அரசுக்கு தற்போது பல்வேறு வழிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகதொடர்ச்சியாக போராடப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளில்ஈடுபடப் போவதில்லை என கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் சிவில் சமூக அமைப்புக்களுடன் நடத்திய சந்திப்பின் போதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சிவில்சமூகத்தினால் முன்வைக்கப்படும் யோசனைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளப் போவதாகத்தெரிவித்துள்ளார்.
தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வவுனியாவில் சந்திப்;பொன்றுநடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளமாட்டோம் என சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு தற்போது பல்வேறு வழிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு தற்போது பல்வேறு வழிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள்; இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். சர்வதேசத்தின் அழுத்தமும் வலுத்து வருகிறது.
இவ்வாறான நிலையில் நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது, இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம். மற்றவர்களைப்போல், அவர்களை விடவும் உரிமைகளைக் கேட்டதற்காக பெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கின்றோம்.
இந்தப் பிரச்சினைத் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் இனப்படுகொலை நடைபெறும். வன்முறை நடைபெறும். அதற்கு சர்வதேசம் இடமளிக்கக்கூடாது. அதிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை, இதனையே பகிரங்கமாகச் சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இனிமேல் சர்வதேசம் எமது பிரச்சினை எந்தெந்த வகையில் தீர்க்க முடியுமோ அந்தந்த வகையில் தீர்த்து வைக்க வேண்டும், அது அவர்களது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற 'ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வு'' கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அவர் தொடர்ந்தும் உரையாற்றிய சம்பந்தன்,
சுயநிர்ணய உரிமை என்றவுடன் தனிநாடு என்று தப்பான அர்த்தம் பிரித்துக் கூறப்படுகின்றது. இதைக் கேட்டு பதறித் துடிக்கின்றனர். ஒரு நாட்டின் இறைமை அங்கு வாழும் மக்களிடமே தங்கி உள்ளது. இறைமை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது.முதலாவதாக ஆட்சி அதிகாரம். அதில் சட்டவாக்கம், நிர்வாக அதிகாரம் மற்றும நீதி தொடர்பான அதிகாரம் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக அடிப்படை உரிமைகளும் மனித உரிமையும் மூன்றாவதாக வாக்குரிமை அதுதான் உண்மையான ஜனநாயகத்துக்கு உயிர் கொடுப்பது. இம் மூன்றும் தான் இறைமை என தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கு, தமிழ் மொழி பேசும் மக்களுக்கு உள்ளார்த்தமான இறைமை வேண்டும். இதில் ஏதாவது ஒன்று மறுக்கப்பட்டால் அது இறைமையே மறுக்கப்பட்டதற்கு ஒப்பாகும். இதுதான் சித்தாந்தமும் ஜதார்த்தமும். ஒற்றை ஆட்சி முறை நீக்கப்பட்டு சமஷ்டி முறை ஏற்படுத்தப்பட வேண்டும். நம்மை நாமே ஆளும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இதனை எமது மக்கள் 1976ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற நாடாளுமன்ற, மாவட்ட அபிவிருத்தி சபை, மாகாண சபை தொடர்ந்து இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் தமது நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளன. இது ஜனநாயகத் தீர்ப்பு. இதணை அரசு மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அடக்கி ஆட்சி செய்ய முடியாது. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அம்மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படும்போதுதான் பிரச்சினையே உருவெடுக்கின்றது.
அண்டை நாடான இந்தியாவில் பல மொழிபேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தம்மைத் தாமே ஆளும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவாக்கம், நிர்வாகம், அடிப்படை உரிமை, நிறைவேற்று அதிகாரம் என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பனாகொடை சிறையில் குடியேற்றப்பட்டோம். நாம் நமது உரிமைக்கு முப்பது வருடங்கள் சாத்வீகப் போராட்டம் நடத்தினோம். உரிமைக்காக சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினோம். இதனால் அப்போது புதிதாகக் கட்டப்பட்ட பனாகொடை முகாம் சிறையில் முதன்முதலாக 'குடியேற்றப்பட்டோம்'.
எனினும் தந்தை செல்வா மாறிமாறி வந்த அரசுகளுடன் முன்னாள் பிரதமர்களான பண்டாரநாயக்கா, டட்லி சேனநாயக்கா ஆகியோருடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவை எல்லாம் கிழித்து எறியப்பட்டன. எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை.
1970களில் புதிய அரசியல் சாசனத்துடன் அரசியல் நிர்ணய சபையும் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த பிரயோசனமற்ற சபையை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. அதனை நிராகரிக்கின்றோம் எனக்கூறி தந்தை செல்வா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து அரசுக்குச் சவால் விட்டார். திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்து நீண்டகாலம் கடத்திய பின் நடத்தப்பட்ட தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக ஏற்பட்ட ஏமாற்றங்களின் உச்சக் கட்டமாகத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னரே ஆயுதப் போராட்டம் வெடித்தது. இதற்கு இலங்கை அரசே முதல் பொறுப்பு.தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக, அரசியல், பாரம்பரிய கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே போர் தொடர்ந்தது.தனிநாடு கேட்டால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சுய ஆட்சி கேட்டால் உதவுகின்றோம் என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் நாம் பல்வேறு மட்டங்களில் பேச்சுக்களை நடத்தினோம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது. அது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் நிவர்த்தி செய்யாது என்று ஆரம்பத்திலேயே நாம் அதனை நிராகரித்து விட்டோம்.
இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட, உறுதியளித்த ஒப்பந்தங்களை எல்லாம் உதாசீனமாகிவிட்டது. இலங்கை ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக்கூடாது. இப்போது சர்வதேச சமூகம் தனது கூர்மையான பார்வையை இலங்கைமீது திருப்பி உள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு மனித உரிமை மீறல்களைப் புட்டுக்காட்டிவிட்டது.
இதற்கும் மேலாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இழப்புகள் தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஒருபுறம். ஜனாதிபதியயினாலேயே நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னொரு பக்கம். சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மறுபக்கம் இவை எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கவும் பொறுப்புக் கூறவும் வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பாரம்பரிய மொழி, கலாச்சார, மத கோட்பாடுகளைக் கொண்டவர்கள். பாரம்பரியமாக தாம் வாழ்ந்த மண்ணில் தம்மை தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடன் கௌவமாக வாழவே விரும்புகின்றோம். தமிழ் மக்கள் சமமாக, சம பிரஜைகளாக வாழ இடமளிக்க வேண்டும்.
இதய சுத்தியுடன் நேர்மையான பேச்சுக்களின் மூலம் நின்று நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்குச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்களை, வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றவும் உறுதியான அரசியல் தீர்வு ஒன்றைக் காணவும் முன்வர வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இறைமையின் அடிப்படையில் ஏனைய சமூகங்களைப் போன்று சுயகௌரவத்துடனும், நிய நிர்ணய உரிமையுடனும் அடிப்படை மனித உரிமைகளுடன் சம பிரஜைகளாக வாழக்கூடிய நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய தீர்வின் மூலமே மீண்டும் இனப்படுகொலைகளும், வன்முறைகளும் இடம்பெறாவண்ணம் தடுக்க முடியும் என சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சத்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சுமந்திரன் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment