பொறுப்புடைமையும் நீதியும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வராது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புடைமையின்மை குறித்து, மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து சுமார் 3 வருடங்களாகின்ற போதிலும் பொறுப்புடைமைக்கான நம்பகமான நடவடிக்கைகள் குறித்து தனது மக்களுக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் அளித்த உறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் காயமடைந்தமை குறித்து முறையாக விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் பேரவை பிரத்தியேகமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா ஆலோசனை பணிப்பாளர் பிலிப் டாம் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை அத்தியாயமொன்று குறித்து இப்பேரவை விசாரிக்கத் தவறினால் அதன் அர்த்தத்தை பலவீனப்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அவரின் நிபுணர் குழு செய்த சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
‘நீதியும் பொறுப்டைமையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வராது என்பது என்பது நீண்ட காலமாக தெளிவாகவுள்ளது.’ ‘சர்வதேச விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்டவர்களின் துன்பதை போக்கும்’ என பிலிப் டாம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment