Translate

Monday 23 April 2012

போருக்கு பின்னரும் பெரும் படை பலத்துடன் தமிழர் மீதான அடக்கு முறை தொடர்கிறது கலாநிதி விக்ரமபாகு கூறுகிறார்

vickramabahu_karunaratneபோருக்குப் பின்னரும் இந்த அரசு தமிழ் மக்களை பெரும் படை பலத்துடன் அடக்கி  வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய  கட்டாய தேவையாகும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ; 
எதிர்வரும் மே தினக் கூட்டம் நவசமசமாஜக் கட்சி ஒன்றில் கொழும்பில் தனியாக நடத்தும் அல்லது வேறு இடதுசாரி அரசியல் , தொழில் சங்க அமைப்புகளுடன் கை கோர்த்து நடத்தும். 

யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள இணைந்த  எதிரணிக் கட்சிகளின் மே தினக் கூட்டத்திலும் நவசம சமாஜக்கட்சி பங்குகொள்ளும் இதன் காரணமாக சில அரசியல் வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  நடத்தப்படவுள்ள மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல கட்சிகள் பங்கு கொள்ள இருக்கின்றன. மேற்படி  பிரதான இரு கட்சிகளினதும் கொள்கைகளுக்கும் நவசம சமாஜக்கட்சியினதும் கொள்கைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. 

இது யாவருக்கும் தெரிந்த உண்மை நிலையாகும். குறிப்பாக தமிழ்த் தேசியப் பிரச்சினையை பொறுத்த வரை தமிழ் மக்களினது சுயநிர்ணய உ ரிமை அவர்களின் தாயகம் ஆகியவற்றை பொறுத்த வரை நவசம சமாஜக் கட்சி அவற்றை அங்கீகரிப்பதுடன் அதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பேராடியும் வருகின்றது. 
இதே நேரம் இன்றைய கால கட்டத்தில் போருக்கு பின்னரான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களை பெரியளவில் படைபலத்துடன் ஒடுக்கி வருகின்றது. எனவே இத்தகைய கொடிய ஒடுக்கு முறை செயற்பாட்டுக்கு எதிராக  அனைத்து எதிர் சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டங்களை  முன்னெடுக்க வேண்டியது  காலத்தின் தேவையாகும். இந்த அடிப்படையிலேயே   யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்துவது தொடர்பாக நவசம சமாஜக் கட்சி  எண்ணுகின்றது. மாறாக மேற்படி இரண்டு கட்சிகளுடனும் வேறு எந்த வகையான விலை போதல் செயற்பாடுகளுக்கும் நவசமசமாஜக்  கட்சி ஒரு போதும் வளைந்து கொடுக்க மாட்டாது. அங்ஙனம் எவரும் எண்ணுவார்களாயின் அவர்களின் அரசியல் ஞானம் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை என்றே நவசம சமாஜக் கட்சி கருதுகின்றது. 

போராட்டங்களின் ஊடாகவே இந்த ஆட்சியை பலவீனப்படுத்த முடியும். அதனையே நவசம சமாஜக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட இருக்கின்ற  மே தினத்தை ஒரு போராட்ட வடிவமாகவே நவசம சமாஜக் கட்சி  பார்க்கின்றது. எத்தகைய போராட்ட செயற்பாடுகளும் இன்றி வெறும்  விமர்சனங்களை முன்வைப்பதாலும் ஆட்சியாளர்களே பயன்பெறுவர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வைரம் பாய்ந்து உறுதியாக இருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு என்றே அடையாளம் காண முடியும். 

நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த யாரும் அருகில் நெருங்க முடியாது இன்றைய கால கட்டத்தில் போராட்ட வடிவங்கள்  ஊடாகவே தமிழ் மக்களின் விடுதலைப் பேராட்டத்தை முன்கொண்டு சொல்ல முடியும் இதுவே நவசம சமாஜக் கட்சியின் நம்பிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment