Translate

Saturday 17 March 2012

நல்லிணக்க ஆணைக்குழு விவகாரத்தில் அரசுக்குள் தொடர்ந்தும் முரண்பாடு _


undefined
  நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனீவாவில் உறுதியளிக்கையில் இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசாங்கத்திற்குள்ளேயே இழுபறி நிலை தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்தது.

அன்று இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாயகம் இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லையென வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது வேடிக்கை என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றகையில்:நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் விடுதலைப்புலிகள் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும், யுத்தத்தின்போது மக்களை பலிக்கடாவாகப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் ஜெனீவாவில் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவோமென்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதியளித்துள்ளார்.

ஆனால் மறுபுறம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் தோன்றி இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

அறிக்கையில் புலிகள் மனித உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பிரபாகரனுக்கு பின்னர் கே.பி. யே புலிகளின் தலைவராவார் அரச பாதுகாப்பிலேயே உள்ளார்.

ஏன், கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எமது நிலைப்பாட்டையும் அதிலுள்ள முறைப்பாடுகளையும் எவ்வாறு அவற்றை திருத்திக் கொள்வதென்பதையும் தெளிவுப்படுத்தி அரசுக்கு கடிதம் அனுப்பினோம்.

ஒரு மாதம் கழிந்தும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. யுத்தத்தின்போது 10,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டனரென அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆணைக்குழு அமைச்சரை அழைத்து சாட்சியங்களை பெறவில்லை. அரசாங்கத்திற்குள் நல்லிணக்க ஆணைக்கு அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் குழு எது? ஏற்றுக் கொள்ளாத குழு எது? என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இச் சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கையில் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை சமாளிப்பதற்காகத் தான் நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் நிறுவியதாஎன்ற சந்தேகம் எழுகிறது.

தமரா குணநாயகம்

1988 89 களில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்தான் இந்த தமரா குணநாயகம். இன்று எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவில்லையென வாதாட இலங்கைப் பிரதி நிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறானவரின் செயற்பாடுகளை எவ்வாறு நம்புவது?

சுகபோகம்

ஜெனீவா பிரச்சினையை பூதாகரமாக்கி அதனை சமாளிப்பதற்கென இலங்கையிலிருந்து 52 பிரதிநிதிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களோடு இங்குள்ள இலங்கை அதிகாரிகளுமிணைந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவனருக்காக மூன்று வேளை உணவு தங்குமிட வசதிக்காக ரூபா 40,000 செலவாகிறது.

இவ்வாறு பல கோடி ரூபாய்கள் ஜெனீவா பிரச்சினையை வைத்து செலவழித்து சுகபோகம் அனுபவிக்ன்றனர்.

சனல் 4 சனல்4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உண்மை இருந்தால் விசாரணைகள் நடத்தப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களென அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையில் சனல் 4 காணொளியை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நிராகரிப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறது அரசாங்கம்.

வெளிநாட்டில் ஒன்று உள்நாட்டில் வேறொன்றைக் கூறி மக்களை ஏமாற்றும் அதேவேளை எமது இராணுவத்தை பலிக்கடாவாக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

யுத்த நீதிமன்றம்

எம்மை யுத்த நீதிமன்றத்திலோ, மின்சார நாற்காலியிலோ அமர வைக்க முடியாது ஏனென்றால் பாதுகாப்பை கவுன்ஸிலில் சீனாவும், ரஷ்யாவும் உள்ளது. எனவே இலங்கைக்கே ஆதரவு வழங்கும். அத்தோடு ரோம் உடன்படிக்கையிலும் நாம் கையொழுத்திடவில்லை என்றார். 
___

No comments:

Post a Comment