Translate

Monday, 20 February 2012

ஜெனிவாவில் இலங்கை அரசின் விருந்துபசாரத்தை புறக்கணிக்க முக்கிய நாடுகள் தீர்மானம்!

ஜெனிவாவில் இலங்கை அரசின் விருந்துபசாரத்தை புறக்கணிக்க முக்கிய நாடுகள் தீர்மானம்!

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனிவாவில் இலங்கை அரசு ஒழுங்கு செய்திருக்கின்ற விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

ஜெனிவா மாநாட்டிற்கான இலங்கைக் குழுவின் முக்கிய பிரதிநிதியான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று கொழும்பிலிருந்து சுவிற்சலாந்து நோக்கிப் புறப்பட்டார்.
வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமர்வுத் தொடரில் கலந்துகொள்ளும் இராஜதந்திரிகளைச் சந்திக்கின்றமைக்கான விசேட ஒன்றுகூடலிலும் அமைச்சர் பீரிஸ் கலந்துகொண்டு இலங்கைக்கான ஆதரவைத் திரட்டவுள்ளார்.
எவ்வாறாயினும், லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளும், ஆபிரிக்க நாடுகள் சிலவும் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளன என அறியமுடிகின்றது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்த நாடுகள் ஆதரிக்கவுள்ள காரணத்தினால், மேற்படி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளன எனப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரியொருவர்  தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பில் நடுநிலையான கொள்கையை வகிப்பதற்கு ஆசியாவின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன எனக் குறிப்பிட்ட அந்த இராஜதந்திரி, இந்தியா இது விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்படுமென்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment