Translate

Monday, 20 February 2012

மனோதிடம் மிக்க வடபகுதி மக்கள் மனோ கணேசன்


வடபகுதி மக்கள் தமிழ் தேசிய அரசியல் அபிலாஷைகளையும், அன்றாட வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வட பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மனோ கணேசன் அம் மக்களிடையே கலந்துரையாடிய பின் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது உரிமைகளுக்கான சாத்வீக ஜனநாயக போராட்டங்களையும் முன்னெடுக்க வடபகுதி தமிழ் மக்கள் இன்று தயார் நிலையில் இருக்கின்றார்கள். இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கான மனோதிடம் எனது வடபகுதி உடன் பிறப்புகளிடம் நிலைகொண்டிருப்பது என்னை வசீகரிகின்றது எனவும் அவர் பெருமிதப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாண சமூக பற்றாளர்களின் அழைப்பை ஏற்று வடபகுதிக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட மனோ கணேசன், சனிக்கிழமை இரவு தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து சமகால அரசியல் விவாகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். புன்னாலைக்கட்டுவன் கிராமிய உழைப்பாளர்கள் சங்கம், காங்கேசன்துறை கடலோர மாதகல் மீனவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை அவரது கிளிநொச்சி அலுவலகத்திலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களை அக்கட்சியின் யாழ் அலுவலகத்திலும் சந்தித்து உரையாடியுள்ளார்.
மேலும் ஞாயிற்றுகிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சந்திப்புகளில் பேராசிரியர் சிற்றம்பலம், கவிஞர் நிலாந்தன் ஆகியோரை மனோ கணேசன் சந்தித்தார். பேராசிரியரிடம் தமிழ் சிவில் சமூகத்தின் அமைப்பு தொடர்பிலான விவகாரங்களை மனோ கணேசன் கேட்டறிந்து கொண்டார் .
வடபகுதிக்கான தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பிய மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது, சலுகைகளை காட்டி தமிழர்களை வளைக்க நினைக்கும் அரசாங்கத்தின் நோக்கங்கள் தொடர்பில் வடபகுதி தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அத்துடன் தேசிய அரசியல் அபிலாஷைகளையும், வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொள்ள இந்நாட்டு குடிமக்கள் என்ற முறையில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பிலும் அவர்களிடம் தெளிவு காணப்படுகின்றது. இந்த தெளிவும், மனோதிடமும் அவர்களை சாத்வீக ஜனநாயக உரிமை போராட்டங்களுக்கான தயார்நிலையில் வைத்துள்ளது. தேசிய ஜனநாயக வழித்தடத்தில் தமது தலைமைகள் தம்மை வழி நடத்தவேண்டும் எனவும், அதற்கான கட்டமைப்பை தமிழ் தேசிய தலைமைகள் உருவாக்க வேண்டும் எனவும் வடபகுதி தமிழ் மக்கள் இன்று எதிர்பார்க்கிறார்கள்.
தென்னிலங்கையில் கடந்த வாரம் பொது எதிர்கட்சிகள் ஆரம்பித்துள்ள மக்களின் வாழ்வாதார உரிமை போராட்டங்கள் வடபகுதி மக்களை பெரிதும் கவந்துள்ளன. இதற்கு சமாந்திரமான ஜனநாயக போராட்டங்கள் வட-கிழக்கிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது வட பகுதி சமூக முன்னோடிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. வாழ்வாதார பிரச்சினைகளுடன் நின்று விடாமல், தமிழ் பிரதேச போராட்டங்கள் தேசிய அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலான நோக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது ஏகோபித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு சமூக பற்றாளர்களின் அழைப்புகளை ஏற்று விரைவில் வன்னி மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கும் நான் பயணம் செய்ய உள்ளேன். என்றார்.

No comments:

Post a Comment