அரசு ஒருபோதும் அடிபணியாது; ஜெனிவா தீர்மானம் குறித்து தெற்கில் எதிர்ப்பு வலுக்கிறது |
ஜெனிவா மனித உரிமைகள் சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை எனவும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனவும் தெற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தலைமையில் கொண்டு வரப்பட்ட இந்தத்தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த மாட்டாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜெனிவா தீர்மானத்தை முற்றாக எதிர்க்கும் வகையிலேயே தெற்கில் உள்ள அரச சார்புக்கட்சிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானத்துக்கு எதிரான கருத்தையே வெளியிட்டு வருகின்றனர்.
முக்கியமாக அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், ஜே.வி.பியின் உறுப்பினர்களும், பேரினவாத அமைப்புகளின் தலைவர்களும் இந்தக்கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,
"இது சுயாதீனமான நாடு. இங்கு அநாவசியமான அழுத்தங்களைப் பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இலங்கையரான எம்மை யாரும் கட்டுப்படுத்த இயலாது'' என்று தெரிவித்திருந்தார்.
அதேபோன்று மூத்த அமைச்சரான வாசுதேவ நாயணக்கார,
"இலங்கையின் சுயாதிபத்தியத்தை ஜெனிவாத் தீர்மானம் ஒன்றும் செய்யாது. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். சர்வதேசத்தின் தேவையற்ற தலையீடுகள் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும்.'' என்று ஜெனிவா தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது கூறியிருந்தார். அமைச்சர் விமல் வீரவன்ஸ இதே கருத்தையே வெளியிட்டார்.
"சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை மிரண்டுவிடாது. அமெரிக்காவின் இந்தத் திட்டமிட்ட சதியை எதிர்த்துப் போராடுவோம். சர்வதேச தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தேவையற்ற சர்வதேச தலையீடுகள் எமக்குப் புதியவை அல்ல.
இவ்வாறு அமெரிக்கா பல தடவை முயன்றிருக்கிறது. இதற்கு மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவு வழங்குகின்றன என்று வீரவன்ஸ குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் மேர்வின் சில்வா, ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவ மேத்தானந்த தேரர், ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் அமரசேகர ஆகியோரும் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான கருத்துகளைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டப் பேரணிகளையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக முடுக்கி விடுவதற்கான செயற்பாடுகளும் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது.
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகள் மிகப் பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்கா வருமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்டன் அழைத்துள்ளமையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பின் பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உட்படப் பல இடங்களில் நேற்று ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்தும் அமெரிக்காவைக் கண்டித்தும் ஒலிபெருக்கிகளில் பிரசாரங்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தன.
அத்துடன் இது தொடர்பான சுவரொட்டிகள் கொழும்பின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
தீர்மானம் தொடர்பில் தெற்கு அரசியல் தலைமைகள் கடும் சீற்றத்தில் உள்ளதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர். எதிர்வரும் நாள்களில் தீர்மானத்துக்கு எதிரான கருத்துகள் மேலும் வலுவடையும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 25 March 2012
அரசு ஒருபோதும் அடிபணியாது; ஜெனிவா தீர்மானம் குறித்து தெற்கில் எதிர்ப்பு வலுக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment