Translate

Sunday, 25 March 2012

அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை -தேவராஜ் .


அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை -தேவராஜ் .

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது.
இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து ““இந்தப் போரில் வெற்றியடைவோம்” என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்து. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது.

தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன. அமெக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலைமை வகித்துள்ளன. பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்பதே செய்தி.
ஆனால், இலங்கை ஒரு வாக்கினாலேயே பிரேரணை வெற்றி பெற்ற தாக கூறுகின்றது. அதாவது ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்துள்ள அதேவேளையில் நடு நிலைமை வகித்த நாடுகளும் தமக்கு சார்பாகவே இருந்தன என்று கூறி தமக்கு மொத்தமாக 23 வாக்குகள் கிடைத்துள்ளன என இலங்கை கூறி வருகின்றது.
எது எப்படியோ மேலதிகமாகக் கிடைத்த ஒரு வாக்கிலோ அல்ல ஒன்பது வாக்கிலோ பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. இங்கு எண்ணிக்கையை விட பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தான் முக்கியமானது.
அமெக்கப் பிரேரணையின் வெற்றியுடன் இலங்கை, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துடனான புதிய மோதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.
யார் யாருக்கோ பொறிவைத்து தமிழர்களுக்கு எதிரான அரசியலை மிக இலாவகமாக கையாண்ட இலங்கை தற்போது அமெரிக்கா வைத்துள்ள சிறிய பொறியில் சிக்கியுள்ளது.
இந்தப் பொறியில் சிக்காதிருக்க பல்வேறு வியூகங்களை அமைத்து செயற்பட்டபோதும் அமெரிக்க இராஜதந்திரத்திற்கு முன் இலங்கை தோற்றுப்போய் நிற்கின்றது. தற்போது அமெரிக்கப் பொறியில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்ற சிந்தனையில் இலங்கை மூழ்கிப்போய்க் கிடக்கின்றது.
உள்நாட்டில் தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையிலான நிலைமையையும் உருவாக்கிக் கொண்டுள்ளது.
அந்த வகையில் ஜெனீவா பிரேரணைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், ஆக்ரோஷமான கோசங்களும் தற்போதைக்கு நிறுத்தப்படமாட்டாது என்பதே உண்மையாகும்.
உண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு இலங்கை வைத்த பொறிதான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு. தமிழர் தரப்பின் அனுரணையுடன் இதனை இலங்கை அரங்கேற்ற முனைந்த போதும் தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாட்டால் இது சாத்தியப்படாது போய்விட்டது.
ஆனால் தற்போது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணையை அரசாங்கம் கோரவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இது உண்மையானால் சிங்கள மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது தெரிந்த விடயமே.
ஜெனீவா பிரேரணைக்கு எதிராக கோஷம் போட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு என்ன பதில் தரப் போகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த அணுகு முறையை அமெரிக்கா உட்பட அதன் பின்னால் உள்ள சர்வதேச சமூகம் எவ்வாறு கையாளப் போகின்றன? என்பதைத் தீர்மானிக்கும் கால கட்டமாக இனிவரும் காலங்கள் அமையப் போகின்றன. இலங்கையைப் பொறுத்து அமெரிக்காவும் தமிழ் நாடுமே தமக்கு சாதகமான சூழ்நிலையை சுக்கு நூறாக்கின என்ற ஆதங்கத்தில் உள்ளது.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி சென்னை சென்றிருந்த வேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
அமெரிக்காவின் வர்த்தகம், முதலீடு தொடர்பானதாகவே ஹிலாரியின் சென்னை விஜயம் அமைந்திருந்ததாக கூறப்பட்டபோதும் அதற்குமப்பால் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பாகவும் அவ்வேளையில் பேசப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
அதாவது இந்திய மத்திய அரசுக்கான நெருக்குதலை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா அப்பொழுதே திட்டமிட்டிருந்தது என்பதை ஹிலாரி கிளின்டனின் தமிழக விஜயம் தற்பொழுது உணர்த்தியுள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்பது அமெரிக்காவால் எப்பொழுதோ திட்டமிடப்பட்டு விட்டது. இதற்கான காய்களும் ஏற்கனவே நகர்த்தப்பட்டிருந்தன என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.
ஜெனீவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தமைக்கு தமிழக நிகழ்ச்சிகள் முக்கிய காரணியாக அமைந்துள்ளன. தி.மு.க. வைப் பொறுத்து மத்திய அரசுக்கான நெருக்குதல் என்பது ஒரு கண்துடைப்பே. தி.மு.க. இந்திய மத்திய அரசில் இருந்து விலகப் போவதில்லை. ஜெனீவா விவாகாரத்திற்காக அத்தகையதோர் முடிவை தி.மு.க. உண்மையிலேயே எடுத்திருக்குமாக இருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
மத்திய அரசு தி.மு.க.வின் முடிவால் வீழ்ந்திருக்குமாக இருப்பின் தற்பொழுது தி.மு.க. இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தாக வேண்டும். இருப்பதை இழந்துவிட்டு இன்னுமொரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலையில் தி.மு.க. இல்லை. மாறாக இருந்ததையும் இழந்து நாடாளுமன்ற ஆசனங்களை அ.தி.மு.க. வுக்கு தாரை வார்த்து கொடுப்பதாகவே அமையும். இந்த ஒரு நிலையை உருவாக்கிக் கொள்ள தி.மு.க.
விரும்பாது. இருந்தும் ஒட்டுமொத்த தமிழகம் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தில் தி.மு.க. தானும் பங்கு கொண்டு விட்டது.
நிலைமை இவ்வாறிருக்க ஒரு சில எமது தமிழ் அரசியல்வாதிகள் தமது நெருக்குதல் காரணமாகவே ஜெனீவா விவகாரத்தில் இந்தியாவின் மனமாற்றம் ஏற்பட்டதாக உரிமை கொண்டாடின என்ன? என்ற நப்பாசையிலான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்குமப்பால் அரசியல் அரியாசனக் கனவில் சஞ்க்கும் ஒருவர் இந்திய தூதரகதின் முன்னாள் இராஜதந்தியுடனான தொடர்பை வைத்து இந்தியாவின் மனதை மாற்றியதாக சொந்தம் கொண்டாடுவதாகவும் செய்திகள் கசிகின்றன.
இவைகளனைத்தும் ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஜெனீவா விவகாரத்தை தமக்கேற்ற அரசியலாக மாற்றி ஜெனீவா விவகாரத்தை தமக்கேற்ற அரசியலாக மாற்றி குளிர்காய முற்படும் கூட்டம் ஒருபுறம். மறுபுறமும் பிரேரணையுடன் இலங்கையியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற அங்கலாய்ப்பில் இன்னுமெ பெரிய அரசியல் கட்சி வியூகம் வகுத்துக் கொண்டிருகிறது. ஆனால் அரசு தரப்பு தனக்கு நாடாளுமன்றத்லுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கூடாக நாடாளுமன்றத்தின் காலத்தை மேலும் இரண்டொரு வருடங்கள் கூட்டிக் கொள்வதற்கான நிலைப்பாட்டுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து தமது எதிர்பார்ப்பில் மண்விழுந்ததாக மனத் தாங்கலில் உள்ளது.
மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளாகட்டும் சிங்களக் கட்சிகளாகட்டும் அரசியலை தமக்குச் சாதகமாக்கி குளிர் காய்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.
நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
வி.தேவராஜ்

No comments:

Post a Comment