Translate

Sunday 25 March 2012

இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு


  தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அகதிகளின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி பயில்வதற்காக 1200 ரூபாய் முதல் 2850 ரூபாய் வரையிலும் ஆண்டு உதவித் தொகையாக வழங்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்கள் நலன் காக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களையும் இலங்கை தமிழர்களுக்கு வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து கல்லூரிகளில் உயர் கல்வி மேற்கொள்ளும் இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்ப மாணவ - மாணவியருக்கு, ஆண்டு ஒன்றுக்கு இளங்கலை பயிலுவோருக்கு 1200 ரூபாயும், இளம் அறிவியல் பயிலுவோருக்கு 1250 ரூபாயும், முதுகலை பயிலுவோருக்கு 1330 ரூபாயும், முதுகலை அறிவியல் பயிலுவோருக்கு 1650 ரூபாயும், தொழில்நுட்ப கல்வி பயிலுவோருக்கு 850 ரூபாயும், பொறியியல் (பயிலுவோருக்கு 2750 ரூபாயும், மருத்துவம் பயிலுவோருக்கு 4700 ரூபாயும், கால்நடை மருத்துவம் பயிலுவோருக்கு 1400 ரூபாயும், சட்டம் பயிலுவோருக்கு 860 ரூபாயும், வேளாண்மை அறிவியல் பயிலுவோருக்கு 2850 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன் மூலம், 1000 இலங்கை தமிழர் அகதி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதற்காக அரசுக்கு 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். 

இலங்கை அகதிகள் முகாம்களில் தற்பொழுது இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவிற்கும் 10,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். இதனால் அரசுக்கு 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடியே 33 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்; முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுதுபார்த்தல், சாலைகளை சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், ரேஷன் கடை அமைத்தல், 

கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளுக்காக 20 கோடியே 66 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக மக்களுக்காக அமல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களையும் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளார்கள். 

அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மேலும் வளம் ஏற்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
___

No comments:

Post a Comment