Translate

Tuesday 24 April 2012

அடுத்த தடவை ஜெனீவாவில் இலங்கை ஆதரவை மேம்படுத்த வழியென்ன?


கலாநிதி ஜெகான் பெரேரா 
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக ஆவன செய்ய முனைப்பாக செயற்பட வேண்டும். அதற்காக சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவது உள்ளடங்கலாக அனைத்து மனித உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படுதல் அவசியம். இவற்றுடன் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உலக வல்லரசுகளிடையே ஒரு சமாதானமான முறையில் பேணப்படுவதும் முக்கியமாகும். இவ்வாறானவற்றை இலங்கை திருப்திகரமாக கையாளுமேயானால்  இலங்கையின் பேராளர் குழு 2009 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் அடைந்த வெற்றியை மீண்டும் அடைய முடியும் என்பதற்கான காரணங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியும்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடந்து முடிந்ததன் பின்னர் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை காணப்படுவதாக தென்படுகிறது. அரசாங்கத்தின் முன்னணியின் தலைவர்கள் சிலர் ஜெனீவா சென்ற குழுவில் அங்கம் வகித்தவர்கள்.
இருந்த போதிலும், அவர்கள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள  உள்வாரியாக முரண்பாடு நிலவுவதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கில் நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு விடாதும் அதன் குறைந்த பட்சமாக்கி பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் தான் (வாக்கெடுப்பில்) வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ள விரும்பியது. ஆனால் அரசாங்கம் ஜெனீவாவில் நடைபெற்ற 13 ஆவது கூட்டத் தொடரில் 39 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தமையுடன் ஒப்பிடுகையில் இப்போது 19 ஆவது கூட்டத் தொடரில் 15 வாக்குகளையே பெற்று அதன் சர்வதேச ஆதரவால் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதன் காரணமாக அது தொடர்பில் அரசாங்கத்தினால் விவாதிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஜெனீவாவில் இவ்வாறு சர்வதேச ஆதரவில் ஏற்பட்டுள்ள வேறுபாடு தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே கூட ஒருமித்த கருத்து காணப்படுவதாக தெரியவில்லை.  ஜெனீவா சென்ற கையாளவே கடினமாகக் கருதப்பட்ட அரசாங்கத்தின்  பேராளர் குழுவின் மத்தியிலும் பிரிவினை காணப்பட்டதாகத் தெரிகிறது. பெரிய அளவினதான அந்தப் பேராளர் குழுவில் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள், பத்திரிகைத்துறையினர், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளடங்குவர். இவர்கள் அரசாங்கத்திற்கு சார்பாக ஆதரவு திரட்டச் சென்றிருந்தார்கள். ஒரு சிலர் தம்முடன் வந்த அங்கத்தவர்களால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திறம்படச் செயற்படாததாக குறைகூறப்பட்டனர்.
அத்துடன் பொருத்தமற்ற வகையில் பேசி இலங்கை பெறக் கூடிய ஆதரவினை இழக்கச் செய்ததாகவும் குறை கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வாக்கு தொடர்பாக அதனை இழந்து விடுவதற்கு இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்பது தொடர்பாக அளவுக்கு மீறிய ஆர்வத்துடன் வெளியிட்ட அறிக்கைகளும் அதனை இழந்தமைக்கு காரணம் எனப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு நிலைமைகளை அவர்கள் அறியாதோ அல்லது உதாசீனம் செய்தோ இவ்வாறான தவறுகளை இழைத்திருக்கலாம்.
ஜெனீவா வாக்கெடுப்புத் தொடர்பாக பல காரியங்களை வித்தியாசமாகவும் திறம்படவும் செய்திருக்க முடியும். ஆனாலும் கூட அரசாங்கம் ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தவறியமைக்கு தனியே அங்கு சென்ற பேராளர் குழு இழைத்த தவறுகள் மாத்திரமே காரணம் எனக் கூறிவிடவும் முடியாது. அரசாங்கப் பேராளர்களில் சிலர் எடுத்துக் காட்டத்தகுந்த உரைகளை ஆற்றியுள்ளனர். பல கண்டங்களைச் சார்ந்த நாட்டினரையும் இலங்கைக்கு ஆதரவளிக்க கவரும் வகையில் தனிப்பட்டவகையில் பிரசாரம் செய்துள்ளனர்.
ஆனால் உலகின் இனியில்லை எனக் கூறக்கூடிய சட்டவல்லுநர்களாலும் சில வழக்குகளை வெல்ல முடியாது போவதுண்டு. வழக்கினை வெல்வதென்பதற்கான வாய்ப்பு அதன் உள்ளடக்கங்களில் தங்கியுள்ளது. வழக்கின் காரணம் (உள்ளடக்கம்) பலவீனமாயிருக்கையில் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களாலும் கூட பலவீனமான வழக்கை வலிமையானதாக மாற்ற முடியாது போய்விடுகிறது. ஜெனீவாவில் இலங்கையின் பேராளர்குழு எதிர்நோக்கியமையும் இவ்வாறான குறைபாடு சார்ந்தது என்றே நம்பவேண்டியுள்ளது. குறைபாடுடைய ஒரு நிலைவரத்தினை அல்லது வழக்கை ஆதரிக்க சென்ற அக்குழு தோல்வியடைந்து விட்டது.
மாற்றமடைந்த சூழ்நிலை.
ஜெனீவாவில் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட சவாலை இலங்கை அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியாது போனமை தொடர்பாக ஏற்பட்ட விமர்சன ரீதியான மதிப்பீடுகளுக்கு காரணமாக அமைந்தது 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் பேராளர் குழு வெற்றிகரமாக தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்ட நினைவுகள்தான் எனப் படுகிறது. எவ்வாறாயினும் இலங்கை 2009 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் எதிர்நோக்கியவையும் பின்னர் 2012 ஆம் ஆண்டில் எதிர்நோக்க வேண்டியதாக இருந்தனவும் கணிசமான அளவுக்கு வெவ்வேறானவையாகும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்த போது இலங்கையின் எதிர்காலம் பற்றி நல்லதே நடக்கப்போகிறது என்ற நம்பிக்கை நிலவியது. யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியமையும், மனித  உரிமைகள் மீறப்பட்டமையும் பற்றி சர்வதேச சமூகம் அறிந்திருந்த போதிலும் அவர்கள் கடந்த காலத்தை விட எதிர்காலம்  பற்றியே கூடிய அக்கறையும் கரிசனமும் காட்டியிருந்தனர். அதனால் தான் பல அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக அப்போது (2009) வாக்களித்திருந்தன. சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த உறுதி மொழிகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதாவது இலங்கை அரசாங்கம் முரண்பாடுகளுக்கு ஆணிவேரான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான  நியாயமான அரசியல் தீர்வொன்றினை வழங்கப் போவதாக கூறிய உறுதி மொழிகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
மனித உரிமைகள் பேரவையின் 2012 ஆம் ஆண்டு கூட்டத்தில் சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கம் முன்னர் 2009 இல் கூறிய உறுதி மொழிகளைப்பற்றி நீண்ட கலந்துரையாடலைச் செய்தன. கலந்துரையாடலின் இறுதியில் இப்போது இலங்கை அரசாங்கம் காட்டவேண்டியது, அது 2009 ஆம் ஆண்டு கூறிய உறுதி மொழிகளல்ல என்றும், அவ்வுறுதி மொழிகளின் அமுலாக்கம் பற்றியே என்றும் உறுதியாகக் கூறின. அரசாங்கத்தினால் அவ்வாறான அரசியல் தீர்வு ஒன்றைப் பற்றியோ அல்லது அது தொடர்பாக செய்த எதுவித முன்னேற்றம் பற்றியோ கூற முடியாது போயிற்று. அதனை விடுத்து எத்தனைபேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர், எத்தனை கிலோ மீற்றர் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலியினர் எத்தனைபேர் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளனர் என்பன போன்ற விபரங்களையே அரச தரப்பினரால் பேச முடிந்தது. அவர்கள் பொருளாதார வளர்ச்சி வீதம், மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் அதிகரித்த அளவு, குழாய் நீர் வழங்கப்பட்டுள்ள அளவுகள் என்பன பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள். கூடியளவிலான வகையில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதே போன்று அளவு ரீதியாக பார்க்கையில் சட்டத்திற்கு புறம்பான வகையில்  கொலைகளும், ஆட்கடத்தல்களும் ஏற்பட்டுள்ளன. யுத்த காலத்தின் போது இவ்வாறான சம்பவங்கள் 10 முதல் 20 வரையில் ஒவ்வொரு நாளிலும் ஏற்பட்டும் உள்ளன. இவை இப்போது குறைவடைந்து ஒரு மாதத்தில் இவ்வாறான சம்பவங்கள் 10 20 வரை ஏற்படுவதாக காணப்படுகின்றன. யுத்த காலத்தில்  இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களை  முற்றாக ஒழிக்காது இப்போதும் கூட ஆட்கள் கடத்தப்படுதல் , நிரந்தரமாக ஆட்கள் காணாமல் போவது  போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதால்  அரசாங்கம் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவே தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் தனது பொறுப்பில் தவறியுள்ளமைக்கு இவை நம்பக்கூடியதான ஆதாரமுமாகும். முன்னணி சோஷலிச கட்சியின் தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியப் பிரஜை. அவுஸ்திரேலிய அரசாங்கம் கொடுத்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக அவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான  சம்பவங்களால்  இலங்கை அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உயர் கொள்கைகளுக்கு சார்பாக அது நடந்து கொண்டதாக கூற முடியாதுள்ளது.
முக்கிய பிரச்சினைகள்
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக செய்யப்பட்ட வாக்கெடுப்பின் போது இலங்கையில் போர் முடிந்து அப்போது மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்திருந்தன.  யுத்தத்தில் ஏற்பட்ட கொடுமைகள் பற்றி சர்வதேச சமூகத்தின் மனதில் நினைவுகள் பசுமையாக இருந்தன.  ஆனாலும் பெரும்பான்மையான அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்தினை ஆதரிக்க தீர்மானித்திருந்தன. ஆனால் மார்ச் 2012 ஆம் ஆண்டில் யுத்தம் பாரிய நினைவுகள் மிகவும் பழையதாகிப் போன நிலையில் இலங்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போனது.  முன்னர் அரசாங்கத்தை ஆதரித்த நாடுகள் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. எனவே யுத்தத்தின் இறுதிக் காலத்தில் ஏற்பட்டவை வாக்குகள் வழங்கப்பட்டமையினை தீர்மானித்த காரணிகள் அல்ல என்பது இப்போது தெளிவாகின்றன.
சர்வதேச நிலைவரத்தில் ஏற்பட்ட சடுதியான மோசமான நிலைமை அரசாங்கத்திற்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் மாத்திரமன்றி முழு நாட்டிற்குமே கவலையும் வியப்பும் தரும் மாற்றங்களாக தென்படுகின்றன. சர்வதேச சதித்திட்டம் பற்றிய அக்கறையும் அச்சமும் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சீனாவுடனான நெருக்கமான உறவு இவ்வாறான சர்வதேச பிரச்சினைக்கான அடித்தளம் என்ற அனுமானமும் உண்டு. இதற்கு ஐக்கிய அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆர்வங்களே இலங்கையை சீனாவுடனிருந்து அகலச் செல்வதற்காக காரணங்கள என்றும் கூறப்படுகிறது.

இவற்றை மனதிற்கொண்டே இலங்கை மீது யுத்தக்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் காரணமாகக் காட்டி நிர்ப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிக் கொள்கின்றனர். கொடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலைமைகளில் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள சம்பவங்களைப் பற்றி விசாரிக்க முனைந்தால் அந்நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவனவாகவே காணப்படும்.
இவ்வாறான தற்போதைய நெருக்கடிகள் ஏற்படுகின்ற  நிலைமைகளில் அரசாங்கம் பல பரிமாணங்களிலும் கூர்மையாக செயற்பட வேண்டும். ஐ.நா.சபையின் ஒரு அங்கமான பேரவையில்  இலங்கைக்கு எதிரான எதிர்மறையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டுகின்ற அனைத்துக் கோணங்களிலும் அரசாங்கம் திருப்தியாக ஆவனவற்றை செய்து காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அத்தீர்மானம் உலகின் நிகழ்ச்சி நிரல்களில் தொடர்ந்தும் இருந்து எம்மை நெருக்கிக் கொண்டே இருக்கும். இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையே கூடிய அக்கறை காட்டுவதாக உள்ளது. எனவே இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக ஆவன செய்ய முனைப்பாக செயற்பட வேண்டும். அதற்காக சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவது உள்ளடங்கலாக அனைத்து மனித உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படுதல் அவசியம். இவற்றுடன் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உலக வல்லரசுகளிடையே ஒரு சமாதானமான முறையில் பேணப்படுவதும் முக்கியமாகும். இவ்வாறானவற்றை இலங்கை திருப்திகரமாக கையாளுமேயானால்  இலங்கையின் பேராளர் குழு 2009 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் அடைந்த வெற்றியை மீண்டும் அடைய முடியும் என்பதற்கான காரணங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியும்.

No comments:

Post a Comment