-இதயச்சந்திரன்
- கேட்டுப் பெற்றால் , அதை மீண்டும் பறித்துக் கொள்வார்கள்.
முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களம் சொல்வது, அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகாரப் பகிர்வல்ல.
13 வது திருத்தச் சட்டமும், அதன் குழந்தையான [சம்பந்தரின் மொழியில்] மாகாண சபையும், சிங்கள இறைமையின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.
காணி மற்றும் காவல்துறை உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோமென சிங்களம் விடாப்பிடியாக இருப்பதிலிருந்து இந்த வேறுபாட்டினை தெரிந்து கொள்ளலாம்.
அத்தோடு , மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் அதிகார பலமும் மாகாணசபையில் முதன்மை பெறுகிறது.
இந்நிலையில் 13 திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோமென பல தடவைகள் கூறிய சம்பந்தர் அவர்கள், இப்போது ஏன் தடுமாறுகின்றார்?
நாம், ‘ஒரு இறைமையுள்ள தேசம்’ [ Sovereign Nation ] என்கிற, அடிப்படை நிலைப்பாட்டில் இருந்தால் மட்டுமே, எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என வாதிடலாம்.
எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனக் கூறிக் கொண்டு, சிங்களம் தரும் அதிகாரங்களை நாம் பெற்றுக் கொள்வோமெனக் கூறினால், எமது பிறப்புரிமையான இறைமையை நாமே மறுப்பது போலாகிவிடும்.
தாயகத் தமிழ் மக்களுக்கும் , சிங்களத்திற்கும் இடையே உள்ள பிரதான முரண்பாடு இதுதான்.
அதாவது முழு இலங்கைக்குமான இறைமை சிங்கள தேசத்திற்கு உரியது என்கிறது சிங்களம்.
அவர்கள் எமது தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தனித்துவமான தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஆகவே இதில் எந்த விட்டுக் கொடுப்புக்களையும் சிங்களம் அனுமதிக்கப்போவதில்லை.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மற்றும் நிலப்பறிப்பின் ஊடாக தாயக்கோட்பாட்டை சிதைப்பதுதான் சிங்களத்தின் முதன்மையான நிகழ்ச்சி நிரல்.
ஆகவே நிரந்தரமான தீர்வு என்பது, இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையிலிருந்து உருவாக்கப்படவேண்டும்.
அவர்கள் தருவதையே நாம் பெற வேண்டுமென முடிவெடுத்தால், தாயகம், சுயநிர்ணய உரிமை, என்கிற கோஷங்கள் தேவையில்லை.
அதற்கு சர்வ தேசச் சட்டங்களை துணைக்கு அழைக்க வேண்டிய அவசியமுமில்லை.
சிங்களம் எதையும் தர உடன்படாது என்பதை சர்வ தேசத்திற்கு நிரூபிப்பதற்கு, புதிய தந்திரோபாயங்களும் தேவையில்லை.
பண்ட-செல்வா, டட்லி- செல்வா உடன்படிக்கைகள் ஊடாக பல தந்திரோபாயங்களை நாம் பரீட்சித்துப் பார்த்து விட்டோம்.
எத்தனை காலத்திற்குத்தான் இவர்கள் ஒன்றையும் தரமாட்டார்கள் என்று சர்வதேசத்திற்கு நிரூபிப்பது?
No comments:
Post a Comment