Translate

Wednesday, 25 April 2012

தந்திரிகளின் மறுமுகம் - 50 - சேரமான்

தந்திரிகளின் மறுமுகம் - 50 - சேரமான்

சொந்த மண்ணில் தன்னாட்சியுரிமையை நிலைநாட்ட முற்பட்ட ஒரேயொரு குற்றத்திற்காக இருபத்தோராம் நூற்றாண்டில் மிகப்பெரும் இனவழிப்பை சந்தித்த தேசிய இனமாக இன்று ஈழத்தமிழனம் திகழ்கின்றது. இலட்சிய உறுதி தளராத உன்னத தலைவனின் வழிகாட்டலில், உயிரை வேலியாக்கிக் களமாடிய மாவீரர்களின் அதியுச்ச ஈகத்தில், அந்த மாபெரும் தலைவனுக்கு உறுதுணையாக நின்று தோள்கொடுத்த மக்களின் அர்ப்பணிப்பில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு சுவடின்றி துடைத்தழிக்கப்பட்டு, அங்கு சிங்களப் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.


இந்நிலைக்கு தமிழீழ தேசம் தள்ளப்பட்டமைக்கான காரணங்களை `உடற்கூறு ஆய்விற்கு` உட்படுத்துவது இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருந்ததில்லை. அன்றி இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்கு ஈழத்தமிழினம் தள்ளப்பட்டமைக்கு எவர் மீதும் பழிசுமத்துவதும் இக்
கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருந்ததும் கிடையாது.

எமது முதலாவது தொடரில் குறிப்பிட்டமை போன்று இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருந்தது.

இத் தொடர்களில் வெளிக்கொணரப்பட்ட தகவல்களுக்கான ஆதாரங்களாகவே இதுவரை காலமும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த கடிதங்கள் சிலவற்றையும் நாம் வெளியிட்டிருந்தோம்.

உண்மைகள் எவ்வளவு கசப்பானவை என்பதை நாமும், எமது வாசகர்களும் புரிந்து கொண்டதை விட எதிரியும், அவனது கைக்கூலிகளும் நன்கு புரிந்து கொண்டிருந்ததை இத்தொடர் வெளிவரத் தொடங்கிய ஓரிரு வாரங்களில் நாம் உணர்ந்து கொண்டோம். எம்மீது திட்டமிட்ட வகையில் எதிரியின் கைக்கூலிகளால் துரோக முத்திரை பதிக்கப்பட்டது.

அரசுகளின் அந்தரங்கங்களை திறந்து விட்டமைக்காக விக்கிலீக்ஸ் மீது தொடுக்கப்பட்ட ஊடகப் போரின் பாணியில் எமது ஊடகத்தின் மீது எதிரியின் கைக்கூலிகளால் வசைமழை பொழியப்பட்டது. ‘தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் சிங்கள புலனாய்வுத்துறையால் ஊடறுப்பு’, ‘புலிகளின் இராஜதந்திர தொடர்புகள் எதிரியிடம் சிக்கியது’ என்றெல்லாம் இத்தொடரை இலக்குவைத்து கட்டுக்கதைகள் புனையப்பட்டன.

இலண்டனின் சில இடங்களில் எமது பத்திரிகை சிங்களக் கைக்கூலிகளால் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்டது. உண்மைகள் மக்களை சென்றடைவதை தடுப்பதை இலக்காகக் கொண்டே இவ்வாறான கோழைத்தனமான கைங்கரியத்தை சிங்கள அரசின் கைக்கூலிகள் அரங்கேற்றினார்கள்.

ஆனால் உண்மை என்று தோற்றுப் போவதில்லை என்பதற்கு சான்றாக இத்தொடருக்கு எமது மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதை நாம் மறுக்க முடியாது: மறக்கவும் இயலாது. விக்கிலீக்ஸ் வெளிக்கொணர்ந்த உண்மைகள் அரசுகளை ஆட்டக்காண வைத்தது என்றால், ஈழமுரசுலீக்ஸ் வெளிக்கொணர்ந்த உண்மைகள் ஈழப்போராட்டத்தில் அரூப கரங்களாக மறைந்திருந்து ஊறுவிளைவித்த முகமூடி மனிதர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தது எனலாம்.

நாம் எந்தவொரு தனிமனிதர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை: அதற்கு மேற்குலக சனநாயக சட்டவரையறைகள் இடமளிப்பதுமில்லை. அவ்வாறு தம்மீது ஊடகப் போர் தொடுப்போருக்கு எதிராக சட்டத்தின் உதவியை நாடும் உரிமை ‘அவதூறுக்கு’ ஆளாகும் அனைவருக்கும் உண்டு.

நாம் வெளிக்கொணர்ந்த உண்மைகள் தனிமனிதர்கள் மீதான தாக்குதல்களாக இருந்திருந்தால் எம்மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: அதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் இருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எம்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியவர்களை இத்தொடரில் வெளிக்கொணரப்பட்ட தகவல்களுக்கும், ஆதாரங்களுக்கும் பதிலளிக்குமாறு நாம் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தோம்.

ஆனால் எமது அழைப்பிற்கு மௌனமே பதிலாக எதிரொலித்தது. சட்டத்தின் துணைகொண்டு எமது தொடரை நசுக்கப்போவதாக வாய்ச்சவடால் விடுத்தவர்கள் வாய்மூடி மௌனிகளாகினர். தமது பொய்முகம் கிழித்தெறியப்பட்ட நிலையில் தமது அரசியல் இருப்பு ஆட்டம் காண்பதை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேநேரத்தில் உண்மை என்ற நெருப்பாற்றில் தமது பொய்முகம் பொசுங்கிப் போவதையும் இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட சிங்களக் கைக்கூலிகளின் எண்ணம் இன்று பட்டவர்த்தனமாகி வருகின்றது. தமிழீழ விடுதலையை ‘புதுமையான வழிகளில்’ வென்றெடுக்கப் போவதாகக் கூறி சிங்கள அரசின் கைப்பாவையாக விளங்கும் கே.பி அவர்களால் பெரும் ஆரவாரத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்ட வி.உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையிலான நாடு கடந்த அரசு என்ற அமைப்பு கானல் நீரில் ஓடும் காகிதக் கப்பலாக மாறிவிட்டது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியைத் திசை திருப்பி, விடுதலையின் வீச்சை அதிகாரப் போட்டிகளுக்குள் நீர்த்துவிடச் செய்வதே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கே.பி அவர்களினதும், உருத்திரகுமாரனினதும் நோக்கமாக இருந்தது என்பதை நாடுகடந்த அரசின் இன்றைய நிலை பட்டவர்த்தனமாக்கி நிற்கின்றது.

2009 மே 18இற்கு முன்னர் இந்தியாவினதும், உலக வல்லாதிக்க சக்திகளினதும் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்வதில் உருத்திரகுமாரனும், அவரது சகபாடிகளும் கங்கணம்கட்டி நின்றதையும், அதற்கென அவர்கள் எடுத்த பகீரத பிரயத்தனங்களையும் இக்கட்டுரைத் தொடர் நிதர்சனமாக்கியிருந்தது.

தமிழீழம் என்பது தனது நிறைவேறாத கனவு என்று இன்று ‘கண்ணீர்’ விடும் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள், அன்று அதிகாரம் தனது கைகளில் கோலோச்சிய பொழுது அக்கனவை நனவாக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தமிழீழம் நாளை மலராது போனாலும், நாளை மறுதினமாவது மலரும் என்று இன்று ஞானோதயக் கருத்துக்களை வெளியிடும் கலைஞர் அவர்கள், அன்று நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்: ஈழத்தமிழர்களின் குருதியிலும், உயிர்க்கொடையிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ நடைமுறை அரசை தனியரசு நிலைக்கு உயர்த்தியிருக்க முடியும்.

மாறாக தனது ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காக ‘கூண்டோடு பதவி விலகுதல்’, ‘போர்நிறுத்தம் வரும் வரை பட்டினிப்போர்’ என்றெல்லாம் நாடகமாடி இந்திய வல்லா
திக்கத்தின் சதிக்கு கலைஞர் துணைபோனார். தேனிசை செல்லப்பாவின் பாடல் வரிகளில் கூறுவதானால் ஒரு விதத்தில் சோனியா காந்தி ஆடிய நாடகத்திற்கு கதை வசனம் எழுதிய பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும் எனலாம்.

அதேநேரத்தில் இன்று ஈழத்தமிழர்களுக்காக குரலெழுப்பும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் துணிச்சலையும், மனிதநேய உணர்வையும் நாம் மெச்சாமல் இருக்க முடியாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் வழிநின்று ஈழத்தமிழர்களுக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதுணை நிற்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் போரின் இறுதி வாரங்களில் தமிழீழ மண்ணிலிருந்து எழுந்த குரல் விழலுக்கிறைத்த நீராகிவிடவில்லை என்பதையே ராஜபக்ச மீது இன்று தமிழக முதல்வர் போர்தொடுத்திருப்பது உணர்த்திநிற்கின்றது.

தனது சொல்லுக்குக் கட்டுப்படும் அரசு டில்லியில் அமைந்தால் தனி ஈழத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக முள்ளிவாய்க்கால் போரின் பொழுது செல்வி ஜெயலலிதா அவர்கள் அளித்த உறுதிமொழியை ஈழத்தமிழினம் மறந்துவிடவில்லை. காலம் கனியும் பொழுது தனது உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அவர் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களுக்கு உண்டு.

காலத்தின் தேவை கருதி இவ்வாரத்துடன் இந்தத் தொடர் முடிவுக்கு வந்தாலும், தமிழீழத் தனியரசு என்ற கனவு நனவாகும் வரை உண்மைகளை ஆதாரபூர்வமாக வெளிக்கொணரும் எமது பணி தொடரும். இந்த வகையில் கட்டுடைந்து வெளிவரத் தொடங்கியுள்ள உண்மைகளின் முதலாவது வருகையின் முடிவாகவே இத்தொடர் முற்றுப் பெறுகின்றது.
(முற்றும்).

நன்றி : ஈழமுரசு.

No comments:

Post a Comment