Translate

Saturday, 4 February 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா அதிர்ச்சியில் மஹிந்த!

ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கத்தேய நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லி சென்றுள்ளார்.



இந்தியா - இலங்கை இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை புதுடில்லியில் ஆரம்பமாகியது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காகவே படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான குழு புதுடில்லி சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஜெனிவா மாநாடு தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது முக்கியமாக ஆராயப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இந்தியப் பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை,விமானப் படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பேச்சுக்களில் இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் இலங்கை படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போது உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பயணத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.


வருடாந்தப் பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு புறம்பாக ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் கொண்டு வரப்படவிருக்கும் பிரேரணை தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்வதில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகளவு கரிசனை செலுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான சுயாதீனமான பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு மேற்கத்தேய நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.


இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை அமெரி க்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வாஷிங்டனுக்கு அழைத்துள்ளார்.


அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க் குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் ஸ்ரீபன் ரப் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://eutamilar.eu/...-02-02-16-32-09 

No comments:

Post a Comment