Translate

Friday, 16 March 2012

இந்தியா, அமெரிக்காவின் உறவை துண்டித்தால் நிம்மதியாக வாழலாம் _


  இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. 

இதனால் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவ வீரர்களையும் தூக்குமேடை வரையில் கொண்டு சென்று விடும்.

எனவே அதனை தடுத்து நிறுத்த அனைத்து இன மக்களும் ஓரணியில் செயற்பட வேண்டும் எனவும் அவ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சௌசிறிபாயவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில்,

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் செயற்படுகின்றன. உள்நாட்டிலும் ஐ.தே.கட்சியும் , ஜே.வி.பி.யும் நாட்டிற்கு எதிரான வகையிலேயே செயற்படுகின்றன. எவ்வாறாயினும் முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக் கொள்ள முடியாது. அரசாங்கம் தேசிய பிரச்சினைகளில் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. விற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கையில் அமைச்சர்களே கேலி செய்தனர். இதன் பின்விளைவுகளைத் தான் இன்று சந்திக்கின்றோம். எவ்வாறாயினும் தற்போது நாட்டிற்கு எதிரே உள்ள சவாலை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது ஆபத்தானதாகவே அமையும். அதே போன்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றவோ விசேட கண்காணிப்பு குழுவுக்கு அனுமதி வழங்கவோ கூடாது எனக் கூறினார். 
___

No comments:

Post a Comment