Translate

Sunday 15 April 2012

ஐரோப்பிய நாடுகளின் திடீர் மாற்றம்: ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் !

அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை சுவிஸ் உட்பட சில ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன என அறியப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த போதிலும் இலங்கையில் ஆட்கடத்தல்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறைய வில்லை என்பதாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள அறிக்கையை அவதானித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும், அடுத்த மார்ச் மாதம் வரை அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்புவதில்லை என்றும் சுவிஸ் உட்பட சில நாடுகள் தீர்மானித்துள்ளன. இதில் சுவிஸ் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளது. எனினும் கிரிமினல் குற்றவாளிகளை திரும்பி அனுப்புவதில் மாற்றம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் மாணவர் விசாவில் வந்து விசாக்காலம் முடிந்த பின்னும் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியப் பிரஜையான குமார் குணரட்ணம் கடத்தப்பட்டது தொடர்பாக அன் நாட்டரசும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பாக கடந்தகாலங்களில் அவுஸ்திரேலியா கொண்டிருந்த நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் வந்திருப்பதாக அதிர்வின் அவுஸ்திரேலிய நிருபர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment