
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் பிரித்தானியாவில் வழமைபோல், பிரித்தானிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு லண்டனில் 2012 மே 18 ஆம் திகதி நடைபெற உள்ளது என்பதை அனைத்து தமிழ் பாடசாலைகள், தமிழ் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளை நினைவு கூரும் தினம். அன்று கருக்கப்பட்டும், பிணங்களாக அடுக்கப்பட்டும், எதிர்காலம் நொருக்கப்பட்டும், சிதைந்து போன எம் மக்களின் அவலங்களை நினைவு கூருவது மட்டுமல்ல, அவர்களுக்கு சுதந்திரமான ஒரு விடுதலையை அமைப்பதற்கான அடித்தளம் போடும் தினமாகவும் மாற்றுவோம்.
தொடர்ச்சியாக, அறுபது ஆண்டு காலமாக தமிழின அழிப்பினை மேற்கொண்டு வந்த சிறிலங்கா சிங்கள இனவாத அரசு, இறுதியாக மே 2009 இல், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் மாற்றுவலுவினர் ஆக்கப்பட்டதுடன், தாயகத்தில் தமிழ் மக்கள் தடுப்பு முகாங்களிலும், சித்திரவதைக் கூடங்களிலும் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவற்றை விட 1, 46 679 பேருக்கு என்ன நடைபெற்றுள்ளது என்பது தெரியாது உள்ளனர்.
இந்நிலையில், இனப்படுகொலை நடைபெற்று மூன்று ஆண்டுகள் கடந்து, எந்தவித நீதியும் கிடைக்காமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தாயக மக்களுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக உரிமைக்குரல் கொடுப்பதுடன், இனப்படுகொலை புரிந்தவர்கள் சர்வதேசத்தின் முன் தண்டிக்கப்படுவதுடன், தாயக மக்கள் அந்நியர்களில் இருந்து விடுதலை கிடைக்கும் வரை பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக தங்களது அரசியல், இராஜதந்திர முன்னெடுப்புக்களை சர்வதேச அரசியல் அரங்குகள், கொள்கை வகுப்பு தளங்கள், போன்ற பல அரசியல் இராஜதந்திர தளங்களில் முன்னெடுக்கும்.
பிரித்தானிய தமிழர் பேரவை
No comments:
Post a Comment