Translate

Saturday, 26 May 2012

அரசியல் கொலைகளில் அதிவீர சூரராக உள்ளது சிறீலங்கா அரசு: அமெரிக்கா


சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும் மீறப்படும் மனிதவுரிமை மீறல்களுக்கும் அரசுத் தரப்புக்கும் தொடர்பு உள்ளது என அமெரிக்கா சிறிலங்காவின் மனிதவுரிமைகள் வடயம் குறித்து கடுமையாகச் சாடியுள்ளது.

2011ம் ஆண்டுக்கான சர்வதேச மனிதவுரிமைகள் நிலை குறித்தஅறிக்கை ஒன்று நேற்றையதினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்படி சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா சாடியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது என்பதனை இந்த அறிக்கையின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் தெரிவித்திருக்கின்றார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சட்டவிரோத படுகொலைச் சம்பவங்களே சிறிலங்காவில் பிரதான மனித உரிமை மீறல்களாக அமைந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் இவ்வாறு சட்டவிரோதப் படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை அடிப்படையில் தமது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகவும் சொற்பளவிலான உத்தியோகத்தர்களையே சிறிலங்கா அரசாங்கம் தண்டித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காவற்றுறையினரின் சித்திரவதைகள், ஊழல் மோசடிகள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதுடன், பரவலாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையே நீடிக்கின்றது. என அமெரிக்கா அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான சில சம்பவங்களுடன் அரசாங்கத்தைச் சார்ந்தோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினர் திட்டமிட்ட வகையில் நபர்களை கைது செய்து துன்புறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகளில் சனநெரிசல் காணப்படுவதாகவும், போதியளவு வசதிகள் இல்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment