Translate

Sunday, 25 March 2012

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது – தலைங்கம்!


இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது – தலைங்கம்!

 உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலைங்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது,
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் முடிவு.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுற்றிருக்கும் சூழலில் பாதிக்கப்பட்டு, நிராதரவாக நிற்கும் இலங்கையின் பூர்வகுடியினரான ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்திய அரசு வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமும், துரதிருஷ்டவசமாக, தமிழக அரசியலுக்கான நாடகமாக அமைந்ததே தவிர, உளப்பூர்வமான நடவடிக்கைகளாக அமையவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அறிவித்த எந்தப் பணிகளையும் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபட்ச அரசு செய்யவில்லை. இதற்காக இந்திய அரசு பல முறை அரசு அதிகாரிகளை அனுப்பியும் அதை அவர்கள் சட்டை செய்யவில்லை. இலங்கை உறுதி கூறியபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் நடக்கவே இல்லை.
இத்தனை காலம், இலங்கையிடம் அண்டை நாட்டுடனான நல்லுறவு கெட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் பணிவாக இருந்து வந்ததுதான் இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. தற்போதுதான், கடுமையாகவும் நடந்துகொள்ள முடியும் என்பதை முதன்முறையாக நாம் இலங்கைக்குப் புரிய வைத்திருக்கிறோம். இந்த நிலைப்பாட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால், இந்தியா நேரடியாகக் களத்தில் இறங்கி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்கியிருக்காவிட்டாலும், இலங்கை அரசின் செயல்பாடுகளை நாம் கண்காணித்திருக்க முடியும். வெறுமனே இலங்கை அரசிடம் பணமும் பொருளும் கொடுத்துவிட்டு, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக் கெட்ட துரதிருஷ்டவசமான நிலைமை ஏற்பட்டிருக்காது.
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் – ரஷியா, சீனா, வங்கதேசம், மாலத்தீவு, சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நின்றபோது, இலங்கையை வெளிப்படையாக இந்தியா எதிர்த்து நின்று, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் திருப்திக்காக இதைச் செய்தது என்று இந்த முடிவை அவசரப்பட்டு மலினப்படுத்துவது நியாயமில்லை. நாளையும் ராஜீய உறவுகள் அறுந்துபோகக்கூடாது என்ற உணர்வுடன் இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீவிரமாக இயங்கும் அரசியல் அமைப்புகள் சில, இந்தியா மேற்கொண்டுள்ள ராஜதந்திர முடிவை இரட்டை வேடம் என்று விமர்சனம் செய்துள்ளன. தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே, தனியொரு நாட்டின் மீது இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது சரியல்ல என்று சுற்றறிக்கை அனுப்பிய இந்தியா மீது தமிழக அரசியல் கட்சிகளுக்கு வருத்தம் இருந்தது. தீர்மானத்தின் சில பத்திகளில் இந்தியா திருத்தம் செய்தபோது இந்தக் கோபம் மேலும் அதிகமானது.
அதாவது, போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், ஐ.நா. சொல்லும் நடவடிக்கைகளை இலங்கை ஏற்று நடத்த வேண்டும் என்ற வார்த்தைகளை, “இலங்கை அரசின் ஒப்புதலுடன்’ என்று இந்தியா மாற்றியிருப்பதைத்தான் இவ்வாறு இரட்டை வேடம் என்று குறை காண்கிறார்கள். இது உணர்ச்சியின் மீது எழுப்பப்படும் வாதங்களே தவிர, ஓர் அரசாங்கம் என்று பார்க்கும்போது இத்தகைய அணுகுமுறை தவறல்ல. அதற்குப் பெயர் ராஜதந்திரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றால், அப்போது இந்திய அரசுதான் பேசியாக வேண்டும். மற்ற நாடுகள் வரப்போவதில்லை. அக்கறை கொள்ளப்போவதில்லை. ஒரேயடியாக இலங்கையை எதிர்ப்பது இத்தகைய ராஜீய நடவடிக்கைகளுக்குக் குந்தகமாக அமைந்துவிடும்.
“செய்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள், உங்கள் மீது நான் கோபமாக இருக்கிறேன்’ என்று சொல்லும்போது, பேச்சுக்கும் நட்புக்கும் இடம் இருக்கிறது. “நீ என் விரோதி’ என்று சொல்லும்போது நட்பு முற்றிலுமாக முறிந்துபோகும்.
எல்லைப் பிரச்னையால் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வங்கதேசத்துடனும் ஏற்கெனவே பிரச்னைகள் இருக்கும் நிலையில், இலங்கையுடன் பிரச்னை ஏற்பட்டு போர் மூளும் சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிவினை சக்திகளும், தீவிரவாத சக்திகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முள்ளில் விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்கும் லாவகம் இந்தப் பிரச்னையில் தேவைப்படுகிறது.
கோபம் கொள்ளவும் வேண்டும். காரியம் சாதிக்கவும் வேண்டும். முதல்முறையாக கோபத்தைக் காட்டியுள்ள இந்திய அரசு, காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே தவிர, இரட்டை வேடம் போடுகிறது இந்திய அரசு என்று குற்றம் கூறுபவர்கள் பிரச்னையை வளர்க்க விரும்புகிறவர்கள். சொல்லித் தெரிவதில்லை நாடாளும் வித்தைகள் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள்!

No comments:

Post a Comment