Translate

Saturday 26 May 2012

"இன்வென்சன்ஸ் ஜெனிவா" கண்காட்சியில் இலங்கையின் கண்டுபிடிப்பாளர்கள் கௌரவிப்பு _


  வைத்திய கலாநிதி எஸ்.ஜே.பி. லினாடோரா மற்றும் தினேஷ் கடுகம்பல ஆகியோரின் கண்டுபிடிப்புகள், ஜெனிவாவில் இடம்பெற்ற "இன்வென்சன்ஸ் ஜெனிவா" கண்காட்சி நிகழ்வில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ச்சியான 40ஆம் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது கண்டுபிடிப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெறும் உலகின் மிகப்பெரும் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுமார் 46 நாடுகளை சேர்ந்த, 789 கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன், 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 


ஹொங்கொங் நாட்டை சேர்ந்த றிஹாப்-ரொபபோடிக்ஸ் கம்பனி லிமிடெட் போன்ற பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்புக்கு அதியுயர் பரிசு வழங்கப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வில் இலங்கையை சேர்ந்த வைத்திய கலாநிதி, லெனாடோராவின் கண்டுபிடிப்பான நியுமெடிக் செல்ஃப் றிடெய்னிங் அப்டொபிமினல் றிடராக்ட்டர் (Pneumatic Self Retaining Abdominal Retractor) எனும் சாதனம், சிக்கலான வயிறு தொடர்பான சத்திர சிகிச்சைகளின் போது, டிசுக்களுக்கிடையில் சேதமற்ற வகையில், இழுவையை பேணும் வகையில் இந்த சாதனம் செயற்படவுள்ளது. அத்துடன் வயிறு சம்பந்தமான சத்திர சிகிச்சைகளின் போது இந்த சாதனத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் திசுக்கிளிடையே ஏற்படும் சிதைவுகளையும் குறைத்துக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்படும் அசௌகர்யங்களும் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது. 

றேடியஸ் மீற்றர் எனப்படும் அளவு சாதனமானது தினேஷ் கடுகம்பலவின் கண்டுபிடிப்பாக அமைந்திருந்தது. இந்த அளவியின் மூலம் பொறியியல் துறையில் வட்டங்களின் ஆரைகள் மற்றும் விட்டங்களை அளந்து கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. 

பொது மக்களுக்கு இந்த இரு கண்டுபிடிப்புகளும் பெருமளவு சிக்கல் நிறைந்த கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ள போதிலும், இவர்களின் கண்டுபிடிப்புகள் அவற்றின் செயல்படுதிறனை கருத்தில் கொண்டு விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. வைத்திய கலாநிதி லெனாடோராவின் குழுவினர் தமது தயாரிப்பு குறித்தும் தினேஷ் கடுகம்பலவின் கண்டுபிடிப்பு குறித்தும் விளக்கவுரைகளை விருந்தினர்களுக்கு வழங்கியிருந்தனர். 

இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் இந்த இரு கண்டுபிடிப்பாளர்களின் ஜெனிவா பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இவர்களின் திறமைகளை பாராட்டியுமுள்ளது. இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையத்தின் ஆணையாளர் நாயகம் தீபால் சூரியாராச்சி கருத்து தெரிவிக்கையில், "இத்துறையில் இலங்கையர்களுக்கு பூரண ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம். இது போன்ற உயர்ந்த அந்தஸ்துடைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது சாதனையாக கருதப்படும்பொழுது, அதில் பதக்கங்களை வெல்வது என்பது, இலங்கையை சர்வதேச விஞ்ஞான கண்டுபிடிப்பு சமூகத்தில் உள்வாங்கும் செயலாக அமைந்துள்ளது. வைத்திய கலாநிதி லெனடோரா மற்றும் தினேஷ் கடுகம்பல ஆகியோரின் கண்டுபிடிப்புகளின் மூலம் அவர்கள் எய்தியுள்ள உயர்ந்த நிலையானது, ஏனைய கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பட விளக்கம்:
தமது கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளை வென்ற வைத்திய கலாநிதி எஸ்.ஜே.பி. லினாடோரா மற்றும் தினேஷ் கடுகம்பல ஆகியோர் இலங்கைக்கு மீள வருகை தந்த போது,அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்

No comments:

Post a Comment