Translate

Friday 22 June 2012

தென்னிலங்கையில் இந்த நிலமை என்றால் வடக்கு தமிழ் மக்களின் கதியை நினைக்கவே அச்சம் லக்ஷ்மன் கிரியல்ல கூறுகிறார்

lakshman_kiriella_
தென்னிலங்கையில் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடாவடித்தனங்களை பார்க்கும் போது வடக்கில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டு மக்களுக்கான பாதுகாப்புக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாதெனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

அம்பாந்தோட்டை கட்டுவன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஜூலம்பிட்டிய அமரே ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டவர் அவராக சரணடையும் வரை பொலிஸாரால் கைது செய்ய முடியாது போனமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமன்றி அவர் சிறைச்சாலைக்குச் சென்று சில கைதிகளையும் சந்தித்துள்ளார். இது எவ்வாறு நடந்தது அரசின் ஒத்துழைப்பின்றி நடக்கவே முடியாது.
அமரே போன்ற பாதாள உலகத்தினர்களை அரசு பாதுகாத்து வருவதன் நோக்கம் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் சில தேர்தல்களின் போது பயன்படுத்திக் கொள்வதற்கே என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.
நாட்டில் இன்று மக்களால் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது வடக்கில் என்ன நடக்கிறது என்று எண்ணிப்பார்க்கவே முடியாதுள்ளது. முழுநாட்டிலும் இன்று பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருப்பதாகத் தெரியவில்லை.  அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
சட்டத்தை நிலை நாட்ட முடியாத நிலைக்கு நீதிமன்றங்களும் தடுமாறுவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படத் தவறினால் நாட்டில் அராஜகம் தான் தலைவிரித்தாடும் எனவும் அவர் எச்சரித்தார்.

No comments:

Post a Comment