Translate

Sunday, 18 March 2012

யாழ்ப்பாணத்தில் இப்போதும் போர்ச் சூழ்நிலையே நிலவுகிறது அவர்களுக்கான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் ரணில்


newsயுத்தகாலத்தில் இருந்ததைப் போலவே வடபகுதி மக்கள் இப்போதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது முகங்கள் தமக்கான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு தெரிவித்தார் ஐ.தே.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இங்கு பெண்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறி சர்வதேசத்துக்குக் கொண்டு செல்வோம். மற்றும் வெள்ளை வான் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக விரோதப் போக்காக நடக்கும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வடக்கு, தெற்கு பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
யாழ். வந்த ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் காலை சாவகச்சேரிக்குப் பயணம் செய்தார். அங்கு சாவகச்சேரி பஸ் நிலை யத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.
இங்கு கூடியிருக்கும் மக்களைப் பார்க்கும் போது இன்னமும் அவர்களின் விடுதலை கிடைக்கவில்லையென நினைக்கின்றேன். யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனதில் உள்ள பயம் இன்னமும் நீங்கவில்லை. வெள்ளை வான் கலாசாரம் இன்னும் தொடர்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

அனைத்து மக்களும் இணை ந்து அரசுக்குப் புதிய பாடத்தைப் படிப்பிக்க வேண்டும். யுத்த காலத்தைப் போல் இப்பொழுதும் வடக்கு கிழக்கு மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டுமெனப் போராடும் எங்களை கூடாதவர்கள் என்கின்றார்கள் . அதுமட்டுமல்ல அரசியல் சுதந்திரம் கிடைக்க வேண்டும். வாழ்வாதார நிலைகள் கிடைக்காத நிலையில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு வருடத்தின் பின்னர் இப்பகுதிக்குப் பயணம் செய்துள்ளேன். எதிர்காலத்தில் இங்கு அடிக்கடி வந்து இப்பகுதி மக்கள் படும் வேதனைகளை நாடாளும ன்றத்தில் எடுத்துரைப்பேன்.
தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். புரையோடியுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் என்ற ரீதியில் மூவின மக்களும் ஒன்றிணைய வேண்டும்.

இப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக எமது கட்சியின் சார்பில் பணியாற்றிய தியாகராஜா மகேஸ்வரன் விட்டுச் சென்ற பணியினை அவரது பாரியார் திருமதி விஜயகலா மகேஸ் வரன் உங்கள் பகுதி களுக்கு மேற்கொண்டு வருகிறார். அவரின் தலைமையில் உங்கள் பகுதிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கு பயணம் செய்தனர்.
சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இறங்கிய  இவர்களை சுஜீபா என்னும் யானை மாலை போட்டு வரவேற்றது. பஸ்நிலையத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக தனங்கிளப்பு வீதியில் உள்ள சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வணிகர்களால் அவர்கள் வரவேற்கப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூறாவளிப் பயணம் செய்தனர். இதன் போது பொதுமக்களைச் சந்தித்து உரையாடும்போதே மேற்படி அறைகூவலை எதிர்க்கட்சித் தலைவர் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, ஜெயலத் ஜெயவர்த்தன, விஜயகலா மகேஸ்வரன், பி.எம்.சுவாமிநாதன், வேலாயுதம் ஆகியோரும் நேற்றுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தனர்.
கச்சாயில்
கச்சாயில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், நேற்றுக் காலை பொதுமக்களைக் கட்டாயமாக  வான்களில் ஏற்றி ஆர்ப்பாட்டத்துக்குக் கொண்டு சென்றதால், குறைந்தளவிலான பொதுமக்களையே சந்தித்தனர்.
இதன் போது, தாம் மீன்பிடித் தொழிலையே நம்பியிருப்பதாகவும் ஆனால் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஒழுங்காகத் தொழிலுக்குச் செல்ல முடியவில்லையெனத் தெரிவித்தனர். வருமானக் குறைவினால் வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். யுத்த காலத்தில் கடத்தப்பட்ட தங்கள் பிள்ளைகளை விடுவித்துத் தருமாறும் கோரினர்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜெனிவாப் பிரச்சினை பெரிய பிரச்சினையல்ல. முதலில் கச்சாய்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அமைச்சரிடம் சொல்லுங்கள் என்றார்.
நெல்லியடி
நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இந்த ஆட்சியில்தான் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. நாம் தற்போது அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய தருணம். நாம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றார்.
பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களைச் சந்தித்த பின்னர் ரணில் குழுவினர் பொலிகண்டி கந்தவனக்கடவை ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பின், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்துக்கும் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் தொண்டமானாறுடன் இணைந்து மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படாத அக்கரைப் பிரதேசத்துக்குச் சென்று அந்தப் பிரதேசத்துக்கு வந்திருந்த மக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர். இதன் போது அந்த மக்கள் தமது அக்கரைப் பகுதி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், தம்மை மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீர்வேலி சமூக அபிவிருத்தி மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற நபருக்கு எதிராக ஏன் உரிய விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்படி சிறுமியைக் கொன்ற நபர் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை. சேனாதிராஜாவைக் கொல்ல முயன்ற நெப்போலியனின் வலது கரமாகச் செயற்பட்டவர்.
இந்த அரசு சமூக விரோதச் செயல்களையே விரும்புகின்றது. எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு வடக்கு, தெற்கு பேதமில்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும். வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தெற்கில் நாங்களும் தனித்துப் போராடுவதால் பயனில்லை. அதனை இந்த அரசு இனவாதத்தைத் தூண்டி அடக்கி விடும் என்றார்.
இதன் பின்னர் ரணில் குழுவினர் சுன்னாகம் சந்தைப் பகுதி வர்த்தகர்களையும், தொடர்ந்து தெல்லிப்பழையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட தந்தை செல்வாபுர மக்களையும் சந்தித்தனர்.
இதன்போது வலி. வடக்கு மக்கள், தமது பிரதேசங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு வசதிகள், மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ அரசு வலி. வடக்கை அழிக்க முயற்சிக்கின்றது. இந்தப் பகுதியிலிருந்து எத்தனை தலைவர்கள் தோன்றினார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் முன்பு இந்தப் பகுதிக்கு பாடசாலை ஒன்றைத் திறந்து வைக்க வந்துள்ளேன். தற்போது இந்தப் பகுதியைப் பார்க்கையில் கவலையாக இருக்கின்றது என்றார்.
அதன் பின்னர் மாதகல், அராலி, மானிப்பாய் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.

No comments:

Post a Comment