Translate

Wednesday 13 June 2012

தமிழர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் இனிதே நிறைவுற்ற மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்கள்


அனலை நிதிஸ் ச. குமாரன்
பிரித்தானியாவின் பிரித்தாழும் தந்திரங்களினால் பல லட்சம் மக்கள் உலகம் பூராகவும் மாண்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆசிய, ஆபிரிக்க மற்றும் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆதிக் குடிமக்களின் பொருளாதார, அரசியல், கலாச்சார விழுமியங்களை சிறிதளவேனும் அறியாமல் படையெடுத்து தமது சுய இலாபங்களுக்காக அந்நாடுகளைக் கைப்பற்றிய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் விளைவே பல்வேறு நாடுகளில் இடம்பெறும் இனப் பிரச்சினைகள்.பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானிய ஏகாதிபத்தியமே தனது இராஜ்ஜியத்தின் விரிவாக்கத்துக்கும் அபிவிரித்திக்கும் பிரித்தாழும் தந்திரத்தை கையாண்டது.
பிற இன மக்களைப் பற்றி சிறிதளவேனும் அறியாமல் வன்முறை மூலமாக அவர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி பல நாடுகளில் வாழும் மக்களின் அழிவுகளுக்கு காரணமாக இருந்தது பிரித்தானிய இராஜ்ஜியம். தமக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டம் என்கிற வகையிலேயே ஐரோப்பிய நாடுகள் தமது செயற்பாடுகளை செய்கின்றன.


பெயருக்கு பாராளுமன்ற ஜனநாயம் என்று கூறினாலும், மகாராணியாரே அதி உயர் அதிகாரங்களைக் கொண்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கிறார்கள் இங்கிலாந்து,கனடா, ஆஸ்திரேலியாஇ நியூசிலாந்த் மற்றும் பல காமன்வெல்த் நாடுகள்.
மகாராணியார் செல்லும் நாடுகள் அனைத்தும் இவருக்காகவும், இவருடைய குடும்பத்தினருக்காகவும் இறைக்கும் பணம் பல கோடிகள். இப்படியாக இவர்களை பூசிக்கும் பிரித்தானியா போன்ற நாடுகள் ஈராக்கின் சதாமை வசை பாடினார்கள். சதாமை அழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தினால் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உலக சட்டங்களை மதிக்காமல் அந்நாட்டின் மீது படையெடுத்தன.
மகாராணியாரின் பேரன் ஏதோ விமானப் படையில் வேலை செய்வதாக பேருக்காக கூறினாலும், இவரை பாதுகாக்க பல லட்சம் டாலர்கள் செலவிடப்படுகின்றன என்பதே உண்மை. சமூகம் பல்வேறு விதமான இன்னல்களைக் கடந்து இன்று உலகே சிறு கிராமமாக மாறியுள்ள இந்நிலையில்,மகாராணியார் வைர விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்.
இரண்டாம் எலிசபெத் பதவியேற்று அறுபது ஆண்டுகள் பூர்த்தி
பிரித்தானியாவின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று அறுபது ஆண்டுகள் பூர்த்தியடைவதை குறிக்கும் பொருட்டு வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளன. எலிசபெத் அவர்களின் வைர விழா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வுகள் ஜூன் 5-ஆம் நாளன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. லண்டனில் புனித போல் தேவாலயத்தில் நடந்த நன்றி கூறுவதற்கான திருப்பலி பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகளில்,அரச குடும்பத்தவர்களும், பிரித்தானிய மற்றும் வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும், இராணுவ தலைவர்களும் ஏனைய முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர். வைர விழா கொண்டாட்டங்கள் ஜூன்2-ஆம் திகதி தொடங்கி 5-ஆம் திகதி வரையில் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்த் போன்ற நாடுகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.
பிரித்தானியாவின் அரசியல் சாசன முறையின்படி பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவர் என்றாலும் நாட்டின் தலைவராகவும் தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு. 1926-ஆம் ஆண்டு பிறந்தவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. 1952-ஆம் ஆண்டு தனது தந்தை காலமான நிலையில் 26 வயதிலேயே நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். பிரிட்டனில் பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும் பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் மகாராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றி வருகிறார் என்று கூறுகிறார்கள் அரச முறைமையை விரும்பும் மக்கள்.
பிரித்தானியாவின் பல நகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேட்கொள்ளப்பட்டது. லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் மகாராணி குடும்பத்தாரோடு கலந்து கொண்டார். இங்கிலாந்தின் நீண்ட தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் நடந்தது.ஆயிரத்துக்கும் அதிகமான படகுகள் அணிவகுத்த இந்த ஊர்வலத்தில் மகாராணியும் ஒரு படகில் பயணித்ததுடன், நிகழ்வுகளை ஆனந்தத்துடன் கண்டுகளித்தார். முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபற்றிய பிரம்மாண்ட கச்சேரி நிகழ்வு பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே நடந்தது. இராணுவ அணிவகுப்புடன்கூடிய ஊர்வலத்தில் ராணியார் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.
குறித்த நிகழ்வுகள் நடைபெற்ற நான்கு நாட்களும் பிரித்தானியாவில் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு அனைத்து மக்களும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டன. ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக ஒட்டுமொத்த பிரித்தானியாவே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரித்தானியாவின் மக்கள் மகாராணியாரின் அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகும் நிகழ்வுகளை மேற்கொண்ட வேளையில், தமிழ் மக்களோ தமது போராட்டங்களை லண்டன் வீதிகளில் நடத்தினார்கள். வீதியோரமாக செல்லும் பல வேற்றின மக்களை கவரும் வண்ணம் ஈழத் தமிழர்களை அழித்த சிங்கள அரச தலைவரை வசைபாடி பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்தினார்கள்.
பிரித்தானியாவின் இரட்டை வேடம்
சிங்கள அரச படைகள் ஈழத் தமிழர்களை அழித்த போது ஏதோ தாம் தமிழர்களுக்கு உதவுவது போன்று நாடகங்களை மேற்கொண்ட பிரித்தானிய அரசு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்ததன் பின்னர் சிங்கள அரசுடன் நேசக்கரம் பேண ஆரம்பித்தது. யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இரண்டு முறை லண்டன் செல்ல பிரித்தானிய அரசு அனுமதித்தது. போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் சிங்கள அரசு தமிழர்களை பல்வேறு விதமான சித்திரவதைகளை செய்து கொண்டிருக்கிறது.
இவைகள் அனைத்துமே பிரித்தானியாவுக்கு நன்கே தெரியும். உலக நாடுகள் சிறிலங்கா அரசு போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைப் பிரச்சினைகளுக்காக பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறும் அதே வேளையில் சிங்கள அரசு பக்கசார்பற்ற விசாரணைக்கு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிற குரல் வலுத்துள்ள இந்நிலையில் மகாராணியாரின் வைர விழாவில் பங்குபற்ற மகாராணியாரினால் அழைக்கப்பட்டது தமிழ் மக்களை கொதிப்படைய வைத்தது.
லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட ராஜபக்சாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அவர் லண்டன் வந்தடைந்த நாளிலிருந்து அவர் நாட்டை விட்டு வெளியேறும் வரை அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் மற்றும் அவர் தங்கியிருந்த விடுதி முன்னும் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். தமிழ் மக்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதை அறிந்த சிங்கள அரசும் லண்டனில் வதியும் சிங்கள மக்களை வரவழைத்து மகிந்தாவுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்குமாறு வேண்டப்பட்டன.

தமிழ் மக்களின் போராட்டங்களின் காரணமாக காமன்வெல்த் நாடுகளின் பொருளாதார அமைப்பின் ஏற்பாட்டில் ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வு இறுதித் தருணத்தில் ரத்து செய்யப்பட்டது. காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் சார்பில் மகாராணியை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்துபசாரத்தில் ராஜபக்சாவும் கலந்து கொண்டார்.இந்நிலையில், விருந்துபசாரம் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் தலைமை அலுவலகமான மல்பரோ ஹவுஸ் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மல்பரோ ஹவுஸ் விருந்தில் பங்கேற்க சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் உள்ளிட்ட 70-க்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் தமிழர்களின் இந்த எதிர்ப்புப் பேரணியை பார்த்துச் சென்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விருந்தினர்கள் கடந்து சென்றபோது, “இலங்கை ஜனாதிபதி போர்க்குற்றவாளி என்ற முழக்கம் கடுமையாக எதிரொலித்தன என்று கூறுகிறார்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்.பிரதான வாயில் வழியாக ராஜபக்ச மல்பரோ ஹவுசில் நுழைந்த போது, அவரது வாகனத்தில் சிறிலங்காவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடி அகற்றப்பட்டது. மல்பரோ ஹவுசில் விருந்துபசாரத்தில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்றபோது, மகாராணியார் ராஜபக்சாவையும் கைலாகு கொடுத்து வரவேற்றதுடன் மதிய உணவில் கலந்து கொண்டதிலிருந்து பிரித்தானிய ஆதிக்க சக்திகள் இன்னும் திருந்தவில்லை என்பதனையே காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று அவர்களின் வாழ்வியலை சீரழித்த சிங்கள தேசத்தின் தலைவரான ராஜபக்சாவை மகாராணியாரின் வைர விழாவில் கலந்து கொள்ளச் செய்ததன் மூலமாக பிரித்தானியா மீண்டுமொரு மாபெரும் தவறை இளைத்துள்ளது. ஒரு நாடு இன்னொரு இறைமையுள்ள நாட்டுடன் பேசுவதென்பது வேறு, ஆனால் மகாராணியாரின் விழாவில் கலந்து கொள்ள மகிந்தாவை அழைத்தது மகாராணியாரே சிறிலங்கா அரசுக்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்கவே என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது.
பாராளுமன்ற அரசியலே மேலோங்கியுள்ளது என்று கருதியிருந்த இவ்வேளையில் மகாராணியாரின் வைர விழா செய்தி சொல்வதென்னவென்றால் இவர்களுடைய அதிகாரம் தற்போதும் மேலோங்கியே உள்ளது என்பதுதான். இரத்தம் படிந்த கரங்களை கைலாகு கொடுத்து வரவேற்ற மகாராணியார் தனக்குத் தானே புழுதி வாரி இறைத்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment