Translate

Monday 23 April 2012

இராணுவத்தின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: ஜே.வி.பி. _


  இராணுவத்தின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே தேசிய இனப்பிரச்சினையுடன் விளையாடாது தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அரசாங்கத்தின் காலம் கடத்தும் செயலாகும். ஆகவே ஜே.வி.பி. தெரிவுக் குழுவில் பங்குபற்றாது என்று அக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.


வடக்கில் மீள் குடியேற்றங்கள் கூட ஐ.நா. விதிமுறைகளுக்கு முரணான வகையிலேயே இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாவிட்டால் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்பட்டு நாடு துண்டுபடும். இதற்கான வெளிப்பாடுகளை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் (ப்ளஸ்) சென்று செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வந்த இந்திய சர்வக்கட்சி பாராளுமன்றக் குழுவினரிடம் வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் நாட்டு மக்களுக்கோ வேறொரு காரணத்தை கூறியே தனது இரட்டை முகத்தை அரசாங்கம் காட்டி வருகின்றது.

அரசாங்கம் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றாது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் விளையாடுகின்றது. பாராளுமன்ற தெரிவுக் குழுவை வெறும் காலம் கடத்தும் செயலாகவே கருத முடியும். இதற்கு முன்னரும் பல தெரிவுக் குழுக்கள் சர்வக்கட்சி குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றின் தீர்வுத் திட்டங்கள் இன்று குப்பைத் தொட்டிகளிலேயே காணப்படுகின்றன.

அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் அரசாங்கம் கடந்த சில காலமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஆனால் அதிலும் அரசு இணக்கப்பாடொன்றுக்கு வரவில்லை. எனவே அரசு பிரச்சினைகளை தீர்த்து வைக்காது புதிய பிரச்சினைகளுக்கான சூழலை அமைத்துக் கொடுக்கின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனாலேயே தமிழகத்தின் கருணாநிதி போன்றவர்கள் இலங்கையில் தமிழீழம் அமைக்க வேண்டுமென்று ஐ.நா.விற்கு மனு அனுப்புகின்றனர். யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் இன்றும் மெனிக்பாம் முகாமிலேயே வாழ்கின்றனர்.

சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு பதிலாக வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி அம்மக்களை தனிமைப்படுத்தி அரசு வைக்கின்றது. இம் மக்கள் வாழ்ந்த இடங்களில் இராணுவம் முகாமிட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களை சுவீகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு காணிகளை இராணுவத்திற்கு கொடுத்து விட்டு மக்கள் காணிகளை விடுவிடுக்க வேண்டும்.

இதுபோன்று பிரச்சினைகள் குறித்து இந்திய குழு தெளிவடைந்தே நாடு திரும்பியது. எனவே அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்பட்டு மென்மேலும் நாட்டை பாதிப்பிற்குள் தள்ளக் கூடாது. சர்வதேச நாடுகள் இலங்கை விடயத்தில் அத்து மீறிச் செயற்பட அரசின் நடவடிக்கைகளே பிரதான காரணம் என்றார். __

No comments:

Post a Comment