Translate

Sunday, 25 March 2012

இனிமேலும் ஏமாற்ற முனைந்தால் கசப்பான பாடங்களை கற்க நேரிடும்


இனிமேலும் ஏமாற்ற முனைந்தால் கசப்பான பாடங்களை கற்க நேரிடும் .

ஐ .நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டை சரியானதொரு பாதையில் வழிநடத்த அரசாங்கம் தவறியுள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தீர்மானம்.
அந்த உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

அமெரிக்கா இந்தளவுக்கு இலங்கையை எதிர்ப்பதற்கு நாம் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண கேள்வி எழுப்பியுள்ளார். இது அப்பாவித்தனமானதா அல்லது அவர் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலா என்பது புரியவில்லை.
முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பெரும் அவலங்களோடு கழிந்து போனாலும், அதற்கடுத்த புனர்வாழ்வு, பொறுப்புக்கூறல், மீள்கட்டுமானம் என்று பல்வேறு வழிறைகளின் ஊடாக தமிழ் மக்களின் நம்பகதன்மையை அரசாங்கத்தினால் வென்றிருக்கக் கூடிய நிலை இருந்தது.
போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் காயங்களால் தமது இயல்பு வாழ்வைப் பறிகொடுத்திருந்தாலும், தமது சொத்துகள் உடைமைகளை இழந்து பொருளாதார வசதிகளைப் பறிகொடுத்திருந்தாலும், வருடக்கணக்கில் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், போன் முடிவில் சரணடைந்த கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிய முடியாத நிலையில் இருந்தாலும் கூட, ஒரு விடயத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டிருந்தனர்.
இனிமேல் போர் ஒன்று சாத்தியமில்லை, அரசியல் வழிமுறைகளின் மூலமே தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.
இன்னொரு வகையில் சொல்லப் போனால், கற்பனையில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்கள் தவிர்ந்த தமிழர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, இனிமேல் இலங்கை அரசுடன் பேசியே ஒரு தீர்வை எட்ட முடியும் என்று நம்பினார்கள்.
அரசாங்கம் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது. இன்று இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்கா பகிரங்கமாகச் சொல்கிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் இதையே சொல்கிறார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இதே கருத்துத்தான் எதிரொலித்தது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை என்ற கருத்து அமெரிக்காவிடம் வலுவாக காலூன்றி விட்டது.
இந்தியாவுக்குக் கூட இதே வருத்தம் உள்ளது. வெளிநாடுகளிடம் இந்த அவநம்பிக்கை இப்போது தான் வந்திருக்கிறது. ஆனால், போர் முடிந்த பின்னர் தமிழ் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை அரசாங்கம் படிப்படியாக தவற விட்டுக் கொண்டே வந்தது.
போர் முடிவுக்கு வந்தபோது, அரசாங்கத்தை எதிர்க்கும் துணிவு, சிங்கள மக்களிடத்திலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த வேறெந்த தமிழர் தரப்பிடமோ இருக்கவில்லை. ஆனால் இன்று சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் அரசின் செயற்பாடுகளை எதிர்க்கின்றனர்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை அரசாங்கம் தவற விட்டுள்ளதை நீடித்த அமைதிக்கான வாய்ப்பை நழுவ விட்டுள்ளதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இதைவிட விடுதலைப் புலிகளுடனான போரின் போது, அரசுக்கு சார்பாக செயற்பட்ட அல்லது ஆதரவுக் கருத்துகளையாவது வெளியிட்டு வந்த தமிழ்க்கட்சிகள், தலைவர்கள் யாரும் இப்போது அரசதரப்பில் இல்லை.
ஆக, டக்ளஸ் தேவானந்தாவும், முரளிதரனும் சந்திரகாந்தனும் தான் அரசுக்கு சார்பாக கருத்துகளை வெளியிடுகிறார்கள். அதன் சொல்லுக்கேற்ப ஆடுகிறார்கள்.
வேறெந்த தமிழ் அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அரசாங்கத்துக்குச் சார்பாக ஒரு அறிக்கையை வெளியிடக் கூட இப்போது தயாராக இல்லை.
ஏனென்றால் அவர்கள் தமிழ்மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டிருப்பது மட்டு மல்ல. அரசின் செயற்பாடுகள் மீது ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
போரின் முடிவு கசப்பானதாகவே அமைந்தாலும், நீதியான, நியாயமான, தீர்வு ஒன்றின் ஊடாக சமாதானம் அடையப்படுவதை வரவேற்றவர்கள் இப்போது ஏமாற்றமடைந்து போயுள்ளனர்.
இந்த ஏமாற்றங்களை ஏற்படுத்தியது அரசாங்கம்தான். போர் முடிந்த மூன்றாண்டுகளில் சில பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தவிர்ந்த வேறெந்த உருப்படியான செயற்திட்டத்தையும் அரசாங்கம் தமிழர்களுக்காக மேற்கொள்ளவில்லை.
அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு அப்பால், வடக்கில் இந்த மூன்றாண்டுகளில் பெரியளவிலான எந்தவொரு பொருளாதார முதலீடு கூட மேற்கொள்ளப்படவில்லை.
வடக்கை ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட பகுதியாக வைத்துக் கொண்டு, எந் நேரமும் அதன் மீதான கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துள்ளபடியே, இந்த மூன்றாண்டுகளிலும் ஆட்சியை நடத்தியுள்ளது அரசாங்கம்.
இந்தக்காலப் பகுதியில் ஆட் கடத்தல்கள் ஓயவில்லை. காணாமல் போதல்கள் நின்று விட வில்லை. படுகொலைகளும் தொடர்கின்றன.
அவை தொடர்பாக நியாயமான விசார ணைகளும் இடம்பெறுவதில்லை. இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு மட்டும் ஏமாற்றத்தைக் கொடுக்கவில்லை சர்வதேச சமூகத்துக்கும்தான் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இதனால்தான் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றத் தவறினால் இன்னொரு போர் வெடிக்கும் அபாயள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கிறது.
இன்னொன்று ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வைத்து அரசாங்கம் செய்த பிரசாரங்களும், சிங்களப் பேரினவாத சக்திகள் வெளியிட்ட அறிக்கைகளும், போராட்டங்களும் தெளிவானதொரு செய்தியை கூறியுள்ளன.
இன்னமும் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்பதே அது. மனித உரிமை மீறல்கள் என்ற பிரச்சினை கிளம்பும்போது அதற்குப் புலிச்சாயம் பூசி திசை திருப்ப முனைகிறார்கள்.
உள்ளூர் அரங்கில் இதை எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொண்டனரோ அதையே சர்வதேச அரங்கிலும் பயன்படுத்திக் கொண்டனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகைப் புலிகளுக்குப் பால் வார்ப்பதாக கூறுகின்றனர்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் புலிகளின் பணத்துக்காக அவர்களின் சொல்லுக்கு ஆடுவதாக சொல்கின்றனர். இந்தளவுக்கும் புலிகள் இயக்கத்தை அரசாங்கம் அழித்து மூன்றாண்டுகளாகி விட்டன.
இப்போது புலிகள் இயக்கத்திடம் அடிப்படைக் கட்டுமானங்களே கிடையாது. இந்த நிலையில், ஜெனீவா தீர்மானத்துக்காகப் புலிகள் 500 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகக் கதையைக் கிளப்பியுள்ளது.
தனக்கு எதிரான எல்லா நகர்வுகளையும் அரசாங்கம் புலிகளோடு தொடர்புபடுத்தியே அதனை மறைக்கவே முற்படுகின்றது.
தமிழர்களின் விவகாரம் புலிகளை விட்டு விலகி மூன்றாண்டுகளாகிவிட்டது. இல்லாத ஒன்றை வைத்து அரசாங்கம் காட்டும் மாயை வித்தையை உலகம் நம்பத் தயாராக இல்லை.
யதார்த்தத்துக்கு முரணான அரசின் இந்த நகர்வுதான் சர்வதேச அரங்கில் அரசு தோல்வியைச் சந்திக்கக் காரணம்.
போருடன் புலிகளின் காலம் முடிந்து விட்டது. இப்போது பிரச்சினை புலிகளுமல்ல.
தமிழர்களுமல்ல.
தமிழர்களுக்கு நீதியான நியாயமான வாழ்வை உறுதி செய்ய மறுக்கும் பேரினவாதச் சிந்தனைதான் இந்த நிலைக்குக் காரணம்.
ஜெனீவா தீர்மானம் கற்றுக் கொடுத்துள்ள இந்தப் பாடத்தில் இருந்தாவது அரசாங்கம் தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் இதுபோன்ற இன்னும் பல கசப்பான பாடங்களைக் கற்க வேண்டியேற்படலாம்.

No comments:

Post a Comment