கனத்த மனதின் ஒரு பக்கம்
சிலசமயங்களில் வரும் கோபம்
தேடுவாரற்று கிடக்கும் ஊசிநூல்
மடிக்கப்படாத படுக்கை
கிழிக்கப்படாத கலண்டர் _எப்பவாவது
விரல்வெட்டி வரும் இரத்தம்
ஈரவிறகின் கண்ணெரிக்கும் புகை
தனியாக எனைக்கடக்கும் தாய்
இப்படியாக என்பொழுதுகள்
ஒவ்வொன்றாலும்
உணரப்படுகிறாய் நீ !
அழைத்தநினைவுகளை விட _உனை
உறுக்கிய உணர்வுகளே பகிரப்படாமல்
இறுக்குகின்றன இதயத்தை.
உன்னிடம்,
வலிக்காமல் வலிக்கிறது என்று
சொன்ன பொழுதுகளை
வலிக்கிறபோதில் நினைக்கதான் முடிகிறது.
சொன்னதை செய்யாமலும்
செய்வதை சொல்லாமலும்
குறைகளை மட்டும்
முறையிட்டவென் குரலில்
நிறைகள் மட்டும் கேட்கிறது
கேட்க நீயில்லாத இப்போதெல்லாம்,
கதைக்கவும் கதைகேட்கவும்
சலித்த கணங்கள்,
கூட்டிப்போகவும்
கூடவரவும் மறுத்த நிகழ்வுகள்,
கொட்டிய உணவுகள்
திட்டிய மணித்துளிகள்
அரிக்கின்றன இன்னுமிங்கு,
நெற்றியில் பார்த்த காச்சல்
நெஞ்சைதடவவைத்த இருமல்
வெற்றிலை வைத்த விசபரு
காலில்குத்திய முள் என
எல்லாம் என்னால் நடக்கின்றன _உனை
நினைவுறுத்தி கடக்கின்றன
தயக்கங்களோ
தளர்வுகளோ நானறிந்ததில்லை
நீயிருந்தவரை _இன்று
இயங்கவியலாசோர்வுடன்
இருத்தலை சுமக்கிறேன் _நீ
இருந்தநிலம் சேரப்பயந்து
அவலத்துடன் அலைகிறேன்
No comments:
Post a Comment