Translate

Monday 23 April 2012

Apr23 நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சேருமாறு இந்தியக் குழு விடுத்த கோரிக்கை மறுப்பு!


இலங்கையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அரசு அமைக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. இந்தக் குழுவில் சேர வேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விடுத்த கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக "தினமணி' நிருபரிடம் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியது:
இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு அக்கறையுடன் முயற்சித்து வருகிறது என்று உலகத்தை நம்பச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இது ஏமாற்று வேலை. தாமதப்படுத்தும் தந்திரம்.
இதற்கு முன் இலங்கை அரசு அமைத்த நாடாளுமன்றக் குழுக்கள், ஆணையங்கள், குழுக்கள் போன்றவை தந்திருக்கும் அனுபவங்களில் இருந்து இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
வரும் நவம்பர் மாதம் இலங்கை மனித உரிமை நிலைமை தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் வர இருக்கிறது. அப்போது, "இலங்கையில் இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன; அதனால் மனித உரிமைகள் தொடர்பான விஷயத்தில் எங்களுக்கு கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும்' என்று கோர வேண்டும் என்பதே இத்தகைய குழு அமைக்கப்படுவதற்கான நோக்கமாகும் என்றார் பிரேமச்சந்திரன்.
நாடாளுமன்றத் தேர்வுக்கு குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடம் பெற வேண்டும்'' என்று இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை சென்றிருந்த இந்தியக் குழுவினர் கடந்த சனிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தனர். நாடாளுமன்றக் குழுவில் சேர கூட்டமைப்பைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸையும் சுஷ்மா கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது.
வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்று வரலாறு இருப்பதன் காரணமாகவே இந்த அழைப்பை ஏற்க முடியவில்லை'' என்று பிரேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
1990-களில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக மங்கள மூனிசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கூடி விவாதித்தது. ஆனால், இந்தக் குழுவின் பரிந்துரைகள் எதுவும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
இதன் பிறகு அமைக்கப்பட்ட மற்றொரு நாடாளுமன்றக் குழு, அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் சாசன வரைவைத் தயாரித்து அளித்தது. ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த வரைவை நாடாளுமன்றத்துக்குள்ளேயே எரித்ததால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.
ராஜபக்ச பதவிக்கு வந்தபிறகு, அதிகாரப் பகிர்வு தொடர்பாக தீர்வு காண்பதற்கு நிபுணர்கள் குழுவின் உதவியுடன் செயல்படக் கூடிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு (ஏ.பி.ஆர்.சி.) அமைக்கப்பட்டது. ஆனால் இந்த இரு குழுக்களின் யோசனைகளும் நடைமுறைப்படுத்தப்படயில்லை.
2010-ம் ஆண்டில் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அமைக்கப்பட்டது. அறிக்கையும் அளித்தது. ஆனால், இந்த அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று அமைச்சர்கள் ஜி.எல்.பீரீஸ், நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வெளிப்படையாக அறிவித்தனர். உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்தக் குழு தெரிவித்த யோசனைகள் கூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
கடந்த ஜனவரியில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று ராஜபக்ச உறுதியளித்தார். ஆனால், கிருஷ்ணா இந்தியாவுக்கு திரும்பும் முன்னரே, அப்படியொரு உறுதியைத் தாம் அளிக்கவில்லை என்று ராஜபக்ச மறுத்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முழுமையான பேச்சுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாம் என்று ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளிலிருந்து அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டது.
இப்படி உறுதிமொழிகளை ஒவ்வொரு முறையும் மீறிக்கொண்டிருக்கும் அரசின் பேச்சைக் கேட்டு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் எப்படி இணைய முடியும் என்று பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார்.
இந்திய எம்.பி.க்களின் யோசனையை ஏற்று நாடாளுமன்றக் குழுவில் நாங்கள் இணைந்தால், எங்களை ஜோக்கர்கள் என்று இலங்கைத் தமிழர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்றார் அவர். 

No comments:

Post a Comment