ஆவணங்களை உறுதிப்படுத்த மும்பை போலீசார் தமிழகம் சென்றனர்
மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் மீனவர் அடையாளத்தை உறுதிப்படுத்த மும்பை போலீசார் கன்னியா குமரி புறப்பட்டுச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை தாலுகா, குளச்சல் அருகேயுள்ள தூத்தூர், இரவிபுத்தன் துறை கிராமத்தை சேர்ந்தவர் சாபு. இவரது மீன் பிடி படகு பரலோக மாதா கடந்த 8ம் தேதி பழுது பார்ப்பதற்காக மும்பை துறைமுகத்திற்கு வந்தது. இந்த படகில் மீனவர்கள் டைட்டஸ் (35), விஜின் (20), கார்லோஸ் (62), மனோஜ் (19), சூசையார் (20),ரித்தீஸ் (19), நஸாரியா (45), கிறிஸ்டோபர் (60), பீட்டர் (42) ஆகிய 9 பேர் உள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் இவர்கள் படகுடன் மும்பை பாவுக்கா தக்காவில் மும்பை எல்லோ கேட் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பைதுறைமுகத்தில் நுழைந்ததும் படகை பதிவு செய்யாதது, சோதனையின்போது படகில் வேறு படகின் பதிவு ஆவணத்தின் பிரதி கிடைத்தது இவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. படகில் இருந்த அனைவருக்கும் இந்தி தெரியாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இது பற்றி அறிந்ததும் மும்பை மற்றும் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பிரமுகர்கள் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த விவகாரத்தில் கடற்கரை பாதுகாப்புத்துறை, கடல் பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இவர்களை விடுவிப்பது தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் 13, 14 தேதிகளில் அவர்களை விடுவித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் 15ம் தேதி மீண்டும் முழு விசாரணை செய்து அவர்கள் புலிகள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே மீனவர்களை எப்போது விடுவிப்போம் என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று விசாரணை அதிகாரி சொன்னார்.
இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் அவர்கள் படகின் ஸ்டார்ட்டரை பழுது நீக்கியதும் அதற்கான ரசீது அவர்களிடம் இருந்ததும் தெரியவந்தது. படகின் டிரைவர் டைட்டஸ், அவரது தந்தை கார்லோஸ், மீனவர் விஜின் ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அந்த ஸ்டார்ட்டரை பழுது பார்த்த எலக்ட்ரிக்கல் மெக்கானிக் எல்லோகேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டு அவர் பழுது பார்த்தது உறுதி செய்யப்பட்டது. கொச்சி துறைமுகத்தில் படகு பதிவு செய்திருப்பதற்கான ஆவணமும் கிடைத்தது.
போலீசார் மோப்ப நாய் கொண்டு படகில் மீண்டும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் படகில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் சிக்கவில்லை. அதேவேளையில் படகில் இருந்த 4 பேருக்கு அடையாள அட்டை இல்லை என்பதும், படகில் இல்லாத ஆட்களுக்கு அடையாள அட்டை இருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு அவர்களது அடையாள அட்டையின் பிரதி உடனடியாக ஈமெயிலில் வரவழைக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என்று தெரியவந்தது. இந்த மறுவிசாரணை நடைபெற்ற இரண்டு நாட்களும் இந்திய ஜனநாயக கட்சியின் மராட்டிய மாநில பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் உடனிருந்து மீனவர்களின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்தும், ஆவணங்களை தமிழகத்திலிருந்து வரவழைத்தும் போலீசார் மற்றும் மீனவர்களுக்கு உதவி செய்தார்.
இந்தநிலையில் அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மைதானா மற்றும் அவர்கள் மீது ஏதாவது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிய எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் நாராயன் ஆர். கட்கே, பாலாசாஹேப் டி. டோரே ஆகியோர் நேற்று (சனி) கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தமிழகம் புறப்பட்டுச் சென்றனர். இந்த மீனவர்களை விடுவிக்கும் பணியில் பெருமாள் அ. தேவன், பா.ஜ.க. மும்பை செயலாளர் ராஜா எம். உடையார் ஆகியோர் போலீஸ் விசாரணை மற்றும் தமிழகத்தில் உள்ள மீனவர் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெற உதவினர். இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி எம்பியான ஹெலன் டேவிட்சன் அடிக்கடி போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணையை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ஏ. டோகேயின் தலைமையில் இன்ஸ்பெக்டர் பரத் பொயிட்டே இது குறித்து விசாரணை செய்து வருகிறார். ஆவணங்களை சரிபார்த்து முடிந்த உடனே மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என்று பொயிட்டே தெரிவித்தார்.
மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விவரத்தை கடல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு மும்பை பிரமுகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மற்ற பிரமுகர்களும் மீனவர்களுக்கு உதவ முன் வந்தனர். இதில் மும்பை மாநகராட்சி நகர்மன்ற உறுப்பினர் கேப்டன் ஆர். தமிழ் செல்வன், ராஜேந்திரன், தம்பி செல்வா, நா. காமராஜ், அய்யர், அ. கணேசன், ரமேஷ், ஜான் கென்னடி, அறிவழகன், எம்.ஏ. உதயம் சுவாமி, நாடோடித் தமிழன், மதி, ஆகியோர் அடங்குவர்.
No comments:
Post a Comment