Translate

Tuesday 24 April 2012

ஜெனீவாவிலே இலங்கைக்கு ஆதரவு வேண்டி நின்றதன் கைமாறாக தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • பிரதம மந்திரியின் அலுவலகத்திலே நடைபெற்ற கூட்டத்தில்அந்தப் பள்ளி வாசலை அப்புறப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
  • ஜெனீவாவிலே இலங்கைக்கு ஆதரவு வேண்டி நின்றதன் கைமாறாக தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டிற்கு முஸ்லிம் நீதியமைச்சர் இருக்கும் போது எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையே 
  • குண்டர்களை கொண்டு வந்தும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புக்கு செய்யும் அநியாயத்துக்கு அரசாங்கம் துணை
  • இந்த நாட்டிலே நீதி, நியாயம் சிறுபான்மையினருக்கு இருக்கின்றது என்றால் இதற்கு சிறந்த நீதி வழங்கப்பட வேண்டும்.
  • நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே சகல இனத்தவர்களுக்கும் சம  உரிமை வழங்கப்படல் வேண்டும்.


rauff_hakeem_1

முஸ்லிம்களின்  அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிக்கும் இனவாத சக்திகளும்  ஒருபோதும் தலை சாய்த்து போகப் போவதில்லை என தெரிவித்துள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இழைக்கப்படும்  அநீதியை எதிர்த்து போராட தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை காத்தான் குடியில்  இடம்பெற்ற கதீப் மு. அத்தின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு நீதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில் ;  எந்த அரசாங்கம்  எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும்  பலவீனமானவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் கடமை ஆகும். பலசாலிகளை பாதுகாப்பது ஒரு ஆட்சியாளரின் கடமை அல்ல.பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும். அது தான் சிறந்த ஆட்சியின் அடையாளம் ஆகும். இதைச் செய்யத் தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடந்து விடும் என்ற அச்சத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லுவது ஒரு பலமான அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.  
தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு குறித்து அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் அடித்துப் பேசுவதற்கு நான் தயாராக உள்ளேன்.  அரசாங்கம் அனுமதி வழங்கிய வானொலியின் மூலமும் வெளியில் இருந்து குண்டர்களை கொண்டு வந்தும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புக்கு செய்யும் அநியாயத்துக்கு அரசாங்கம் துணை போக முடியாது. இல்லை என்றால் இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் சாத்தியமாகாது. நிரந்தர சமாதானம் வேண்டும், என்றால் அனைத்து இனங்களுக்கும் நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் நிர்வாக ரீதியாக எந்த பலவந்தத்துக்கும் அடிபணியக் கூடாது. 
தம்புள்ளைப் பள்ளிவாசல் அசம்பாவிதத்தை பொலிஸார் உட்பட முப்படையினரும் தடுத்துள்ளனர். இதற்காக நான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மிகப் பெரிய அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுத்துள்ளதுடன், இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப் பள்ளிவாசலுக்கான பாதுகாப்பு நீக்கப்படுமாக  இருந்தாலும் அப் பிரதேச மக்கள் அதை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு இந் நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமையில் கை வைக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக எவ்வளவு தூரம் போராட முடியுமோ அவ்வளவு தூரம் போராடுவோம். வன்முறையால் இன்றி அகிம்சை ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் போராடுவோம். எதிர்த்து போராடக் கூடிய ஒரு சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும்.  
இப் பள்ளிவாசலுடன் சேர்த்து தங்களது காளி கோவிலையும் அப் புறப்படுத்த அவர்கள் முனைவதாகவும் எமது கோவிலையும் பாதுகாத்துத் தருமாறும் நான் தம்புள்ளைக்கு போன போது இந்துமத சகோதரர்கள் என்னிடம் வந்து அழுது கொண்டு கூறினார்கள். 
குண்டருக்கு அடி பணிந்து வன்முறைக்கு  அடி பணிந்து துவேசத்தை கக்கும் ஒரு வானொலிக்கு அடி பணிந்து எங்களை விட்டுக் கொடுக்குமாறு சொல்லுவதாக இருந்தால் அதிலும் பெரிய அநியாயம் இருக்க  முடியாது. இதற்காக எங்களது முடிவை மாற்ற முடியாது. அவ்வாறு முடிவை மாற்றுவதாக இருந்தால் எங்களது உலமா சபை, அனைத்து அரசியல் வாதிகள், அப் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்த பின்னரே நாங்கள் முடிவை மாற்ற முடியும். 
நிலைமையைக் கண்டறியும் வரை நான் வாய் திறக்க வில்லை. நான் கட்டார் நாட்டில் இருந்து அறிக்கை விட்டிருக்கலாம். அவசரப்படவில்லை. மிகப் பொறுமையாகத் தான்  இருந்தேன் தம்புள்ளைக்கு சென்று நிலைமையை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிய பின்னரே  எங்களது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றேன்.  அங்கு சென்று அங்குள்ள பெரும்பான்மையான சிங்கள மக்களின் நிலைவரங்களை அவர்களின் கருத்துகளை பெற்ற பின்பு தான் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டி ஏற்பட்டது. 
கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஜும் ஆப் பள்ளிவாசலில் நடந்த சம்பவம் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுடைய உள்ளங்களையும் புண்படுத்தியதுடன் அவர்களை ஆழ்ந்த கவலையடையவும் செய்துள்ளது. இச் சம்பவம் ஆத்திரமடையவும் ஆவேசமடையவும் செய்துள்ளது. 
எங்களுடைய நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைத்த போது அந்தப் பிரேரணையை ஆதரிக்கக் கூடாது என்ற நியாயத்தை அந்தந்த நாடுகளின் தூதுவர்களிடத்திலேயே  கூறினோம்.  இஸ்லாமிய நாடுகளுக்கு போனோம். இந்த நாட்டிலே யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டுமாக இருந்தால் இங்கு இருக்கின்ற மக்களுக்குள் உருவாகி வருகின்ற யுத்தத்தை இவ்வாறான பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் சில தீவிரவாத சக்தியை வலுப்படுத்தும் நிலைமை வந்து விடலாம் என்ற அபாய அறிவிப்பை நாங்கள் அங்கு செய்தோம். 
சனிக்கிழமை கட்டாரில் இருந்து நாட்டுக்கு வந்தபோது எமது கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் றம்ழான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்ததை நான் பார்த்தேன். அவரது அந்த அறிக்கையிலேயே ஜெனீவாவிலே இலங்கைக்கு ஆதரவு வேண்டி நின்றதன் கைமாறாக தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் எனத் தெரிவித்து ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இது தான் அனைவரினதும் உணர்வாக வெளிப்படுகின்றது. 
கடந்த சனிக்கிழமை ஒரு தொலைக் காட்சியிலே ஒளிபரப்பட்ட , தம்புள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சூத்திரதாரியின் நடத்தையையும் வார்த்தை பிரயோகத்தில் கூறப்பட்ட அசிங்கத்தையும் நாம் நேரடியாக பார்த்தோம். 
தம்புள்ளைக்கு  அமைச்சர் பௌசி, ரிசாட் பதியுதீன் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஹில்புல்லாஹ் சென்றிருந்தார்கள். நானும் தம்புள்ளைக்கு சென்றேன். நான் தம்புள்ளைக்கு சென்ற போது முஸ்லிம்கள் மாத்திரமல்ல அங்கு அதிகமான சிங்கள நண்பர்கள் என்னோடு பேசினார்கள். தம்புள்ளை பிரதேசத்தின் மாநகர சபைத் தலைவர் எதிர்க் கட்சித்தலைவர்கள் உறுப்பினர்கள்  என்னிடம் கூறினார்கள். இப் பள்ளிவாசல் 60 வருடங்களுக்கும்  மேலாக இங்குள்ளது  என்பதை நாங்களும் எங்களது பெற்றோர்களும் மிகத் தெளிவாக அறிந்திருக்கின்றோம். இப் பள்ளிவாசலை அகற்றுவது என்பது நியாயமற்றது என்பதை  அங்கிருக்கின்ற அதிக பெரும்பான்மையான சிங்கள மக்கள் கூறுகின்றார்கள். 
தம்புள்ளையில் உள்ள முன்னணி அரசியல்வாதிகளுடன் பேசினோம். அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோனை சந்தித்துப்பேசினோம். இது அப்பட்டமான அநியாயம் என எங்களிடம் அவர் கூறினார். தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு  இருக்கின்ற உரிமைகள் மறுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளேன் என அவர் தெரிவித்தார். 
இதன் பின்னணியில், பிரதம மந்திரியின் அலுவலகத்திலே நடைபெற்ற கூட்டத்தில்அந்தப் பள்ளி வாசலை அப்புறப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அது எனக்கு தெரியாது அப்படியான ஒரு முடிவெடுக்கும் கூட்டத்திற்கு அமைச்சர்கள் எவரும் போயிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். 
ஒரு பிராந்திய வானொலி அலைவரிசையிலேயே இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு   அதை தூண்டி விடும் பாங்கிலே முழு நாளும் விடிய விடிய செய்திகளை வெளியிட்டுள்ளது. ஒரு சமூகத்திற்கு எதிராக அப்பட்டமாக இந்த வானொலி இனவாதத்தை  தூண்டிவிட்டுள்ளது . நான் கொழும்பில் இருந்து தம்புள்ளைக்கு வரும் வழியில் இந்த வானொலியை கேட்டேன். இதில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சித் திட்டமிட்டு இனவாதத்தை தூண்டும் வகையில்  ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. 
இந்த வானொலியில் பேசுபவர்கள் இது புனித பிரதேசம்  இங்கிருந்து பள்ளிவாசலை அப் புறப்படுத்த வேண்டும் என்பன போன்றவற்றை பேசுகின்றனர். இதை எல்லாம் கேட்ட பின்பு  இந்த வானொலியை அரசாங்கத்தினால்  உடனடியாக  தடை செய்ய வேண்டும் என்பதே எனது  கருத்து. அப்படியான ஒரு  அலைவரிசை எந்த சமூகமாக இருந்தாலும் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை இலங்கை அரசியல் அமைப்பின் 14 ஆவது சரத்து எடுத்துக் கூறுகின்றது. 
இன்று முழு சர்வதேசத்தின் பார்வையும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படும் நிலையிலேயே இந்த தம்புள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்புள்ளையைச் சேர்ந்த ஐந்து சதவீத மக்களும் கலந்து கொள்ள வில்லை என  தம்புள்ளை மாநகர சபைத் தலைவர் அதன் ; எதிர்க் கட்சி தலைவர் கூறுகின்றனர். 
அறுபது வருடங்களுக்கு மேல் உள்ள பள்ளிவாசல் அதுவும் தகரக் கொட்டிலாக இருக்கும் ஒரு பள்ளிவாசலை அவ் விடத்தில் இருந்து அப்பு றப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எந்த உத்தரவாதங்களை யார் வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் இந்த சந்தர்ப்பத்திலே இதற்கு விட்டுக் கொடுப்பு செய்வதாக இருந்தால் அது விபரீதங்களைக் கொண்டு வந்து விடும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். இந்த சக்திகளுக்கு தலை சாய்த்து போவதென்பது வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் செய்கின்ற மிகப் பெரிய பாதகமாக இருக்கும் என்று கூறுகின்றேன். 
இவ்வாறு நாம் பின் வாங்கினால் வன்முறையின் மூலம் எங்களது மத இடங்களில் மத உரிமைகளில் கை வைப்பதற்கு இடமளித்தாக மாறிவிடும். அந்த அடிப்படையில் நிர்வாக ரீதியாக எந்தப் பலவந்தம் வந்தாலும் கூட இன்றிருக்கின்ற நெருக்கடி நிலைமையில் தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் வாழ்கிற மக்களுக்கு மத்தியில் இது  தொடர்பாக வாக்கெடுப்பொன்றை நடத்தினால் எங்களுக்கு இந்தப் பள்ளியை அகற்றக் கூடாது என்பதற்கு முழு ஆதரவு கிடைக்கும் என நான் நினைக்கின்றேன். 
நிர்வாக மட்டத்தில் எந்த நிர்ப்பந்தமும் எந்த வலுக்கட்டாயமும் ஏற்படுத்தப்படக் கூடாது என்பது எனது வேண்டு கோள். தம்புள்ளை மக்கள் என்னிடம் கேட்டார்கள். நாட்டிற்கு முஸ்லிம் நீதியமைச்சர் இருக்கும் போது எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையே என இந்த நாட்டிலே நீதி, நியாயம் சிறுபான்மையினருக்கு இருக்கின்றது என்றால் இதற்கு சிறந்த நீதி வழங்கப்பட வேண்டும். பீதியுடனும் பயத்துடனும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடும் என்பதற்காக விட்டுக் கொடுப்போடு  செல்ல வேண்டும் என அரசாங்கம் சொன்னால் இது சிறந்ததோர் அரசாங்கத்திற்கு உகந்ததல்ல. இதை தான் அமைச்சரவைக் கூட்டத்திலும் அடித்துப் பேசவுள்ளேன். 
இந்த விடயம் நிர்வாக ரீதியாக எந்த பலவந்தத்திற்கும் உட்படுத்தப்படக் கூடாது. அறிவு ரீதியாக அஹிம்சை ரீதியாக இதை எதிர்த்து நிற்பதற்கு திராணியுள்ளவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.  வன்முறையால் அல்ல. நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே சகல இனத்தவர்களுக்கும் சம  உரிமை வழங்கப்படல் வேண்டும். இல்லையேல்  நிரந்தர சமாதானமொன்று ஏற்பட முடியாது. 
ஆகவே இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைக்கு இழைக்கப்படும்  இந்த அநீதியை எதிர்த்து அஹிம்சை வழியிலும் அறிவு பூர்வமாகவும் எங்களால் எவ்வளவு முடியுமோ  அவ்வளவு போராடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment