சம்பந்தன் அவர்களால் வெளியிட்ட அறிக்கை உடனடியாகவே தமிழர் தரப்பை உலுக்கி எடுத்தது. ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளமாட்டாது என்று தெரிவித்த அந்த அறிக்கையில் அதற்காகக் கூறப்பட்ட காரணம் மிகவும் கேவலமானதாக உணரப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா அமர்வில் பங்கேற்பதைத் தவிர்த்ததன் மூலம் தமிழ் மக்களை இன்னொரு அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளதாக சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள தமிழினத்தின் மீது சிங்களப் படைகள் மேற்கொண்ட போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரித்து நீதி வழங்கக் கோரும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரிப்பது சிங்கள இனத்தைச் சீற்றமடைய வைக்கும். அதன் மூலம் இன்னொரு பேரவலத்தைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்ற சம்பந்தர் அவர்களது கருத்து மிக அவமானகரமானது.

விடுதலைப் புலிகளுக்கு முன்னரான முப்பது வருட மிதவாத அரசியலில் இந்தக் கருத்தாடல்கள் அதிகம் முன் வைக்கப்பட்டன. ஆனாலும், சிங்கள இனவாதம் தமிழர்களை ஓட ஓட விரட்டியது. அடித்தும், எரித்தும், வெட்டியும் படுகொலைகள் புரிந்தது. தமிழர் சொத்துக்களைச் சூறையாடியது. தமிழ்ப் பெண்களை துகிலுரிந்து வல்லுறவு கொண்டது.

இந்த அத்தனை கொடூரங்களும் விடுதலைப் புலிகள் திருப்பி அடித்த காலத்தில் திரும்ப வரவேயில்லை. இதை சம்பந்தர் அவர்கள் அறிந்திருக்கவில்லையா? எமது மக்கள் எதுவரை அச்சப்படுவது? எதுவரை அவமானப்படுவது? எதுவரை அடங்கிக்கிடப்பது? சம்பந்தர் அவர்கள் அதற்கான காலவரை நிர்ணயிப்பாரா? தமிழர் ஓடும்வரை சிங்கள இனவாதம் துரத்தும். தமிழர்கள் அச்சப்படும்வரை சிங்களத்தின் அடக்குமுறை தொடரும். சம்பந்தர் தவிர்த்தது இதில் எதனை?

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் கட்சிகளுக்கு இடம் இல்லை. ஒரு அரசியல் கட்சி என்ற ரீதியில் அதில் பங்குபற்றுவதற்கு முடியாது.... நாம் கலந்துரையாடிய எல்லா நாடுகளுமே எம்மை அதில் கலந்து கொள்ள வேண்டாமென்று ஆலோசனை வழங்கினார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு எல்லாமாக நின்று செயற்படும் சுமந்திரன் நா கூசாமல் பி.பி.சி. தமிழோசையில் பொய் கூறியிருக்கிறார்.

இது குறித்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கனடிய தமிழர் மையம் என்ற அமைப்பின் ஊடாக இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் தமிழீழ மக்களது அவலங்கள் குறித்த தொடர்பாடல்களை நடாத்திவரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான பாலன் ரட்ணராஜா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் சுமந்திரன் அவர்களது கூற்றினை முற்றாக மறுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சி என்பதற்கும் அப்பால், பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களது ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற தகைமை ஜெனிவாவில் அவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பை வழங்கியிருக்கும். அத்துடன், அங்கு பிரசன்னமாகியுள்ள உலகின் அத்தனை பிரதிநிதிகளுக்கும் தமிழர் தரப்பின் நிலையை நேரடியாக விளக்குவதற்கும், அவர்களது ஆதரவை எதிர்காலத்திலும் பயன்படுத்துவதற்குமான மிகப் பெரிய வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சம்பந்தன் அவர்களும், சுமந்திரன் அவர்களும் பாழ்படுத்தியுள்ளனர்.

நாங்கள் தொடர்பில் உள்ள எந்த நாடுமே சுமந்திரன் கூறியது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியிருக்க முடியாது. மாறாக, அவர்கள் ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஊக்குவிக்கப்பட்டிருந்தார்கள் எனபதே உண்மை என்று தெரிவித்தார்.

தமிழீழ மக்களுக்கு இதயசுத்தியுடன் நேர்மையாகவும், துணிச்சலுடனும் பணியாற்றத் தடையேதும் இருப்பின் அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அவர்கள் அரசியலிலிருந்து விலகியிருக்கலாம். அதை விடுத்து, தமிழ் மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை சுயநலமான சில காரணங்களுக்காக விட்டுக் கொடுத்தது மிகப் பெரிய கொடூரம் என்பதே தமிழர் தரப்பின் நிலையாக உள்ளது.

- ஈழநாடு

No comments:

Post a Comment