Translate

Sunday, 1 April 2012

நாம் எடுபிடி ஆட்கள் அல்லர்…


நாம் எடுபிடி ஆட்கள் அல்லர்…
மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கை அரசுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுவது பயன்தராது. அவ்வாறான பேச்சுக்கள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கூட்டமைப்பு கருதுகிறது.

இதுவரை காலமும் நடைபெற்ற பேச்சுக்கள் எமக்கு இதனையே வெளிப்படுத்தியுள்ளன. எனவே மூன்றாம் தரப்பின் உதவியுடன் பேச்சுக்களைத் தொடர்வதற்கு அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஜெனிவா இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தவை வருமாறு:
அரசுக்கும் எமக்கும் இடையில் இடம்பெற்றுவந்த பேச்சுக்களை அரசுதான் நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் பேச்சை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் கைகளிலேயே தங்கியுள்ளன.

அரசு தாம் விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு அமைக்கும் குழுக்களில் எங்களை இணையச் சொல்வது தவறானது. ஏற்கனவே எங்களுக்கும், அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகள் ஒழுங்காக நடந்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கா.

எல்லாவற்றையும் விட பேச்சு மூலம் தீர்வு காணும் மனநிலை அரசுக்கு ஏற்பட வேண்டும். பேச்சுக்களைத் தொடரும் எண்ணமும் ஏற்பட வேண்டும். ஆயினும் இந்த அரசுக்கு பேச்சு மூலம் தீர்வு காணும் மனநிலை இல்லை. தொடர்ந்து எம்மை ஏமாற்றும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. தற்போதும் அதே நடவடிக்கையைத்தான் அது பின்பற்றுகின்றது.

அரசு உண்மையிலேயே இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று விரும்பினால் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பேச்சு உண்மையானதாக தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும்.
எந்தப் பேச்சுக்கும் மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அவசியம். இதனையே கடந்த ஒரு வருட கால பேச்சுவார்த்தை எடுத்துக் காட்டுகின்றது.

அரசு உண்மையாகவே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவிரும்பினால் மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அப்படி அமைந்தால் தான் பேச்சு ஒரு சரியான தடத்தில் செல்லும் என்றார்.

No comments:

Post a Comment