நாடு முழுவதும் சிங்களவர்களுக்கு சொந்தமானது’ என்று கடந்த வாரம் பி.பி.சி ஊடாக மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அறிவித்தல், இதுவரை காலமும் ‘இலங்கையர்’ என்ற வெற்...றுக் கோசத்தை தாங்கிப்பிடித்து வந்த பல தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சலசலப்பிற்கு ஆளாகிய தரப்பினரில் சிங்களத்திற்கு பரிவட்டம் கட்டும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் மட்டுமன்றி ‘இணக்க அரசியலின்’ பெயரில் சிங்களத்துடன் நீண்ட காலமாக ஒட்டி உறவாடும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் உள்ளடங்குகின்றன.
வாளேந்திய சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது அரசியல் ‘சாணக்கியத்தை’ வெளிப்படுத்திய சம்பந்தரும் இதில் உள்ளடங்குகின்றார். ஆனால் இவ்வாறான அறிவித்தல்களை சிங்களவர்கள் வெளியிடுவது இது முதற்தடவையன்று. இதே பாணியிலான அறிவித்தல்களை டட்லி சேனநாயக்கா தொடக்கம் சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த அனைத்துத் தலைவர்களும் வெளியிட்டதுண்டு.
சமாதானப் புறா என்று அன்று வர்ணிக்கப்பட்டவரும், இன்று தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவருமான சந்திரிகா அம்மையாரும் இதில் உள்ளடக்கம்: பொன்சேகாவும் இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவரல்ல. கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் கர்ணவழிப் புரளிகளிலிருந்தும், இதிகாசப் புனைவுகளிலிருந்தும் பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட மகாவம்சத்திலிருந்தே இக்கருத்துருவம் ஊற்றெடுக்கின்றது. இப்புனைவு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்தீவின் வரலாற்றை ஆய்வு செய்த மேலைத்தேய வரலாற்றாய்வாளர்களாலும், அரசறிவியலாளர்களாலும் அடியோடு நிராகரிக்கப்பட்ட பொழுதும், மகாவம்சப் புனைவை நியாயப்படுத்திய ‘பெருமை’ அன்றைய தமிழ் அரசியல்வாதிகளையும், வரலாற்று ஆசிரியர்களையுமே சார்ந்துள்ளது.
அநகாரிக்க தர்மபாலாவின் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட சிங்களவர்களின் ஆரியவம்ச மூலத்தை அன்றைய தமிழ் வரலாற்றாய்வாளர்கள் நிராகரித்திருந்தாலும்கூட, யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை எழுதும் பொழுது மகாவம்ச வழிநின்று விஜயனின் வருகை பற்றிய கட்டுக்கதையை நியாயப்படுத்துவதற்கும், அதே பாணியில் தமிழ் அரசர்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதற்கும் இவர்கள் தவறவில்லை.
இதில் முதன்மையானவராகத் திகழ்பவர் இராசநாயகம் முதலியார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் ஆட்சியில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட ‘யாழ்ப்பாண வைபவ மாலையை’ திரிவுபடுத்தி, சாதிய மூலாம்பூசி இவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு அடிப்படையில் சிங்களவர்களை ஈழத்தீவின் தொல்குடிகளாகவும், தமிழர்களை வந்தேறு குடிகளாகவும் சித்தரிக்கின்றது. இதேபோன்று மகாவம்சம் எழுதப்படுவத்கு முந்திய காலப்பகுதியிலிருந்து வன்னி, புத்தளம், தென்தமிழீழம் ஆகிய பிராந்தியங்களை ஆட்சி செய்த வன்னிச் சிற்றரசர்களை வெறும் ‘நாட்டதிகாரிகளாகவே’ இராசநாயக முதலியாரின் யாழ்ப்பாண வரலாறு வர்ணிக்கின்றது.
இதேபாணியிலேயே சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ போன்ற நூல்களும் அமைகின்றது. இதுவே கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழீழ தாயகம் தோறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதிலும், பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதிலும், அதற்கு மகாவம்ச கட்டுக்கதை நியாயங்களை சிங்களம் புனைவதற்கும் காலாக அமைந்துள்ளது.
மரத்தை வெட்டுவதற்கு உதவும் ‘கோடாரிக் காம்புகள்’ போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களின் வரலாற்றை சாதிய அடிப்படையில் எழுதிய இவர்களின் கைங்கரியம் இன்று ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பிற்கு பங்கம் விளைவிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. நகுலேச்சரம், திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் போன்ற தொன்மை வாய்ந்த சைவத் தலங்களை அண்டி பௌத்த விகாரைகளை நிறுவுவதில் சிங்களம் முனைப்புக் காட்டுவதன் நதிமூலமும், அண்மையில் மாதகலில் பௌத்த விகாரை நிறுவப்பட்டதன் ரிக்ஷிமூலமும் இவர்கள் எழுதிய கர்ணவழி ‘வரலாற்று’ நூல்களிலேயே உள்ளன.
ஆனால் இதே காலப்பகுதியில் ஈழத்தீவின் வரலாற்றுப் பின்னணி பற்றி எழுதிய சேர் ஐவர் ஜெனிங்க்ஸ் என்ற பிரித்தானிய சட்டவியல் தத்துவாசிரியர், ஈழத்தின் பூர்வீகக் குடிகளாகத் தமிழர்களே திகழ்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை தர்க்கீக ரீதியாக நிறுவியிருந்தார்: “எக்காலப் பகுதியில் இலங்கையில் தமிழர்கள் குடியேறத் தொடங்கினார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
ஆனால் பூகோள அடிப்படையில் பார்க்கும் பொழுது சிங்களவர்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் குடியேறினார்கள் என்று நாம் கூறும் வகையில் யாழ்ப்பாணத்திற்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் பருவ காலம் சாதகமாக அமையும் பொழுது தென்னிந்திய தமிழ் மீனவர்கள் தமது கட்டுமரங்களுடன் யாழ்ப்பாணத்தின் கரையை வந்தடைவது வழமையாக உள்ளது.
இந்த வகையில் பார்க்கும் பொழுது இலங்கையில் சிங்களவர்கள் குடியேறத் தொடங்குவதற்கு முன்னரே தமிழர்கள் குடியேறி விட்டார்கள் என்று கூறலாம். 1505ஆம் ஆண்டு இலங்கையை போர்த்துக்கேயர்கள் வந்தடைந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ் இராச்சியம் ஒன்றும், மேற்குக் கரையில் கோட்டையை (தற்பொழுது கொழும்பின் புறநகரில் உள்ளது) மையப்படுத்திய சிங்கள இராச்சியம் ஒன்றும், கண்டியின் மலைப் பகுதிகளை மையப்படுத்திய இன்னொரு சிங்கள இராச்சியமும் இயங்கின.
இந்தியாவில் இந்து மதத்தின் எழுச்சி காரணமாக தமிழ் மொழியில் இப்பொழுது சமஸ்கிருதத்தின் தாக்கம் காணப்பட்டாலும்கூட, இலங்கையில் பிராமணர்களின் செல்வாக்கு குறைவாகக் காணப்படுவதால் இந்தியாவை விட அங்கு தமிழ் மொழி கலப்படமின்றி தூய்மையாகப் பேசப்படுகின்றது.” இவ்வாறு ஈழத்தீவில் தமிழர்களின் பூர்வீக வரலாறு பற்றியும், ஈழத்தமிழர்களால் தமிழ் மொழி கலப்படமின்றி பேசப்பட்டமை குறித்தும் அன்று ஆதாரபூர்வமாக நிறுவிய ஜெனிங்க்ஸ் அவர்கள், பிற்காலத்தில் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது தமிழர்களின் அரசை அவர்களிடம் கையளிக்காது சிங்களவர்களிடம் பிரித்தானியா கையளித்துச் சென்ற வரலாற்றுத் தவறு பற்றிய தனது கவலையையும் வெளியிடத் தவறவில்லை.
இதுபற்றி 26.11.2007 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறியிருந்தார். இதில் வரலாற்று நகைமுரணாக ஒற்றையாட்சி அமைப்பின் அடிப்படையிலான இலங்கையின் சோல்பரி அரசியல் யாப்பை எழுதிய சட்டவியல் நிபுணர்களில் ஒருவராக ஜெனிங்க்ஸ் அவர்கள் விளங்கியதை நாம் இத்தருணத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
இதனையிட்டு தனது கவலையையும் பிற்காலத்தில் ஜெனிங்க்ஸ் வெளியிடத் தவறவில்லை! இளம் பிராயத்தில் இலங்கையில் தமிழர்கள் எவரையும் தான் கண்டதில்லை என்றும், தான் சந்தித்தவர்கள் அனைவரும் சிங்களவர்களே என்றும் இன்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ச கருத்து வெளியிட்டாலும், ஈழத்தீவில் தமிழர்களின் தொன்மையை நிலைநாட்டும் சேர் ஐவர் ஜெனிங்க்ஸ் போன்றவர்களின் வரலாற்றுப் பதிவுகளை கோத்தபாயவோ, அன்றி மகாவம்சத்திற்கு புத்துயிர் கொடுக்கும் ஏனைய சிங்கள இனவாதிகளோ மறுக்க முடியாது.
தமிழர்களுக்கும், சிங்களவர்களும் இடையிலான முரண்பாடு என்பது இருபதாம் நூற்றாண்டில் முகிழ்த்த ஓர் இனப்பிரச்சினை அன்று. மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்னரே இம்முரண்பாடு முற்றிவெடித்ததை தனது எழுத்துக்களில் ஜெனிங்க்ஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
எல்லாளன் - துட்டகாமினி போருடன் தொடங்கிய இந்த தமிழ் - சிங்கள முரண்பாடு 1815ஆம் ஆண்டில் ஈழத்தீவை ஆங்கிலேயர்கள் முழுமையாகக் கைப்பற்றும் வரை ஓயாது நிகழ்ந்தேறிய வண்ணம் இருந்துள்ளது. போர்த்துக்கேயர்களின் காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக விளங்கிய முதலாம் சங்கிலியனுக்கு எதிராகப் போர்த்துக்கேயர்களுடன் இணைந்து சிங்களவர்கள் சதிசெய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் வணிகர்களின் போர்வையில் யாழ்ப்பாணத்தில் அன்று தமது ஒற்றர்களாக இயங்கிய சிங்களவர்களை முதலாம் சங்கிலியன் தென்னிலங்கைக்கு நாடுகடத்தியதை போர்த்துக்கேயர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் பின்னர் 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான இரண்டாம் சங்கிலியனுக்கு எதிராக போர்த்துக்கேயர்கள் படையெடுத்த பொழுது, பிலிப் டீ ஒலிவேரா தலைமையிலான போர்த்துக்கேய கூலிப்படையில் சிங்களவர்கள் அங்கம் வகித்திருந்தார்கள்.
இதேபோன்று 1815ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னனான கண்ணுச்சாமியை ஆங்கிலேயேர்களிடம் காட்டிக் கொடுத்துத் தமது தமிழின விரோதப் போக்கையும், மகாவம்ச மனோபாவத்தையும் சிங்களவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை வேரோடு பிடுங்கியெறிவதில் சிங்களவர்கள் கங்கணம்கட்டி நின்றதை எல்லாளன் முதல் கண்ணுச்சாமி வரை தமிழ் அரசர்களுக்கு நேர்ந்த கதி தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
போராடினால் மட்டுமே சுதந்திரமாக வாழ முடியும் என்ற இம்மெய்யுண்மையை ஈழத்தமிழர்களுக்கு வரலாறு உணர்த்தி நிற்கும் அதேவேளை சிங்களவர்களுக்கும் இன்னொரு செய்தியைக் கூறுகின்றது. இதனை இன்று யுத்த வெற்றியின் மமதையில் திழைத்திருக்கும் கோத்தபாயவும், அவரது சகோதரர் மகிந்தரும் ஆணவத்தோடு அலட்சியம் செய்யலாம். அன்று துட்டகாமினியின் பேரனாக விளங்கிய உரோகணை சிற்றரசின் குறுநில மன்னனான கோத்தபாய என்ற மன்னனின் பெயரை வரித்திருப்பதால் இவ் ஆணவம் கோத்தபாய ராஜபக்சவைப் பீடித்திருக்கலாம்: அல்லது நவீன துட்டகாமினியாக தன்னைப் பாவனை செய்து கொள்வதால் இவ் எண்ணம் மகிந்தருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் வரலாறு சொல்லும் இந்த மெய்யுண்மையை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. எல்லாளனின் வீழ்ச்சியுடன் ஈழத்தில் தமிழர்களின் இருப்பு முடிவுக்கு வந்துவிடவில்லை. எல்லாளனுக்குப் பின்னர் சேனன், குத்திகன் என்ற இரண்டு தமிழ் மன்னர்கள் எழுச்சிக் கொண்டு சிங்களத்தை வெற்றிகொண்டார்கள்: ஈழத்தீவு முழுவதையும் ஆண்டார்கள். செண்பகப் பெருமாள் என்ற தமிழ்த் தளபதியை தனது புதல்வனாகத் தத்தெடுத்து கி.பி 1450ஆம் ஆண்டில் அவனது தலைமையில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமபாகு கைப்பற்றிய பொழுது தமிழர்களின் இராச்சியம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அன்று தந்திரோபாயமாக தமிழ் நாட்டிற்குப் பின்வாங்கிச் சென்ற யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் கனகசூரிய சிங்கையாரியன் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1467ஆம் ஆண்டு மீண்டும் படையோடு வந்து யாழ்ப்பாண இராச்சியத்தை மீட்டெடுத்தான்.
இன்று தமிழீழ தாயகத்தை சிங்களம் ஆக்கிரமித்து நின்றாலும் மீண்டும் ஈழத்தமிழனம் வீறுகொண்டெழுவதை தடுத்து நிறுத்த முடியாது என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும். 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இழந்துபோன தமிழீழ நடைமுறை அரசை மீண்டும் ஈழத்தமிழினம் வென்றெடுக்கும் காலம் நிச்சயம் கனிந்தே தீரும். சிங்களவர்களிடம் இழந்து போன யாழ்ப்பாண இராச்சியத்தை கனகசூரியன் மீட்டெடுத்த நிகழ்வை மீண்டும் இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறு நிச்சயம் பதிவு செய்தே தீரும்: அதற்கான காத்திருப்பே இப்பொழுது நடைபெறுகின்றது. இதுதான் சிங்களத்திற்கு வரலாறு இடித்துரைக்கும் செய்தி: ஈழத்தமிழர்களின் நம்பிக்கையும் இதில்தான் அடங்கியுள்ளது.
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment