Translate

Friday 2 March 2012

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்

தமிழர்களிற்கு இப்போதுள்ள ஒரேயொரு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் சதியொன்று பலமாக இடம்பெறுவதாகத் தெரியவருகிறது. பேச்சுவார்த்தைக்கான தரப்பாக மேற்குலகால் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு தேர்வு செய்யப்பட்டதையடுத்தே இந் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.
அதிலும் குறிப்பாக நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிகழ்வில் வடக்கில் அரசுடன் இணைந்து செயற்படும் ஒரு கட்சியின் அனுசரணையாளர்களும், அண்மையில் இந்தியா சென்றுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய ஆதரவாளர்களும் இணைந்து செயற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் எமது செய்தியாளருக்குத் நேரடியாகத் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கான சமபலமுள்ள தரப்பாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் நோக்கில் நடத்தப்படுகிற இந்த முயற்சியில் ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டையும் சம்பந்தப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட நபரும் தற்போது ஜெனிவாவில் தங்கியிருக்கும் தமிழ் அமைச்சருமே இந்தக் காரியத்தில் ;பலமாக ஈடுபட்டுள்ளனர்.
மகிந்த அரசில் அமைச்சராகவுள்ள மேற்படி அரசியல்வாதியே கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பதோடு அவரது கட்சியே தீவுப் பகுதிகளை தம் கைவசம் வைத்திருக்கின்றனர் என்ற காரணத்தால், வட மாகாண முதலமைச்சர் பதவிக்கான சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எதிர்பார்த்திருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அது சாத்தியமாகததால் தற்போது மேற்படி அமைச்சருடன் நேரடியான உறவுகளைப் பேணி இச் சம்பவங்களிற்குத் துணை போவது மிகவும் நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் இக் கட்சியின் சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராக இவர் இறக்கப்படலாம் என்றும் இவரும் மேற்படி அமைச்சரும் ;இந்திய அமைதிப்படையுடன் இணைந்து இயங்கிய ஒரு குழுவில் அங்கம் வகித்தவர்கள் என்பதும், இந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக வவுணியாவைச் சேர்ந்த இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரைத் துணைக்கு அழைக்கும் படலம் அரங்கேறியுள்ளதையும் அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டில் “உத்தியோக பூர்வமாக” கலந்து கொள்வதானால் அதற்கான பதிவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு அதில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு நாட்டின் சம்மதமும் ;தேவை. ஆனால் அத்தகைய எந்தப் பதிவுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்வதான கால அவகாசம் இந்த முறை இருக்கவில்லை.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா போயிருந்தாலும், உத்தியோகப்பற்றற்ற பார்வையாளர் என்ற என்ற அந்தஸ்த்திலேயே அங்கு சென்று நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் தரப்பாகவே அமர்ந்திருக்க வேண்டும். எனவே பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகளினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அழுத்தத்தைக் கொடுத்து வந்தது.
இது தொடர்பாக மேற்படி ஐ.நா. மனிதவுரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விளக்கமாகவும் விரிவாகவும் கடிதம் அனுப்பியிருந்தார்.
பேச்சுவார்த்தையில் சமபலத்தைப் பேணும் ஒரு தரப்பாக மேற்குலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுள்ள நிலையில் உண்மை விவகாரங்களை ஆராயாமல் மேற்கொள்ளப்படும் கபட முயற்சிகளிற்கு இந்தியாவிலுள்ள ஒரு சக்தி மறைமுக ஆதரவை வழங்கி வருவதும் அரசோடு இணைந்த வடக்கைச் சார்ந்த கட்சி ஆதரவை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மே 19ம் தேதிய முள்ளிவாய்க்கால் நிகழ்வின் போது தற்போது மகிந்தாவின் தமிழ் அமைச்சருடன் இணைந்து செயற்படும் மேற்படி கூட்டமைப்பைச் சேர்ந்த நபர் தமிழகம் சென்று தேசியத் தலைவர் பற்றிய கீழ்த்தரமான செய்திகளைப் பரப்பியபோது அங்கேயுள்ள தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாணவர் ஒன்றியம்

No comments:

Post a Comment