Translate

Sunday 12 February 2012

கணவனை இழந்த மனைவிகளை அழைத்துச் செல்லும் இராணுவத்தினர் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் உள்ள இளம் விதவைப் பெண்களை அங்குள்ள இராணுவ புலனாய்வு பிரிவினர் பாலியல் தொழிலுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த இளம் பெண்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்களது கணவனைப் பற்றி விசாரித்து வந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அந்த பெண்களின் குடும்ப வறுமையினைப் போக்குவதற்கு கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாகவே ஆரம்பத்தில் அழைத்துச் சென்று பின்பு பாலியல் தொழிலுக்காக அவர்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.



பின்பு இந்த பாதிக்கப்பட்ட பெண்கள் விடுமுறையில் தங்களது வீட்டுக்கு வந்து திரும்பவும் கொழும்பு செல்லும்போது இன்னும் பல இளம் பெண்களை தங்களுடன் அழைத்துச் செல்வதாகவும் கடந்த மாதம் இவ்வாறு 9 பெண்கள் இந்த தொழிலுக்காக கொழும்பு செல்வதற்காக வீதியில் நின்றபோது சந்தேகம் கொண்ட அங்குள்ள உள்ளூர் நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டு நின்றபோது அங்கு வந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அந்த உள்ளூர் நிறுவன உறுப்பினர்களை அச்சுறுத்தி அந்த இடத்தை விட்டு அவர்களை விரட்டியடித்ததாகவும் இதன்பின்பு சற்று நேரம் கழித்து இராணுவத்தினரின் வான் ஒன்றில் இந்த பெண்கள் அனைவரும் ஏறிச் சென்றதாகவும் அந்த உள்ளூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதேசத்தில் தற்போது 55 பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள இளம் விதவைப் பெண்களுக்கு வேண்டியவ வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் இவ்வாறான பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லலாமெனவும் இதனால் பாரிய கலாச்சார சீரழிவை தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாமெனவும் அந்த உள்ளூர் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

யுத்தத்திற்கு பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் அதிக பெண்கள் விதவைகளாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரத் திட்டங்கள் எதுவும் சரிவர இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதுடன் தற்போது இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படுகின்றன ஆடை உற்பத்திச் சாலைகளில் குறைந்தளவு விதவைப் பெண்களுக்கே அதில் வேலை வாய்ப்புக் கிடைக்கும் சாத்தியமும் காணப்படுகின்றது இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment