Translate

Monday 23 April 2012

மஹிந்தவின் இரட்டை வேடம் - ஐ.நா அமைதிபடை உள்நுழையும் அபாயம்!- எதிர்க்கட்சி!


இரட்டை வேடம் போடும் அரசின் செயற்பாடுகளினால் நாடு இரண்டாக பிளவுபடும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்கக் கோரியும் நாம் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். கொழும்பில் மாத்திரம் குவிந்து கிடக்கும் அதிகாரம், மாவட்ட மட்டத்தில் பகிரப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிற்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

ஜெனிவாத் தீர்மானத்திற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்த முடியாவிட்டால், அரசு அந்தப்பணியை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரசியல் தீர்வை வழங்கினால் விமல் வீரவன்ஸ மற்றும் குணதாஸ அமரசேகர ஆகியோர் தன்னை ஆட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று ஜனாதிபதி அஞ்சுகிறார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெனிவாவில் அடித்துக்கூறிவிட்டு மீண்டும் சர்வதேசத்தையும், நாட்டு மக்களையும் ஜனாதிபதி ஏமாற்றிக் கொண்டிக்கின்றார் என்றார். ஜனாதிபதியின் செயற்பாட்டைப் பார்க்கும் போது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த நாடு இரண்டாகப் பிரியும் அபாயம் உள்ளது.

அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை அப்படியே கிடப்பில் போடும் செயலில்தான் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். ஜெனிவாத் தீர்மானத்தை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் சர்வதேசம் எமது நாட்டுக்குள் ஐ.நா. அமைதிப்படையை அனுப்பி வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாஷைகளை அறிவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். அப்போது அந்த மக்கள் வடக்கு, கிழக்கைப் பிரித்துத் தருமாறு கூறுவர். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அரசு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்றார்.

ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment