ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான றஊப் ஏ மஜீதின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பௌசி,
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவராக நடந்து கொண்டார். எனது பெயரை காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றுக்கு வைக்கப்பட்டது. எனது பெயரிலான அந்த வீதியின் பெயரை அவர் மாற்றியுள்ளார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு நான் பல தரப்பட்ட உதவிகளை செய்துள்ளேன். புதிய காத்தான்குடி தோணா கால்வாயை துப்பரவு செய்ய வேண்டும். இதனால் மாரிகாலத்தில் காத்தான்குடியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க முடியும் அதற்காக பணம் தாருங்கள் என நான் அனர்த்த முகாமத்துவ அமைச்சராக இருந்த போது என்னிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கேட்டார்.
நான் உடனே அதற்காக 9 இலட்சம் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தேன். இவ்வாறு பல உதவிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு நான் செய்திருந்தேன்.
இந்த நிலையிலேயே காத்தான்குடியில் வீதி ஒன்றுக்கு எனது பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீதியின் பெயரை தற்பொழுது மாற்றியுள்ளார்.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்காக எனது வீட்டில் ஒரு கலந்துரையாடலை நடாத்தி, முஸ்லிம் அமைச்சர்களிடம் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக கையொப்பம் பெற்று அதை ஜனாதிபதியிடம் கொண்டுபோய் நானே கொடுத்தேன்.
அக்கடிதத்தை கொடுத்து மூன்று தினங்களில் ஜனாதிபதியை சந்தித்த ஹிஸ்புல்லா நான் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை அமைச்சர் பௌசியே இந்த விவகாரத்தை ஏற்படுத்தினார் என்று ஹிஸ்புல்லா ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
இவ்வாறெல்லாம் அவருக்கு நான் உதவி செய்தேன் ஆனால் அவர் நன்றியுடன் நடந்துகொள்ளவில்லை, வீதிக்கு வைக்கப்பட்ட எனது பெயரையே மாற்றியுள்ளார்.
இன்று நான் சிரேஷ்ட அமைச்சராக இருக்கின்றேன். பௌசியிடம் எதுவுமில்லை, அவரிடம் போய் என்ன செய்ய என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நினைத்துக்கொண்டு, எனது நாமம் சூட்டப்பட்ட அந்த வீதியின் பெயரை அவர் மாற்றியிருக்கலாம்.
இவ்வாறானவர்களுக்கு உதவி செய்வதை விட எமது கட்சியின் அமைப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களையும் அதன் முக்கியஸ்தர்களையும் கௌரவப்படுத்த வேண்டும்.
கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இங்கு இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது இங்குள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் துணிந்து நின்று ஜனாதிபதிக்காக வாக்குகளை பெற்றுக்கொடுத்தனர்.
இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்க்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவ அட்டையை பெற்று இந்தக்கட்சியில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌஷி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் எம்.ஐ.உசனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எச்.முகம்மது, காத்தான்குடி முன்னாள் நகர சபை தலைவரும் முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவருமான மர்சூக் அகமது லெவ்வை, வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மத்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவப் பத்திரமும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment