Translate

Friday 2 March 2012

டக்ளஸ், கருணா, தொண்டமான் ஆகியோர் அரசுக்கு தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்!- பிரபா கணேசன்


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளிதரனும், ஆறுமுகம் தொண்டமானும் இலங்கை அரசின் பங்காளிகள். அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்  ரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனீவா மாநாட்டின் மூலமாக எமது நாட்டிற்கு ஏற்படவிருக்கும் அபகீர்த்தியிலிருந்து நாட்டைக் காப்பாற்றவும் அதே நேரம், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை பெற்று எமது மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு எல்லா அரசியல்வாதிகளுக்கும் உண்டு.
18ஆவது திருத்த சட்டம் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்ற காரணத்தினாலேயே இத்திருத்த சட்டம் நிறைவேற அரசாங்கத்திற்கு ஆதரவளித்தோம். அதன் மூலம் உட்கட்ட அபிவிருத்திகளிலும், பாடசாலை அபிவிருத்திகளிலும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளிலும் எமது மக்களை உள்வாங்கக் கூடியதாக உள்ளது.
அது மட்டுமின்றி அன்றாடம் எமது மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுத்து நிறுத்தக்கூடிய சந்தர்ப்பமும் கிட்டியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளிதரனும், ஆறுமுகம் தொண்டமானும் அரசாங்கத்தின் பங்காளிகள். அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.
அரசுக்கு ஆதரவளித்த எமக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டிவிட பல அரசியல்வாதிகள் முனைகின்றனர். தமிழ் தேசியத்திற்கு நான் ஒரு போதும் எதிரானவன் அல்ல. தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யுத்த காலத்தில் பல போராட்டங்களையும் நடத்தியும் உள்ளேன்.
இன்று தமிழ் தேசியவாதிகளாக காட்டிக்கொள்பவர்கள் வெளிநாடுகளிலேயே வசித்து வந்தனர். யுத்த கடைசி கட்டத்தில் தமிழ் மக்களின் இழப்பு ஒன்பதாயிரத்துக்கும் அதிகம் என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வன்னி மாவட்டத்தில் மூன்று தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர். தமிழ் சிவில் சமூகம் கூட்டமைப்பினருக்கு தமது ஆலோசனையை வழங்கியிருந்தது.
இருப்பினும் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவம் என்ற அடிப்படையில் ஜெனீவா மாநாட்டில் பங்குபெறப்போவதில்லை என முடிவெடுத்துள்ளமை புத்திசாலித்தனமான சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய பட்டியல் உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டும் நாட்டில் வாழும் மக்களின் இன ஐக்கியத்தை முன்னிலைப்படுத்தி கூட்டமைப்பின் தலைமைத்துவம் எடுத்த முடிவு அவர்களது முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
இதேநேரம், ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளாமல் நாட்டில் இன ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமையையும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் பெற்றுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment