Translate

Monday, 18 June 2012

மத்திய அரசின் முறையற்றா அணுகுமுறையால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து. வைகோ


மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை மத்திய அரசு முறையாக கையாண்டு, தீர்வு காணாவிடில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

 அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதிமுக 19-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:


 குடியரசுத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு வாக்கு உள்ளது. வேட்பாளர் குறித்த இறுதி நிலவரத்துக்கு பிறகு வாக்களிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

 இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு, சிங்களர் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள அரசின் இனப் படுகொலை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

 சுதந்திர தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும், தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. இதை மூடி மறைக்கவே, திமுக இப்போது டெசோ மாநாட்டை நடத்துகிறது.

 கேரள மாநில அரசு முல்லைப்பெரியாறு அணையை உடைக்கவும், பாம்பாற்றில் அணை கட்டவும் திட்டமிட்டு வருகிறது. பாம்பாற்றில் அணை கட்டப்பட்டால், கரூர் வரை விவசாயம், குடிதண்ணீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

 சிறுவாணி, பவானி ஆறுகளிலும் அணை கட்ட கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கோவையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். கேரள அரசின் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

 மாநிலங்களுக்கு இடையயான உரிமைப் பிரச்னைகளை மத்திய அரசு தீர்க்காவிடில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுவிடும் என்றார் அவர்.

No comments:

Post a Comment