ஜெனீவா தீர்மானம்; இதுவரை எந்தவொரு நிலைப்பாடும் இல்லை பீரிஸின் கருத்து தனிப்பட்டது; அரசு அறிவிப்பு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்னமும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்களது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஜெனீவா தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் அரசு மறுத்தது.
ஜெனீவா தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் அரசு மறுத்தது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பதில் ஊடகத்துறை அமைச்சரும் பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழு அதற்கு வழங்கப்பட்டிருந்த ஆணைக்கு அப்பால் சென்று எல்லை கடந்து செயற்பட்டிருப்பதாகவும் எனவே அதனை முழுமையாக அங்கீகரிக்க முடியாத நிலையில் அரசு இருப்பதாகவும் அரசு தரப்பினர் கூறி வருகிறார்கள். இது தான் அரசாங்கத்தின் நிலைப்பாடா? என்று ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளையும் தொடுத்தனர்.
இவற்றுக்குப் பதிலளித்த பதில் அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்ததாவது;
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்க வில்லை.அது தொடர்பில் அமைச்சரவையில் எழுந்தமானமாக பேசப்பட்டதே தவிர ஆராய்வுக்குட்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் விரைவில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்.
இவ் விடயம் தொடர்பில் அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக ஆகிவிடாது. அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களாகும். நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை படிப்படியாக அமுல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதில் எந்த விதமான மாற்று முடிவும் கிடையாது. குறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி இணக்கப்பாட்டுடன் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அமைச்சர்களோ எம்.பி.க்களோ தெரிவிக்கும் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் எந்த விதமான யோசனைகள், திருத்தங்கள் மேற்கொள்வதாக இருப்பினும் அவை பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே அறிவிக்கப்பட வேண்டும் தனிப்பட்ட முறையில் வெளியிடப்படும் கோரிக்கைகள், அறிக்கைகளால் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்போ ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளோ அவர்களது திருத்தங்கள் கோரிக்கைகளை தெரிவுக் குழுவுக்கு சமர்ப்பிக்க முடியும். அதுமட்டும் அல்ல. அரசிலுள்ள கட்சிகளும் தமது கருத்துக்களை இதற்கு சமர்ப்பிக்க முடியும்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட முயற்சிக்கும் போது வடக்கு மக்களுக்கு வழங்கப்பட கூடிய அரசியல் தீர்வு தெற்கு மக்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. முழு நாட்டுக்கும் பொறுத்தமான அரசியல் தீர்வுக்கே அரசு முனைப்புக் காட்டுகிறது எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
No comments:
Post a Comment