Translate

Sunday 22 April 2012

இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு மகிந்த மீண்டும் வாக்குறுதி; இலங்கைப் பயண முடிவில் சுஷ்மா தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு மகிந்த மீண்டும் வாக்குறுதி; இலங்கைப் பயண முடிவில் சுஷ்மா தெரிவிப்பு

news
 தமிழ் மக்களுடனான பிரச்சினைக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று (13 பிளஸ்) தீர்வு காணுவேன் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

 
நேற்றுக் காலை தன்னைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ், இதனைத் தெரிவித்தார். கடந்த ஜனவரியில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் ஜனாதிபதி இதே உறுதிமொழியை வழங்கினார் என்று செய்தியாளர்களிடம் கிருஷ்ணா தெரிவித்தார்.
 
ஆனால் பின்னர் தான் அப்படி எந்த உறுதி மொழியையும் வழங்க வில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ மறுத்திருந்தார். இது பற்றிச் சுஷ்மாவிடம் கேட்டபோது, "பதின் மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் சென்றே தீர்வு காணப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் தெரிவித்தார். அதை அவர் செய்வார் என்று நம்புகிறோம்'' என்றார்.
 
இலங்கைப் பயணம் குறித்து சுஷ்மா மேலும் தெரிவித்ததாவது:
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இப்போது அவசரமானதும் அவசியமானதுமாகும். நல்லிணக்கமும் அமைதியும் நீடித்திருப்பதற்கான பல வழிமுறைகளை இந்தப் பரிந்துரைகள் கொண்டுள்ளன. 
 
ஆகவே எமது இலங்கைப் பயணத்தின் மூலம் இந்தச் செய்தியையே இலங்கை நண்பர்களுக்குச் சொல்லி உள்ளோம். 2009 மே மாதம் ஆயுத முரண்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்ப்பதே எமது நோக்கம். அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசி இங்கு நடைபெறும்புனர்வாழ்வு, மீள்குடியமர்வு என்பன தொடர்பில் அறிவதற்காகவே இங்கு வந்தோம். 
 
அத்துடன் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலை குறித்து அறிவதற்கு எமது பயணத்தின் நோக்கமாகும்.
 
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை நாம் சந்தித்துப் பேசினோம். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. 
 
எங்களுடைய உடனடிக் கவனம் வடக்கு கிழக்கில் தான் இருந்தது. 30 வருட காலமாக ஆயுத முரண்பாட்டால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து அந்தப் பகுதிகள் எப்படி மீண்டு எழுகின்றன என்பதைப் பார்த்தோம். இடம் பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துவதில் முன்னேற்றம் காணப்படுகிறது என்பதை நாம் கண்டுகொண்டோம்.
 
இருந்தாலும் குறிப்பிட்டளவு மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பாதவரை மீள்குடியமர்வு முழுமையாக பூர்த்தியடையாது.
 
 அதேபோல புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளிலும் இன்னும் முடிக்க வேண்டியவை உள்ளன. அதற்கு உதவுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. பங்காளிகளாக என்றாலும் சரி உதவி என்றாலும் சரி நாம் தயாராக உள்ளோம். 
 
ஆயுத முரண்பாடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசில் தீர்வை, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவும் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளது. அத்துடன் காத்திரமான பரிந்துரைகளை அது தந்துள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கும் இலங்கையில் நல்லிணக்கமும் அமைதியும் நீடித்திருப்பதற்குமான பரிந்துரைகள் இதில் அடங்கி உள்ளன. அவற்றை அவசரமாக நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. 
 
இந்தப் பயணத்தில் எமது இலங்கை நண்பர்களுக்கு இதனையே செய்தியாக சொல்லி உள்ளோம். காணாமற்போனோர் , தடுப்பில் உள்ளோர், கடத்தப்பட்டடோர் பற்றி ஆணைக்குழு வழங்கி உள்ள பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிதன் அவசியத்தை இந்த நான்கு நாள் பயணம் தெளிவு படுத்தி உள்ளது. 
 
மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், உயர் பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், இராணுவத்திடம் இருக்கும் தனியார் நிலங்களை திருப்பி ஒப்படைத்தல், ஆயுதங்களை களைதல், மக்களின் நடவடிக்கைகளில் இராணுவ செல்வாக்கினை நிறுத்துதல், வடக்கில் பொது நிர்வாகத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பிலும் ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் எமக்கு உணர்த்தி உள்ளது.
 
இராணுவத்தை பொது மக்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றுவதற்கும், அதனை பாதுகாப்பு விவகாரத்துக்குள் முடக்குவதற்கும் இலங்கை அரசு நாடாளுமன்றில் வழங்கிய உறுதி மொழியை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.  
இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளும் போது, தமிழ் மக்களுக்கு சமத்துவமான  கௌரவமான  நீதியான , சுயமரியாதை கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஊடாக வழங்கி உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்று நாம் நம்புகிறோம். 
13 பிளஸ் என்பதற்குக் கீழ் இவையெல்லாம் செய்யப்படும் என்று கடந்த காலங்களில் எமக்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தரப்புகளும் விரைவான அரசியல் தீர்வு ஒன்றை காணக்கூடிய பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
 
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும் நாம் கோருகிறோம்.
இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் சில பூர்த்தியடைந்துள்ளமை எமக்குத் திருப்தி அளிக்கிறது. இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்  என்றார்.


No comments:

Post a Comment