Translate

Sunday, 1 April 2012

இலங்கையில் முதல் மன்னனும், கடைசி மன்னனும் தமிழனே! யோகேஸ்வரன் எம்.பி முழக்கம்


இலங்கையில் முதல் மன்னனும், கடைசி மன்னனும் தமிழனே! யோகேஸ்வரன் எம்.பி முழக்கம்
இலங்கையின் வரலாற்றில் முதலாவது மன்னனும் தமிழன் தான் இலங்கையின் வரலாற்றில் இறுதியாக ஆண்ட மன்னனும் தமிழன்தான். இது வரலாறு. சிங்கள மக்களின் நூல் என்று சொல்லப்படுகின்ற மகாவம்சம் உண்மை அல்ல திட்டம் இட்டு சோடிக்கப்பட்டது.

அந்த மகாவம்சம் கூட இந்த நாட்டின் முதலாவது மன்னன் தமிழன் என்பதைக் காட்டியிருக்கிறது. இந்த நாட்டின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்களது வரலாற்று தடயங்களை பதிவு செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


கலாபூஷணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிகுடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்து நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற எங்களது பூர்வீகங்கள் இவை யாவும் தற்கால தேவையின் நிமித்தம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஏன் என்றால் இலங்கையின் வரலாற்றில் முதலாவது மன்னனும் தமிழன் தான்.

இலங்கையின் வரலாற்றின் இறுதியாக ஆண்ட மன்னனும் தமிழன் தான் இது வரலாறு. புத்தபகவான் இலங்கைக்கு இரண்டு தடவை வந்தார் என்று அந்த மகாவம்சம் சொல்லுகின்றது.

அதில் முதலாவது தடவையாக அவர் இங்கு வந்து இங்கு இருக்கின்ற இனமாக இலங்கையை ஆண்ட இயக்கர் நாகர்களின் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை செய்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் தடவை வரும்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற நாகதீபம் பகுதியில் மகோதரன், குலோதரன் என்கின்ற இருவர்கள் மாணிக்க ஆசனத்திற்காக சண்டை இட்டபோது அவர்கள் பிரச்சினையை சமாதானப்படுத்த வந்தார் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.

ஆனார் அந்த புத்தபகவான் பௌத்த மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை. அவர் இறந்து 500 வருடங்களுக்குப் பிறகுதான் பௌத்த மதம் என்ற ஒன்று வந்தது.

அது ஒரு வரம் அல்ல தத்துவம். ஆனால் அதை வைத்து இன்று எம்மை அடக்குகிறார்கள். ஆகவே எமது கிராம வரலாறுகள், பூர்வீகங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டவர்களாகவும் அதை நிரூபிக்க கூடியவரர்களாக நாம் இருக்க வேண்டும்.

களுவாஞ்சிக்குடி என்பது ஒரு தமிழ் பற்றுள்ள இடமாகத்தான் பார்க்க வேண்டும் காரணம் என்ன நிகழ்வானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டுமே அழைக்கின்றனர்.

மற்ற இடங்களைப் பார்த்தால் பிள்ளையானுக்கும் மேடை இருக்கும் கருணாவுக்கும் மேடை இருக்கும். ஆனால் இங்கு நான் அவதானித்தபோது ஒரு தமிழ் உணர்வு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கண்டி ராஜனுக்கு திருப்பழுகாமத்தில் இருந்து படைகளுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வரலாறு சொல்லுகின்றது. அவ்வாறு வீரம் செறிந்த நாட்டுக்கு உரிய தமிழர் நாங்கள் தமிழன் என்றால் வீரம் உடையவன். இது வரலாறு.

ஆகவே வரலாறு மிக முக்கியமானது. ஒவ்வொரு கிராமத்துக்கும் வரலாறு இருக்கவேண்டும். சிங்களவர்கள் மகாவம்சம் என்று சொல்கின்றனர். பௌத்த வம்சம் என்று சொல்கின்றனர். எங்களுக்கு என்று ஒரு நூல் இல்லாததனால் தடுமாற வேண்டி உள்ளது.

இங்கு நாடு நகர திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தை கிழக்கு மாகாணசபை அனைத்தும் முடிந்த பிறகு இப்போதுதான் நிராகரித்துள்ளது.

அந்த சட்டம் வந்த போது சட்டத்தின் படி இங்கு உள்ள காணி அனைத்தும் பௌத்த மதத்திற்கு உட்படுத்தப்படும் நிலை உருவாக்கப்பட்டது. பௌத்தமத அமைச்சிக்கு கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. அந்தவேளை இந்த கிழக்கு மாகாணசபை தடுமாறியது.

அதில் சில திருதத்தை கொடுத்துவிட்டு அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அலோசனையில் நாடகம் ஆட முற்பட்டார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.

அதற்கிடையில் வேறு இரண்டு மாகாணங்கள் அதை நிராகரித்ததினால் இப்போது நாடகம் ஆடி தானும் நிராகரிப்பதாக கூறி உள்ளார். ஆகவே இந்த நாட்டின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்களது வரலாற்று தடயங்களை பதிவு செய்யவேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment