Translate

Friday 30 March 2012

நீதி கேட்டுச் சட்டப் புத்தகத்தின் உதவியை நாடி நிற்கும் இந்து ஆலயங்கள்!

நீதி கேட்டுச் சட்டப் புத்தகத்தின் உதவியை நாடி நிற்கும் இந்து ஆலயங்கள்!



கர்ப்பூரம் எரித்து அதில் சத்தியம் செய்து தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொண்ட எங்கள் சைவத் தமிழ்ப் பண்பாட்டை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
தெய்வத்தின் மீது கொண்ட பயபக்தியால் ஆலயங்களே உயர் நீதிமன்றங்களாக விளங்கின. ஆனால், அந்த ஆலயங்கள் இன்று பதவி காரணமாகவும் அதிகாரப் போட்டி காரணமாகவும் நீதிமன்றங்களில் நீதி கேட்டு நிற்கின்றன.


ஒரு காலத்தில் மக்கள் சமூகத்திற்கு தீர்ப்பு வழங்கிய ஆலயங்கள் இன்று பூட்டிய கதவைத் திறப்பதற்காகவும் கட்டிய தேரை ஓட வைப்பதற்காகவும் இடித்த கோயிலைக் கட்டுவிப்பதற்காக வும் சட்டப் புத்தகங்க ளின் உதவியை நாடி நிற்பது வேதனையிலும் வேதனை.

சைவ ஆலயங்களில் எழும் பிரச்சினைகளை ஊர்கூடி அல்லது இந்து மத குருமார் கூடி தீர்த்து வைப்பதென்ற முடிபை எடுத்திருந்தால், ஆலயங்கள் மீதான மரியாதை, தெய்வங்கள் மீதான பயபக்தி, விக்கிரகங்கள் மீதான வழிபாடு மிகவும் உன்னதமாகப் பேணப்பட்டிருக்கும்.

இதைவிடுத்து எடுத்த எடுப்பில் வழக்குத் தொடுப்பது, ஆலயத்தை நீதிமன்றில் நிறு த்தும் வேலையை பரிபாலன சபைகள், அறங்காவலர்கள் மேற்கொண்டதன் காரணமாக ஆலயங்கள் மீதான பயபக்தியும் மரியாதையும் தேய்வடையலாயிற்று.

இதன் காரணமாக இன்று இந்து ஆலயங்களில் மிக வேகமாகவும் மோசமாகவும் தெய்வ விக்கிரகங்கள் களவாடப்படுகின்றன. மகா கும்பாபிஷேம், சங்காபிஷேகம், சாத்துப்படி, தீபாராதனை, நெய்வேத்திய படைப்பு, மஞ்சத்தில் சப்பரத்தில் தேரில் திருத்தண்டிகையில் என்று தெய்வ விக்கிரகங்களை ஏற்றி திருவீதியுலா செய்தல் கூடவே அங்கப் பிரதட்சணம், காவடி, தீ மிதிப்பு, கர்ப்பூரச் சட்டி என நேர்த்தி தீர்த்து மகேஸ்வர பூசையும் செய்து மகிழ்ந்து வழிபாடாற்றும் அந்த தெய்வ விக்கிரகங்களை ஆலயத்தில் பூட்டி வைக்க, அன்று இரவே ஆலயக் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த அத்தனை விக்கிரகங்களும் திருடப்பட்டதான செய்தி.

எப்படி இருக்கிறது எங்கள் வாழ்வு? இப்படியே விக்கிரகங்கள் திருடப்படுமாக இருந்தால் ஆலயங்களில் இடம்பெறும் வழிபாட்டு பண்பாட்டின் நிலைமை என்னவாகும்? இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் தொடருமாக இருந்தால், ஆலயங்கள் மீதான நம்பிக்கைகள் முற்றாக அற்றுப் போகும்.

எனவே தெய்வ விக்கிரகங்கள் களவாடப்படுவதும் களவாடப்பட்ட அவ்விக்கிரகங்கள் தென்பகுதிக்கு கடத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் ஆலய புனரமைப்பும், திருக்குடமுழுக்கும் அர்த்தமற்றவையாகிவிடும்.

எனவே எங்களைக் காப்பாற்றும் என்றெண்ணி இருந்த தெய்வ விக்கிரகங்களைக் காப்பாற்றுங்கள். அது காப்பாற்றப்பட்டால்தான் மக்கள் வாழ்வு காப்பாற்றப்படும்.

No comments:

Post a Comment