
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மனிதஉரிமைகள் அமைப்புகளுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சூடான வாக்குவாதங்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, “30 ஆண்டு காலப்போரில் இருந்து இப்போது தான் நாம் வெளியே வந்துள்ளோம். புலம்பெயர் தமிழர்களுடன் நாம் இணங்கிச் செயற்பட விரும்புகிறோம்“ என்று கூறினார்.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் நியாயமற்றது என்றும் இலங்கை அரச பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களை இலங்கை அரசு அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஒளிப்படம் பிடித்தார். இதுகுறித்து தாம் ஐ.நா பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்குலக அரசசார்பற்ற நிறுவனங்களை தாக்கி இலங்கை அரச பிரதிநிதி ஒருவர் பேசினார்.
அவரது கருத்துகளை நிராகரித்த தமிழர்கள், சமரசப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்கும் இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் பாதுகாப்பதில்லை என்று குற்றம்சாட்டினர்.
இந்தக் கூட்டத்தில், கொலைகள் மற்றும், ஆட்கள் காணாமற்போனது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தமது கண்டறிவுகளை பகிரங்கமாக முன்வைக்க முடியுமா என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி யோலன்டா போஸ்டர் சவால் விடுத்தார்.
வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு இலங்கை அரசாங்கம் சுத்தமான கைகளுடன் ஜெனிவாவுக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறாக கடுமையான வாக்குவாதங்கள் இருதரப்பினரிடையேயும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment