Translate

Friday, 2 March 2012

இன்று இலங்கைக்கு ஆப்பு: விவாதத்தில் 2வது இடம் இலங்கைதான் !

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டத் தொகுதிக்கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில் இக்கூட்டத்தொடரின் வழக்கமான நிகழ்ச்சிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இலங்கை விவகாரமானது நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது அம்சத்தின் கீழ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து அங்கத்தவ நாடுகளால் இன்று கலந்துரையாடப்படவுள்ளது என மேலும் அறியப்படுகிறது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது. ஐ.நா. நிபுணர் குழு சிபாரிசு செய்த முழுமையான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு அமைவாக இல்லாத போதிலும் அவ்வறிக்கை சில சாதகமான சிபாரிசுகளை செய்துள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா, தாய்லாந்து, பொட்ஸ்வானா, இந்தோனேஷியா முதலான நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பாக சாதகமான கருத்துகளை தெரிவித்துள்ளன. எனினும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு பதிலளிக்கும் கடப்பாடு அவசியம் எனத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் 'இலங்கை, மலேஷியா, பிஜி ஆகிய நாடுகளில் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் சில ஷரத்துகள் நீடிக்கும் அல்லது மீள அறிமுகப்படுத்தப்பட்ட நிலை காணப்பட்டாலும் நீண்டகாலமாக இருந்த அவசரகால விதிகள் நீக்கப்பட்டதை கண்டோம்' எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரேரணை இன்று விவாதிக்கப்படுமா என்பது தொடர்பான செய்திகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment