இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம் அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்று வருகிறது. இருப்பினும் வடக்கில் வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு இன்னும் சவாலாகவே உள்ளது என ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுதப் போராட்டம் பற்றிய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அவர்களைப் பயன் படுத்துவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஐ.நா. பாதுகாப்புச்சபையால் முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதால் வெட்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சிறுவர்களைக் கொலை செய்தல், ஊனமாக்குதல், பாலியல் வன்முறையில் ஈடு படுதல், பாடசாலைகள் வைத்தியசாலைகளை தாக்குதல் என்பவற்றில் ஈடுபடும் தரப்பினர் பட்டியல் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே வெட்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் ஆகும்.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம் அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்றுவருகிறது. இருப்பினும் வடக்கில் வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு இன்னும் சவாலாகவே உள்ளது.
அங்கு பெருமளவு இராணுவப் பிரசன்னம் காணப்படுகிறது. சிவில் நிர்வாகம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசு இவற்றை முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
இதனுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் போது யுத்தத்துக்குப் பின்னரான முயற்சிகளுக்கு அது வலுசேர்ப்பதாக அமையும்.
ஒக்ரோபர் 2009இன் பின் சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் இணைத்த சம்பவங்கள் பற்றி அறியப்படவில்லை. இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படையில் சேர்க்கப்பட்ட 6905 பிள்ளைகளின் 1373 பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது.
இனியபாரதியின் படையில் சேர்க்கப்பட்டதாக அறியப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் படையில் சேர்க்கப்பட்ட 5 சிறுவர்கள் எங்குள்ளனர் என்பதும் தெரியாதுள்ளது.
2008ஆம் ஆண்டிலிருந்து மூன்று புனர்வாழ்வு நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இனியபாரதி ஆகியோருடன் இணைந்திருந்த பிள்ளைகளுக்குக் கல்வி, அரவணைப்பு, ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் குடும்பத்துடன் இணைந்ததற்கான உதவி என்பன வழங்கப்படுகின்றன.
இதுவரையில் 364 ஆண்கள், 230 பெண்கள் அடங்கலாக 12 18 வயதுக்கு உட்பட்ட 594 பிள்ளைகள் தமது புனர்வாழ்வு திட்டத்தைப் பூர்த்திசெய்து தமது குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர்.
இருப்பினும், முன்னர் ஆயுதக்குழுக்களுடன் இணைந்திருந்த பல பிள்ளைகள் இந்த ஒன்றிணைப்புத் திட்டத்தில் இணையவில்லை என தெரியவந்துள்ளது. இப்படியான சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் கண்காணிப்பு படையினர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
2009இல் வவுனியா அரச் அதிபரும் நன்னடத்தை மற்றும் சிறுவர் நலன் ஆணையாளரும் இணைந்து தனித்துப்போன சிறுவர்களுக்கெனக் குடும்பத்தை கண்டுபிடிக்கும் அலகொன்றை யுனிசெப் ஆதரவுடன் நிறுவினர். இதை எழுதும்போது குடும்பத்தை அல்லது பிள்ளையை தேடிப்பிடித்து தரும்படி 736 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இணைக்கப்பட்டவர்கள். இன்று வரை 139 சிறுவர்கள் கிடைத்த தரவுடன் ஒத்துப்போக காணப்பட்டு உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்த அலகுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 42பேர் தமது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்என்றுள்ளது.
No comments:
Post a Comment