இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் மனைவியை சிங்கள இராணுவத்தினர் தலையில் சுட்டுள்ளனர். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை படுகொலை செய்யமுன்னரே நடேசன் அவர்களின் மனைவியை இலங்கை இராணுவம் படுகொலைசெய்துள்ளது. சம்பவதினத்தன்று நடேசன், புலித்தேவன், நடேசன் மனைவி மற்றும் சிலர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். நடேசன் அவர்களின் மகன் லண்டனில் இருக்கிறார். அவரை சட்டலைட் போன் மூலம் தொடர்புகொண்ட ப.நடேசன் அவர்கள், தாமும் மனைவியும் இராணுவத்திடம் இன்னும் 30 நிமிடங்களில் சரணடைய இருப்பதாவும், இன்னும் 30 நிமிடங்களுக்குப் பின்னர் தாம் தொலைபேசியூடாக உன்னுடன் பேசவில்லை என்றால் என்னை அவர்கள் கொன்றுவிட்டார் என்பது தான் அர்த்தம் எனக் கூறியுள்ளார்.
சரணடைந்த இவர்களை இராணுவம் முதலில் அருகில் உள்ள ஒரு தற்காலிக இராணுவ முகாமுக்கு கூட்டிச்சென்றுள்ளது. அங்கே அவர்கள் தொலைபேசியூடாக ஒரு உயர் அதிகாரியோடு பேசியுள்ளனர். அவர்கள் சிங்கள மொழியில் பேசியது என்ன என்பதனை நடேசனின் மனைவி அறிந்துள்ளார். ஏன் எனில் அவர் ஒரு சிங்களவர். தம்மை அவர்கள் சுடப்போகிறார்கள் என்று அறிந்த நடேசனின் மனைவி, சரணடைந்தவர்களைச் சுடவேண்டாம் எனக் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் தலை முடியை பிடித்து இழுத்த சிங்கள இராணுவம் அவரை தகாத மற்றும் தரம்கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். சிங்கள தாசி எனவும், திட்டி அவர் தலையில் சுட்டுள்ளனர் என, அச் சம்பவம் நடந்தபோது அங்கே நின்றிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். இச் செய்தியை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது. வேண்டும் என்றால் தாம் அச் சிப்பாயை இனங்காட்டவும் தயார் என அது மேலும் தெரிவித்துள்ளது.
புலித்தேவன் தன்னுடன் கொண்டுசென்ற லாப்-டொப்பை இராணுவத்தினர் எடுத்துள்ளனர். புலித்தேவன் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது லாப்-டொப் இரகசிய கடவுச் சொல்லைப் பாவித்து அவர்கள் லாட்-டொப்பை இயக்கியுள்ளனர். அவர்கள் எதேட்சையாக இன்டர்நெட் செல்லும்போது, அது உடனடியாக ஸ்கைப்பில் சைன் - ஆன் ஆகியுள்ளது. இதன் காரணமாக புலித்தேவன் இறந்து பல மாதங்கள் ஆனபோதும், அவர் ஸ்கைப்பில் ஆன் லைனுக்கு வந்ததாக அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் காட்டியுள்ளது (ஸ்கைப்). இதனை அடுத்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட பலர், புலித்தேவனின் லாப்-டொப் இலங்கைப் புலனாய்வுப் பிரிவில் இருப்பதும் அவர்களே அதனை இயக்குகின்றனர் என்பதனைக் கண்டுபிடித்து, புலித்தேவனின் ஸ்கைப் ஐ.டியை தமது கணக்கில் இருந்து நீக்கியுள்ளனர் (ரிமூவ்).
இலங்கை இராணுவமானது சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைக் கொலைசெய்யமுன்னர், தொலைபேசியில் உரையாடியது கோத்தபாயவுடன் தான் என்று சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனை மட்டும் சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து இவர்களைச் சுடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதனை மட்டும் உறுதிசெய்ய முடிகிறது.
No comments:
Post a Comment